ரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்!

தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் தனுஷ், ராஜீஷா விஜயன் , யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்துள்ள மாரி செல்வராஜின் கர்ணன் இரு கிராமங்களுக்கு இடையே குறிப்பாக ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இடையே நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படம்.  வன்முறைதான் தீர்வு என்பதை வலியுறுத்திகிறது இந்த திரைப்படம்.

கதைக்களம் 1990 நடைபெறுவதாக கூறப்படுகிறது. என்றோ நடைபெற்ற மக்கள் மறந்த கசப்பான சம்பவங்களை தொழில்நுட்ப வசதிகளுடன் மீண்டும் கொண்டுவருவதால் என்ன மாற்றத்தை சமூகத்தில் கொண்டு வர முடியும் என்ற கேள்வி எழுகிறது.

இதிகாச கதாபாத்திரங்களை எதிர்மறையாக சித்தரிப்பது இதிலும் தொடர்கிறது. செஞ்சோற்றுக் கடன் ஆற்றிய கர்ணன், கதாநாயகன். காவல் அதிகாரி, ஆதிக்க சாதியின் பிரதிநிதி கண்ணபிரான் வில்லன். 

படத்தில் உருவத்துடன் வரும் தெய்வமாக மாறிய சிறுமி, கால்கள் கட்டப்பட்ட கழுதை , யானை, குதிரையை வளர்க்கும் சிறுவன் , கோழிக் குஞ்சுகளை தூக்கி செல்லும் கருடன்,  கிராம பெரியவர்களின் பெயர்கள், வானில் வீசப்படும் மீனை தாவி ஒரே வெட்டில் வெட்டி கத்தியை பரிசாக பெறுவது என பல சம்வங்கள் மகாபாரத்தை நினைவுக் கூர வைக்கின்றன. 

ஊர் பெரியவர் தூரியோதனன் (ஜி எம் குமார் ) அர்ஜூன் (யோகி பாபு)  என மகாபார பெயர்கள். ஆனால், காவல் துறை அதிகாரியான இரக்கமற்றவராக காட்டப்படும் நட்டி , கிராமத்தினரின்  இந்த பெயர்களை கிண்டலடிப்பது புகுத்தப்பட்டதாக தெரிகிறது. 

சாலையில் மத்தியில் இளம் சிறுமி காக்கை வலிப்பால் துடிக்கிறாள். இருபுறமும் செல்லும் வாகனங்கள்  அவளை கடந்து செல்கின்றன. ( தார்  சாலைக்கு அவள் எப்படி வந்தாள் என்பது தெரியவில்லை). இறுதியில் அவள் துடி துடித்து இறந்து காட்டுப் பேச்சி ஆகிறாள். நெல்லை பகுதிகளில் இதுபோல இறக்கும் பெண்கள் தெய்வங்களாக போற்றப்படுவார்கள்.  முதல் காட்சியில் முகம் மூடப்பட்டபு காவல் வாகனத்தில் தணுஷ்  போலீசாரின் அடி உதைகள், நீதிமன்றம், வழக்கு என காட்டப்படுகிறது. பிறகு பிளாஷ் பேக் ஆக நிகழ்வுகள் தொடர்கின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் வசிக்கும் பொடியன் குளம் ( கொடியன் குளம் மத கலவர  உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை களம்) அருகே ஆதிக்க சாதியினரின் மேலூர் கிராமம். பொடியன் குளத்தில் போக்குவரத்து வசதி கிடையாது. மேலூர் சென்றுதான் வெளியிடங்களுக்கு செல்லும் நிலை.

அதிகாரிகளிடம் விண்ணப்பித்தும் பயன் இல்லை. கர்ணன் (தனுஷ்) வீர ஆவேச ஹீரோ. அநீதி கண்டு பொங்கியெழும் சுபாவம். எப்போது லுங்கியில் வலம் வரும கதாபாத்திரம். ராணுவ பணிக்கு, நேர்காணலுக்கு கூட லுங்கியில்தான் செல்வார். இவரது வீரத்துக்கு  ஹீரோயின்  ராஜீஷா விஜயன் அடிமை. இவருக்கு கதையில் திரெளபதி என பெயர். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இவரது சகோதரன் யோகி பாபு முதலில் வில்லனாக சித்திரிக்கப்பட்டாலும், இறுதியில் கர்ணனை ஆதரிக்கிறார்.  அதே போன்று மலையாள நடிக்கையான ராஜீஷா  கதாபாபத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.  யோகி பாபு நகைச்சுவை நடிகராக இல்லாமல் முக்ககிய கதா பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷின் அக்கா பத்மினியாக வாக வரும் லட்சுமி பிரியா சந்திரமெளலி சிறப்பாக நடித்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமாக பல இடங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.  தனுஷ், ராஜிஷா முத்தக் காட்திகள் டாப் ஆங்கிள் மூலம் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் ராணுவத்துக்கு தேர்வு, மறுபக்கம் ஊரின் பிரச்னை. ராணுவத்ததுக்கு செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பி காவல்துறையினரை பந்தாடி , காவல் உயரதிகாரியை கொலை செய்கிறார் தனுஷ். தனுஷின் நண்பராக காட் பாதராக எமன் தாதா கதாபாத்திரத்தில் லால் நன்கு நடித்துள்ளார்.

இவரும், இளைஞர்களும் தனுஷின் போராட்டங்களுக்கு பக்க பலமாக நிற்கிறார்கள்.  பேருந்து நிறுத்தம், கல்லூரிக்கு  சேர்க்கைக்காக தந்தையுடன் செல்லும் பெண்ணை மேலூர் கிராமத்தினர் கேலி செய்வது, பொங்கியெழுந்து அவர்களை தாக்கும் தனுஷ் , காவல் நிலையத்தை சூறையாடி அங்கிருந்த கிராம பெரியவர்களை மீட்பது , இறுதியில் கிராமத்தை சூறையாடி காவல்துறையை எதிர்த்து உயரதிகாரியை சிறைபிடித்து சண்டையிட்டு கொல்லும் காட்சிகளில் தனுஷ் பரிமளிக்கிறார்.

கர்ப்பிணி பெண்ணுக்காக பேருந்தை நிறுத்தாத ஆத்திரத்தில் சிறுவன் கல்விட்டு எறிய பேருந்தை நிறுத்திய நடத்துநர், ஓட்டுநர் எமனை பிடித்து இழுத்து செல்கின்றனர். இதை தடுத்த , ஊர்மக்கள், தனுஷ்  உள்ளிட்டோர் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பேருந்தை அடித்து சேதப்படுத்துகின்றனர். காவர் துறையினர் கிராமத்துக்கு வர, பேருந்து உரிமையாளர் புகாரை திரும்ப பெறுவதாக கூறியும், காவல் துறையினர் ஊர் பெரிவர்களை காவர் நிலையத்துக்கு அழைத்து அவமதித்து தாக்கப்படுகின்றனர்.

ஊர் திரும்பாத அவர்களை தேடி வரும் தனுஷ் உள்ளிட்டோர் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி ஊர் பெரியவர்களை காயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு செல்கின்றனர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் கிராமத்துக்கே அழைத்து வருகின்றனர். 

மாவட்ட ஆட்சியருடன் வரும் போலீஸ் படை ஊருக்குள் புகுந்து ஆண், பெண், சிறுவர் பெரியவர் எந அனைவரையும் தாக்குகிறது. மனம் மாறி தனுஷ் குதிரையில் ஊர் திரும்பி ஒரே ஆளாக தாக்குகிறார். இவரது காட் பாதர் தீயிட்டு இறக்கிறார்.

பத்து  ஆண்டுக்கு விடுதலையாகி  ஊர் திரும்வதாக கதை செல்கிறது. இதற்குள் கிராமத்துக்கு மினி பேருந்து வசதி, பள்ளிகள் வந்து விட்டன. தனுஷின் சகோதரிக்கு திருமணம் ஆகிவிட்டது. இறுதிகாட்சியில் தனுஷ், ராஜீஷா திருமணம் என கதை முடிகிறது.  பல பெரியவர்கள் போலீசாரின் காட்டுமிரண்டி  தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக கூறி போட்டோக்களை காட்டுகிறார் இயக்குனர். 

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தனி பாணியில் கிராம மக்களையும் நடிக்க வைத்திருக்கிறார். வசனங்களை விட காட்சியாக்கத்தில், ஒளிப்பதிவில் இயக்குநர் கவனம் செலுத்தியுள்ளார்.

ஒளிப்பதிவாளரின் தேனி ஈஸ்வரன் கேமரா பல இடங்களில் பேசுகிறது. பச்சை பசேல் என்ற கிராமத்தை கழுகு பார்வையில் காட்டும் போது நாம் அங்கே இருப்பதை உணரலாம். பல இடங்களில் ஒளிப்பதிவு பேசப்படும். படத்துக்கு ஜீவநாடியாகவும் இருக்கும். 

சந்தோஷ் நாராயணின் நான்கு பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. அதுபோல செட்  நன்கு போடப்பட்டுள்ளது.  முதல் பாகத்தில் தொய்வு , இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பு என படம் செல்கிறது. பின்னணி இசை நன்குள்ளது.

== விமர்சனம்: டி.எஸ்.வெங்கடேசன்