Press "Enter" to skip to content

படக் களத்தில் குதித்த விஜயசாந்தி!

கோலிவிட்டிலும் டோலிவுட்டிலும் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் மீண்டும் 13 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.

கோலிவுட்டில் தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். நயன்தாராவும் வரிசையாக சோலோ படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

ஆனால் நயன்தாராவிற்கு முன் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி தனியாக சோலோ படங்களில் நடித்து ஹிட் கொடுத்த ஒரு நடிகை ! லேடி விஜயகாந்த் என்று அழைக்கப்பட்டவர் அவருக்கு தமிழ் சினிமாவில் இப்போதும் தனி இடம் இருக்கிறது.

வைஜெயந்தி ஐ.பி.எஸ் இந்த பெயரை சொன்னால் நினைவில் வருவது காக்கி உடையில் கம்பீரமாக நிற்கும் விஜயசாந்தி தான். ஒரு காலத்தில் கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்தான் விஜயசாந்தி. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் கொடி கட்டி பறந்தார்.

தமிழில் விஜயகாந்த் படங்களுக்கு நிகராக விஜயசாந்தி தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்து இருந்தார். அட போலீஸ் கெட்டப் மட்டுமில்லாமல் டபுள் ஆக்சன், கிராமத்து ரோல் என்றும் சில படங்களில் கலக்கி இருக்கிறார். ஒரே ஆண்டில் 18 படங்கள் கூட இவர் நடித்துள்ளார்.

ஆனால் இவர் தற்போது சினிமா உலகில் இருந்து விலகிவிட்டார். ஆந்திர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். முதலில் பாஜகவில் சேர்ந்த இவர் பின் அங்கிருந்து விலகி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இடையில் ஒரு வருடம் அரசியலில் ஓய்வு பெற்று அமைதியாக இருந்த விஜயசாந்தி கடந்த வருடம் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக செயல்பட தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இவர் பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் இப்போது மீண்டும் விஜயசாந்தி சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இருந்து தன்னுடைய போணியை தொடங்க இருக்கிறார். ஆம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் சரிலேரு நீக்கவேரு படம் மூலம் மீண்டும் இவர் சினிமாவிற்கு வருகிறார்.

சுமார் 13 வருடங்களுக்கு பின் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் தொடக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை அணில் ரவிபுடி இயக்குகிறார். ஆனால் இவர் அம்மா ரோலில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடைசியாக விஜயசாந்தி 2006ல் நாயுடம்மா படத்தில் நடித்தார்.

இன்னும் சில புதிய படங்களில் கமிட் ஆக விஜயசாந்தி திட்டமிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் இவர் நடிக்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் மீண்டும் நடிக்கும் அனுபவம்? பற்றி கூறுங்கள் என்றதும் அவர் இவ்வாறு கூறினார், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது பதட்டமாக இருந்தேன். இந்த 13 ஆண்டுகளில் சினிமா ரொம்பவே மாறி விட்டது. எனக்கு நிறைய வி‌ஷயங்கள் புதிதாக இருந்தன. கிட்டத்தட்ட பள்ளிக்கு முதல் நாள் செல்லும் குழந்தை போலவே உணர்ந்தேன். 2006-ம் ஆண்டு நாயுடம்மா என்ற படத்தில் கடைசியாக நடித்தேன்.

அதன் பின்னர் அரசியல் பணி, மக்கள் பணியில் முழுதாக ஈடுபட சென்று விட்டேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. இந்த படத்தின் இயக்குனர் சில ஆண்டுகளுக்கு முன்பே வேறு ஒரு படத்துக்காக கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால் இந்த கதையை கேட்டதும் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டது.

தேர்தலுக்கு பின்னர் நேரமும் கிடைத்ததால் ஒப்புக்கொண்டேன். மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுடன் நடித்து இருக்கிறேன். அவர் மகனுடன் தற்போது நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஒருமுறை அவருடன் நடித்துள்ளேன். அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.

உங்களுக்கு பின் லேடி சூப்பர் ஸ்டாராக எந்த நடிகையுமே வரவில்லையே? என்ற கேட்டதும், அப்போது எனக்கு கிடைத்த நல்ல இயக்குனர்கள் தான் இதற்கு காரணம். ஆனால் இன்று அந்த அளவுக்கு நல்ல டைரக்டர்களும் இல்லை. கதாநாயகியை மையப்படுத்தும் படங்களும் வருவது இல்லை. கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் தான் அதிகமாக வருகின்றன.

கதாநாயகியை மையப்படுத்தும் படங்களும் பெரும்பாலும் பேய் படங்களாக தான் இருக்கின்றன. ‘ராஜ மவுலி’ போன்ற மிக சில இயக்குனர்களே பெண்களுக்கான கதா பாத்திரங்களை சிறப்பாகவும் தனித்துவமாகவும் உருவாக்குகிறார்கள். டைரக்டர்கள் தான் லேடி சூப்பர் ஸ்டாரை உருவாக்க முடியும். அதற்கு கதாநாயகியை மையப்படுத்தும் கதைகள் வர வேண்டும்.

சினிமா துறையில் செக்ஸ் புகார்கள் அதிகரித்துள்ளதே? என்ற கேள்விக்கு இது எல்லா துறைகளிலுமே இருப்பதுதான். சினிமாவிலும் சில மோசமான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று கேட்கிறோம்.

ஆனால் யார் தண்டிப்பது? சட்டத்தை கையில் எடுக்க முடியுமா? பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களில் அரசு தான் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். அதுவரை பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் கமிட்டிகள் எல்லாமே பயன் இல்லாதவை தான்.

உங்களுக்கு அப்படி ஏதும் நடந்துள்ளதா? என்ற கேட்டதற்கு, இல்லை. அப்போது எல்லோருமே மிகவும் ஒழுக்கமானவராகவும் கட்டுப்பாடு உள்ளவர்களாகவும் இருந்தனர். சினிமாவில் கவனம் செலுத்தவே எங்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

சினிமாத்துறையே ஒரு குடும்பம் போல இருந்தது. சினிமா செட்டே ஒரு பள்ளி போலத் தான் இருக்கும். இப்போதுதான் இதுபோன்ற செய்திகளை கேள்விப்படுகிறோம். என் காலத்தில் இதுபோன்ற செய்தி கூட வந்தது இல்லை.

சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அடுத்து எதுவும் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவில் நடிப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அரசியலையும் மக்கள் பணியையும் கைவிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *