த்தூ… கோலிவுட்! த்தூ… டைரக்டர்ஸ்! த்தூ… நடிகர்கள்! சாபம் விடும் சமூகத்தள வாசிகள்!

Bad Girl என்ற தமிழ் சினிமா துறையின் தயாரிப்பு படத்தின் டீஸர் ஒன்று வெளியிடப்பட்டது. இதன் காட்சி, கதை அம்சம் இவை குறித்து சமூகத் தளத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பல்வேறு தரப்பினரும் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். பெண்களை கொச்சைப்படுத்தி, ஆண்களின் காம வெறிக்கு வடிகால் போல் காட்டும் திரைக் காட்சிகளால் சமூகத்தில் பெண்களுக்கு மேலும் மேலும் பாதுகாப்புக் குறைவு ஏற்படுகிறது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

முக்கியமாக பிராமண சமூகத்தின் பெண் குறித்து மிகக் கொச்சையான தரந்தாழ்ந்த காட்சிகளால் கொதித்துப் போயுள்ள ஆன்மிக ஹிந்து சமூகத்தினர், திராவிட மற்றும் மிஷனரிகளின் கைப்பாவைகளாகச் செயல்படும் தலித் இயக்க சித்தாந்தவாதிகளின் தரந்தாழ்ந்த சிந்தனை குறித்து எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் சமூகத் தளத்தில் பதிவு செய்த கருத்து பெரும் கவனம் பெற்றது. அந்தக் கருத்து…

சர்ச்சையாக வேண்டும் என்று திட்டமிட்டே இந்தப் படத்தின் டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பள்ளி மாணவிதான் கதாநாயகி. அவள் பார்வையில் அல்லது அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டப்பட்டதை எல்லாம் செய்யும் சுதந்திரமே சந்தோஷம் தருவது.

அப்படி சுதந்திரமாக தன் சந்தோஷத்திற்காக அவள் செய்ய விரும்பும் காரியங்கள் தன் உடலைக் கெடுக்கும் மது, சிகரெட், பலருடன் உடலுறவு, கெட்ட வார்த்தை பேசுவது போன்றவை.

அவள் பார்வையில் மாரல்ஸ், வேல்யூஸ், எத்திக்ஸ் என்று எதை சமூகம் சொன்னாலும், குடும்பம் சொன்னாலும் அதெல்லாம் பெண்ணை அடிமைப்படுத்தும் விஷயங்கள்!

இப்படியான பெண்கள் இந்தச் சமூகத்தில் இல்லையா? இருக்கிறார்கள்தான். எத்தனை சதவிகிதம்? அந்த புறக்கணிக்கப்பட வேண்டிய கூட்டத்தில் ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி சமூகத்தில் உருவாக்க நினைக்கும் புதிய கருத்தியல்தான் என்ன?

இப்படியான சிந்தனைகளுடன் இருக்கும் ஒரு பெண் எந்தச் சமூகத்திலும் இருக்க முடியுமே. குறிப்பிட்டு பிராமின்ஸ் குடும்பப் பின்னணி என்று காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இதன் இயக்குநர் ஒரு பெண். அவரின் மேடைப் பேச்சில் அத்தனை சிந்தனைக் குழப்பங்கள்.

நான் காட்டியுள்ள பெண்ணை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள அவசியமில்லை.

பெண்கள் புனிதர்களாக இருக்க அவசியமில்லை. மனிதர்களாக இருந்தால் போதும்.

ஒரு பெண் என்பவள் பத்தினியாக இருக்க வேண்டும், தாய்மை என்றால் போற்றத்தக்கது போன்ற சமூகம் உருவாக்கியுள்ள கருத்துக்கள் பெண்களுக்கு பிரெஷராக இருக்கிறது.

நான் இந்தப் படத்தை எடுத்தபோதும், எடிட் செய்தபோதுமே என் சிந்தனைக் கோணங்கள் மாறிக்கொண்டே இருந்தன. நான் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருப்பவள்.

இதெல்லாம்தான் ஃபெமினிசத்தின் டிக்‌ஷனரி என்று சொல்லவில்லை.

ஆன்களில் குறைபாடுள்ள கதாப்பாத்திரங்களை நிஜத்திலும், திரையிலும் நிறைய பார்த்திருக்கிறேன். இந்தக் கதாநாயகியும் குறைபாடுள்ளவள்தான். ஆனால் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அந்தப் புதிய இயக்குநருக்குதான் தன் சிந்தனையில் குழப்பங்கள் இருக்கின்றன. தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்குமா?

ஒரு படத்தைப் பார்த்துவிட்டு டேக் ஹோம் மெசேஜாக எதை எடுத்துக்கொள்ள வேண்டும்?

ஓட்டுப் போடவும், திருமணம் செய்யவுமே வயது தகுதி இல்லாத ஒரு குறைபாடுகள் கொண்ட பள்ளி மாணவியின் மூலம் என்ன கருத்தியல் சொல்வது நோக்கம்?

பெண்ணியம் குறித்து தமிழில் நச்சென்று பேசிய அவள் அப்படித்தான், சிறை, மனதில் உறுதி வேண்டும், நேர்கொண்ட பார்வை, இந்தியில் தப்பட் போன்ற படங்களை எல்லாம் இந்தப் புதுமுக இயக்குநர் பார்த்திருக்கிறாரா?

எது பெண்ணியம் என்று விவாதிக்கும், பேசும், வழிகாட்டும் நூற்றுக்கணக்கான தமிழ் படைப்புகளைப் படித்திருக்கிறாரா?

இந்தப் படத்தில் முடிவில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால்.. டீஸரின் நோக்கம் சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே.

அமரன், சூரரைப் போற்று போன்ற நிஜ மனிதர்களின் வாழ்க்கைப் படங்களில் கதாநாயகன் ஒரு பிராமின் என்று நேர்மையாகக் காட்டாத தமிழ் சினிமா..சர்ச்சைக்குரிய படங்களில் பிராமினை அடையாளப்படுத்தும் போக்கை நான் கண்டிக்கிறேன். 

பட்டுக்கோட்டை பிரபாகர்

பிராமணர்கள் போராட மாட்டார்கள். சண்டையிட மாட்டார்கள். வெட்டு குத்தை விட்டு விலகி இருப்பார்கள். கூடுமானவரை தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். இயன்றவரை நேர்மையைக் கடை பிடிப்பார்கள். ஆகவே அவர்கள் கையலாகாதவர்கள். வாய் செத்தவர்கள்.

அவர்களை வைத்து அதுவும் அவர்கள் வீட்டுப் பெண்களை வைத்து எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். எதிர்க்கவோ கேட்கவோ நாதியில்லை. இது பாலச்சந்தரால் தொடங்கி வைக்கப் பட்டது. இன்று வரை தொடருகிறது.

இதை சுட்டிக்காட்டிய உங்கள் நேர்மைக்கு ஒரு சல்யூட். அமரனில் அந்தப் பெண் கிறிஸ்துவர் என்று சொல்லலாம். ஆனால் நாட்டுக்காகப் போராடி உயிர் விட்டவர் பிராமணர் என்று தெரிவிக்கக் கூடாது. இது எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரியவில்லை. என்று, எழுத்தாளர் இந்துமதி இந்தக் கருத்துக்கு பதில் பதிவு செய்துள்ளார்.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply