ரெட்டச்சுழி, ஆண் தேவதை ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றுக்கு பிரபலங்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலர் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல் அலையின் போது பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குநர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா ஆகியோவை வைத்து ரெட்டச்சுழி என்ற படத்தை இயக்கியவர் இவர்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தாமிரா பிறந்தார்.
இவரது இயற்பெயர் தாவுத். மதுரை பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் படித்த தாமிரா, பொம்மை என்ற திரைப்பட இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
தொடர்ந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதையும், வசனமும் எழுதினார். இவர் 2010ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர், பாரதிராஜா நடிப்பில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தை இயக்கினார்.
தொடர்ந்து 2018 வெளியான ஆண் தேவதை என்ற படத்தையும் இயக்கியவரும் இவரே. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குநர் தாமிரா அசோக் பில்லர் அருகே உள்ள மாயா மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.