கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார்.
இவர் சென்னை பனையூரிலுள்ள தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தார். ஆனால் காரணமே தெரியாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமார் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று குமார் தனது குடும்பத்தினருடன் விஜய்யை பார்ப்பதற்காக நீலாங்கரையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
விஜய் படப்பிடிப்புக்குச் சென்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே வீட்டிலிருந்த ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நீலாங்கரை காவல் நிலைய போலீஸார் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குமாரின் மனைவி வசந்தி பேசுகையில், “என் கணவர் குமாரை பணியிலிருந்து நீக்கி விட்டதால் நடிகர் விஜய் அளித்த வீட்டிலிருந்து உடனடியாக காலி செய்ய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வற்புறுத்தினர்.
இதுதொடர்பாக நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கேட்டு தெரிந்துகொள்ள வந்தோம். ஆனால் விஜய் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார்.
இதை அறிந்ததும் நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். ஆனால் விஜய் வீட்டு ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததால் எங்களை போலிஸ் ஜீப்பில் காவல் நிலையம் அழைத்து வந்து திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்” என்றார்.