எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கிளாசிக் நாவலை, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார்.
இதற்கான திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், குதிரை உள்ளிட்ட சில விலங்குகளை அதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், 80க்கும் மேற்பட்ட குதிரைகள் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. இதில், எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் கடந்த மாதம் 11ம் தேதி ஒரு குதிரை உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய விலங்குகள் நல வாரியம் உரிய விசாரணை நடத்துமாறு ஹைதராபாத் மாவட்ட ஆட்சியருக்கும், தெலுங்கானா விலங்குகள் நல வாரியத்திற்கும் கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், அப்துல்லாபுர் பேட் காவலர்கள், இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக குதிரை உயிரிழந்தது தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ அனுப்புபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.