[prisna-google-website-translator]

மக்கள் கலைஞர் மறைந்த தினம்.. இன்று!

jaishankar actor
jaishankar actor

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட், மக்கள் கலைஞர் என்றெல்லாம் புகழப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் மறைந்த தினம் இன்று!

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர், சங்கர் என்ற இயற்பெயர் கொண்டவர், திருநெல்வேலியில் பிறந்தவர். 1938 ஜூலை 12ல் பிறந்து 2000 ஜூன் 3இல் மறைந்தவர். இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், இவரது பெயருடன் ஜெய் என்று சேர்த்து ஜெய்சங்கர் ஆக்கி, வெற்றியுடன் உலா வர வைத்தார்.

jaishankar
jaishankar

கும்பகோணம் குடும்ப பூர்வீகம் என்றாலும், ஜெய்சங்கர் பிறந்தது திருநெல்வேலியில்! நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் தெரு என்பார்கள். யோகாம்பாள், சுப்பிரமணியன் ஐயர் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பு மயிலாப்பூர் பிஎஸ் மேல்நிலைப் பள்ளியில். சென்னை நியூகாலேஜில் கல்லூரிப் படிப்பு முடித்தார். பின்னர் சட்டம் படித்தார். ஆனால், சட்டத்துறையில் இறங்காமல், நடிப்பின் மீதுள்ள ஆசையினால் நாடகம், சினிமா என்று கலைத்துறையில் இறங்கிவிட்டார்.

jaishankar actor1
jaishankar actor1

1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும் காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.

jaishankar actor2
jaishankar actor2

இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்தன. இதன் காரணமாக இவர் ‘Friday hero’ (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

2000-ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார்.

எம்ஜிஆர்., சிவாஜி என இரு ஜாம்பவான்கள் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு வியாபார சந்தையை உருவாக்கி, மினிமம் கேரண்டி ஹீரோவாக வலம் வந்தவர்! சிறிய தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக இருந்தவர்! வங்கியில் வரவு வைக்கப்படாத நிறைய காசோலைகளுக்கு சொந்தக்காரர்.
சூட்டிங் ஸ்பாட்டில் அனைவருடனும் ஹாய் ஹலோ சொல்லி சகஜமாக பழகியவர். நிறைய தயாரிப்பாளர்களை வாழ வைத்தவர் என்பது இவருக்கு இருக்கும் நற்பெயர்! அவரது நினைவு நாள் இன்று..!

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply