அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அஜித்தின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வலிமை பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இதன் ட்ரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

‘வலிமை’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தேகங்களைத் தெரிவித்து வந்தனர். காரணம், தற்போது நாடு முழுவதும் கோவிட் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன.

தமிழக அரசும், கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 50 சத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படும் என்று தெரிவிக்கப் பட்டதால், ரசிகர்களே பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். வலிமை படமும் இதில் சிக்கிவிடுமே என்று அஜித் ரசிகர்கள் தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து படத் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படம் பொங்கலுக்கு முன்னதாக ஜன.13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவிட் தொற்று பரவல் காரணமாக வெளியிடப்படுவது ஒத்திவைக்கப் படுகிறது. சூழல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் தியேட்டர்களில் வெளியிடப்படும் .. என்று தெரிவித்துள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply

Trending