[prisna-google-website-translator]

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக்… கொரோனா பாதிப்பில் காலமானார்!

kalthoon thilak
kalthoon thilak

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (வயது 78) கொரோனாவால் சென்னையில் இன்று காலமானார்.

சென்னையில் வசித்து வந்த இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக இவர் மே 7 இன்று உயிரிழந்தார்.

05.04.1943 அன்று பிறந்தவர். கல்தூண் திலக் என்று அழைக்கப் பட்ட இவரது இயற்பெயர் திலக் ராஜ். திலக்ஜி என்று அன்பர்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். மேஜர் சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான ‘கல்தூண்’ படத்தில் சிவாஜிகணேசன் -கே.ஆர்.விஜயா தம்பதியரின் இரண்டு மகன்களில் ஒருவராக வந்து வில்லத்தனத்தின் உச்சமாக நடித்திருப்பவர் என்பது அப்படத்தைக் கண்டுகளித்தவர்களுக்கு நினைவுக்கு வரலாம்.

kalthoon1
kalthoon1

இவர் டைகர் தாத்தாச்சாரி, பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, வேலை கிடைச்சிருச்சு, அதிகாரி, கை நாட்டு, வெள்ளிக்கிழமை விரதம் [1974], ஆறிலிருந்து அறுபது வரை [1979] போன்ற 70 படங்களில் நடித்துள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரி.கே.பகவதியின் மகனாக இவர் நடித்திருப்பார். ரஜினிகாந்திடம் மிகக் கடுமையாக இவர் நடந்து கொள்ளும்போது ரஜினிகாந்தின் மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்படும்.

ஏவி.எம்.ஸ்டூடியோவில் உதவி எடிட்டராக பணியாற்றியவர். 24 படங்களுக்கு உதவி எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேல் திரைத்துறையில் இருந்தவர்.

kalthoon2
kalthoon2

இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்களில் துடுக்குத்தனம் நிறைந்த வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இவர் மேஜர் சுந்தரராஜனின் நாடக்குழுவில் நடித்து வந்தவர்.

கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ள இவர் பெரும்பாலும் வில்லத்தனம் கலந்த வேடங்களிலேயே நடித்துள்ளார். சினிமா தவிர்த்து சின்னத்திரை சீரியல்களிலும், டிவி ஒன்றில் பழைய பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கி வந்தார்.

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்ட அண்மைக் காலத்தில் மட்டும், தமிழ் சினிமாவில் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இன்று கல்தூண் திலக்ஜி மறைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply