[prisna-google-website-translator]

விடுதலை வேள்வியை கண் முன் பதிய வைத்த தேசபக்த நடிகர் எஸ்.வி. சுப்பையா!


Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

திரைப்படம் என்பது பலபேரின் கூட்டு உழைப்பு. அதில் கதாநாயன் முதல் ட்ராலி தள்ளும் சிறுவன் வரை அனைவரின் உழைப்பும் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டு தக்க சமயத்தில் திரைப்படம் திரையை தொட்டால்தான் அது முழு வெற்றியடையும். ஆனால் வெற்றி பெறும்போது அது நாயகன், நாயகி, இயக்குனர், இசையமைப்பாளர் என்று வெகு சிலரோடு மட்டும் இணைத்து பேசப்படும். அடுத்த கட்ட குணசித்திர நடிகர்களில் தொடங்கி அடிமட்டம் வரை ஒரு கேடயத்தோடு நின்று போகும். இது நடைமுறை.


ஆனால் அந்த குணச்சித்திர நடிகர்கள் இல்லாமல் படம் செய்ய முடியாது. இதை அனைவரும் உணர்ந்திருந்தாலும் இதையே வாழக்கையாக ஏற்றுக்கொண்டு இறுதி மூச்சு பயணித்தவர்கள் ஏராளம்.

அவ்வகையில் கடுமையான உழைப்பைக் கொடுத்தவர் என்றால் எஸ்.வி.சுப்பையாவைச் சொல்லலாம்

அந்நாளைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், பின்னாளில் திருநெல்வேலி மாவடத்திலும், தற்போது தென்காசி மாவட்டத்திலும் இருக்கும் செங்கோட்டை என்ற ஊர்தான் இவரது சொந்த ஊர். ஏற்கெனவே செங்கோட்டை ஊருக்குப் புகழ் சேர்த்தவராக ராஜபார்ட் நாடக நடிகர் எஸ்.ஜி. கிட்டப்பா புகழ் பெற்றிருந்தார். அந்த வழியில், அந்தக் காலத்து நாடக நடிகர் போலவே இவரும் செங்கோட்டை பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்து பணியாற்றி பின்னர் பால ஷண்முகானந்த சபா என்ற நாடகக் குழுவின் கவியின் கனவு என்ற நாடகத்தில் கவிஞராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி தன் திறமையை வெளிக்காட்டினார். அதன் பின் தான் இவருக்கு திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது.

1946இல் விஜயலட்சுமி என்ற படம். பிறகு அபிமன்யு படத்தில் சகுனி வேடம். இவர் நடிக்கும் படங்களில் இவருடைய கதாபாத்திரம் கதைக்கு வலுசேர்க்கும் வண்ணம் இவருடைய நடிப்பு இருக்கும். நேர்மறை மட்டும் அல்ல எதிர்மறையிலும் இவரது நடிப்பு பிரகாசிக்கும்.

அருமையான உடல் மொழி அதற்கு பல படங்களை உதாரணம் சொல்லலாம்.

ஆதிபராசக்தி என்ற படத்தில் அபிராமி பட்டர் வேடம். இவர் ஒருமுறை மன்னரிடம் பணிபுரியும்போது அமாவாசை நாளை பௌர்ணமி என்று சொல்லி விடுவார். உண்மையில் அன்று அமாவசை ( ஏதோ ஞாபக மறதியில் ) இவரோடு விளையாட நினைத்த மன்னன் நாளை வானில் நிலவு தோன்ற வேண்டும் இல்லயேல் உன் தலை தரையில் உருளும் என்பார். இவர் அம்மனை வேண்டுவார். அம்மன் உண்மையான பக்தனான இவரின் முன் தோன்றி ஒரு அமாவாசை தினத்தை பௌர்ணமியாக்க தனது காதில் உள்ள அணிகலனை கழற்றி வானில் வீச அது நிலவாகத் தோன்றியது என்று கதை

அதில் வெறிபிடித்த பக்தனாக இவர் நடித்த நடிப்பு அத்தகையதொரு ஈடுபாடுள்ள உடல்மொழி தமிழ் திரையுலகம் இதுவரை காணாதது. பிரமாதப் படுத்தி இருப்பார்.

