நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியது. அதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்தது.
சட்டப்பேரவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நடிகர் விவேக் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் திரையுலகினராலும் திரைப்பட ரசிகர்களாலும் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்றவரும் தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும் சமூக சேவையாலும் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதிச் சடங்குகளில் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது!