ஆர்ஆர்ஆர்’ படம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தின் பணிவு குறித்து இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று பொங்கல் அன்று வெளியாகிறது.
இது தொடர்பான ப்ரோமோ ஒன்றை அந்தத் தொலைக்காட்சி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ராஜமௌலி அஜித் குறித்த ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
”நான் அஜித்தை ஒருமுறை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் சந்தித்தேன். அவர் அங்கிருந்த ரெஸ்டாரன்ட் ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது என்னைப் பார்த்த அவர் இருக்கையிலிருந்து எழுந்து என்னை நோக்கி வந்து என்னிடம் நலம் விசாரித்தார். அதன் பிறகு என்னை அவரது டேபிளுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில் என்னுடைய மனைவி அந்த ரெஸ்டாரன்ட்டுக்குள் நுழைந்தபோது, நான் அவரைப் பார்த்துக் கையசைத்தேன். ‘அவர் உங்கள் மனைவியா?’ என்று என்னிடம் கேட்ட அஜித், என் மனைவியை நோக்கி எழுந்து சென்ற அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவருடைய பணிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும், அவர் தன்னுடைய ‘தல’ என்ற பட்டப்பெயரை துறந்து தன்னை அஜித் என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்”.
இவ்வாறு ராஜமௌலி கூறியுள்ளார்.