கப்பலோட்டிய தமிழன் என்ற படத்தில் பாரதியாராக வருவார். பாரதியைப் பற்றிப் படித்த நமக்கு கண் முன் ஒரு உருவம் தோன்றுமே அதற்கு ஒரு துளிக்கூட பிசகாமல் இவர் பொருந்துவர்.

அவன் மகாகவியாக உருவெடுக்கும் முன் அவனை பித்தனாக சித்தரிப்பது உண்டு. அந்த பித்தனின் உடல் மொழியை இவர் வாங்கி அதகளம் பண்ணியிருப்பார். இதை பின்பற்றித்தான் பிற்காலத்தில் பாரதி வேடம் ஏற்ற சிவாஜி, கமல் ஆகியோர் நடித்தனர் என்று கூறுவதுண்டு.

சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பாலச்சந்தர் படத்தில் இவருக்கு மூன்று பெண்கள். இவர் ஒரு அலுவலக பணியில் இருந்து ஒய்வு பெற்று இருப்பார். வசதி இல்லாத நிலை. பெண்களை கரையேற்ற வேண்டும். ஆனால் வெகுளித்தனம் கொண்ட குணாதிசயத்தில் பல வாய்ப்புகள் தட்டி போகும் . இவரை பேசக்கூடாது என்று சொல்லி கட்டுப்படுத்தி வைத்திருப்பார்கள். ஒரு பெண்பார்க்கும் படலத்தில்..மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை சீர் செனத்தி என்று ஏகப்பட்ட கண்டிசன் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களை வழிக்குக் கொண்டு வர குடும்பமே கெஞ்சிக் கொண்டு இருக்கும். இவர் ஒரு மூன்று வார்த்தை பேசுகிறேன் பேசுகிறேன் என கெஞ்சிக் கொண்டு இருப்பார். சரி பேசுங்கள் என்று அனுமதி கொடுத்ததும் “வெளிய போங்கடா முண்டங்களா” என்று பேசி ஆட்டத்தை கலைப்பார் பாருங்கள்… இவர் நடிப்பு அந்தக் காட்சியில் அற்புதமான வெளிப்பாடு.

இதுபோல சிவாஜியோடு பல படங்கள் செய்து இருந்தார். மூன்று தெய்வங்கள் படத்தில் திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேருமடா என்ற பாடல் இடம் பெற்ற படம். எல்லாமே சிறப்பு.

சிவாஜி இவர் நடிப்பை பார்த்து இவர் மீது பெருமதிப்ப்பு வைத்து இருந்தார். இவர் தயாரித்த ஒரு படத்தில் நடிக்க ஒரு பைசா வாங்காமல் செய்து கொடுத்தார். எவ்வளவோ வற்புறுத்தியும் வாங்காததால் இவர் உணர்ச்சி வசப்பட்டு அடுத்த ஜென்மம் என்று இருந்தால் உங்கள் வீட்டு நாயாகப் பிறப்பேன் என்று கூறினாராம் அப்படியொரு நட்பு.

இவர் பெரிய பக்திமான். இப்படித்தான் வாழ வேண்டும் என மிகச்சிறந்த கொள்கைகளை கொண்டிருந்தவர். இரவு ஒன்பது மணிக்கு மேல் நடிக்க மாட்டார். வாசிப்பு பழக்கம் அதிகம் கொண்டிருத்த இவர் ஜெயகாந்தன் ரசிகர்.

சொந்தமாக விவசாயம் செய்து வந்தார். செங்குன்றம் என்ற இடத்தில இவரது வயல் இருந்தது . இவரது பொழுதுபோக்கு (படப்பிடிப்பு இல்லாத காலங்களில் ) விவசாயம். நடிப்புக் கல்லூரியில் உடல்மொழி பற்றி பாடம் எடுக்க இவர் நடிப்பை உதாரணம் காட்டலாம். அந்தளவு பெர்பெக்க்ஷன்.

அதேபோல குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு விருது ஏற்படுத்தி இவர் பெயரில் அளித்தால் நன்றாக இருக்கும். இதுதான் அவருக்கு செய்யும் பெரிய மரியாதையாகவும் இருக்கும்.

  • வேதாந்த தேசிகன் மணி



Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply