பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஆபாச வீடியோ மோசடி வழக்கில் இப்போது ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ராஜ்குந்த்ரா போலீஸ் காவலில் இருக்கிறார். அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆபாச படங்கள் தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடமும் வாக்குமூலம் வாங்கிய போலீசார், அவர்களின் வீட்டையும் சோதனை செய்தனர். இந்த வழக்கில் தனக்கு எந்த வித தொடர்பும் கிடையாது என்று ராஜ் குந்த்ரா கூறி வருகிறார்.
இந்நிலையில் ராஜ் குந்த்ராவிடம் பணியாற்றிய நான்கு ஊழியர்கள் அவருக்கு எதிராக அப்ரூவராக மாறி சாட்சி அளிக்க முன் வந்துள்ளனர்.
அவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே போலீசாரிடம் ஆபாச வீடியோ தயாரிக்கப்பட்டது தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிவித்துள்ளனர்.
இதனால் ராஜ்குந்த்ராவிற்கு எதிரான பிடிமேலும் அதிகரித்துள்ளது.ராஜ் குந்த்ராவின் அலுவலகத்தைச் சோதனை செய்தபோது அங்கு ரகசிய அலமாரிகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதில் இருந்த பொருள்களையும், பைல்களையும் போலீசார் எடுத்து சென்றுள்ளனர். இந்த அலமாரிகளில் கிரிப்டோ கரன்சி ஆவணங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கணக்கில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டில் இருந்து ராஜ் குந்த்ராவிற்கு பணம் வந்திருப்பதால் அவர் மீது விரைவில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி இருவரும் இணைந்து வங்கி கணக்கு ஒன்று வைத்துள்ளனர். அந்த வங்கி கணக்கிற்கு வந்த பணம் குறித்த விபரங்களையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.
ஆபாச படங்களை ஹாட் ஷாட் என்ற செயலி தவிர மேலும் 3 அல்லது 4 ஆபாச பட செயலிகளிலும் படங்களை பதிவேற்றம் செய்வதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த செயலிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படங்கள் உள்ளிட்ட விவரங்கள், வேறு பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளதா என ஆய்வு செய்து கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஆபாச பட விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது, விசாரணையின்போது ஷில்பா ஷெட்டி கதறி அழுதார். அவர் தனக்கு தெரிந்தவற்றை வாக்குமூலமாக அளித்தார்.
அப்போது, ஹாட்ஷாட் செயலி பற்றி கேட்டபோது, அந்த செயலியில் எந்த விதமான படங்கள் இருந்தன என்பது பற்றி தெரியாது. அந்த விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
தன் கணவர் எடுத்தவை கவர்ச்சி படங்களே தவிர ஆபாச படங்கள் இல்லை என்றும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மாடல் அழகி கானாவசிஷ்டிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் இதுபற்றி அளித்த பேட்டியில், ஆபாச பட தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பட்டியல் அனைத்தையும் போலீசிடம் கூறுவேன்.
எனக்கு தெரிந்த அத்தனை விவரங்களையும் மறைக்காமல் தெரிவிப்பேன். குந்த்ரா யாரையும் கட்டாயப்படுத்தி ஆபாச படம் எடுக்கவில்லை. ஷெர்லின், பூணம் பாண்டே பொய் சொல்கின்றனர் என்றார்.
இதற்கிடையே, ராஜ் குந்த்ரா தன்னை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆபாச பட விவகாரத்தில் விசாரணைக்காக நேரில் வருமாறு அழைத்து விட்டு பிறகு ராஜ் குந்த்ராவை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது