லவ் ஜிஹாத் பிரசாரப் படம் என்றும், நாட்டின் பெரும்பான்மை மதத்தையும் நம்பிக்கைகளையும் புண்படுத்தும் கருத்துப் படம் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவான நிலையில், அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
‘அன்னபூரணி’ திரைப்படம் குறித்தும், அதன் கதை அம்சம் குறித்தும் படம் எடுக்கப்பட்டு வந்த போதே தகவல்கள் வெளியாகி, சமூகத் தளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்தப் படத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று தணிக்கைத் துறைக்கு சிலர் வேண்டுகோளும் வைத்தனர். எனினும், இந்தப் படம் டிச.1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான அன்றிலிருந்தே கடும் விமர்சனத்தைப் பெற்றது. எனினும், தமிழகத்தில் இந்தப் படம் பெரும்பான்மை ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது.
நடிகை நயன்தாராவின் 75 ஆவது படம் என எதிர்பார்ப்புகளுடன் அன்னபூரணி படம் ரிலீஸ் ஆனது. இதில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கி இருந்தார்.
படம் வெளியான முதல் நாளில் இந்த படம் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து திரையரங்கு மூலமாக சுமார் 80 லட்சம் மட்டுமே தயாரிப்பாளர் தரப்பு வரவாக இந்தப் படம் கலெக்ஷன் காட்டியது. ஆனால் இந்தப் படத்துக்கு நயன்தாராவின் சம்பளம் 10 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. இதனால், படத்தின் நட்சத்திர நடிகைக்குக் கொடுத்த சம்பளத்தின் அளவு கூட படம் கலெக்சன் காட்டவில்லை, அதனால் தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
சமூகத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை விமர்சனம், மற்றும் சென்னையில் பெய்த பலத்த மழை போன்ற பல்வேறு காரணிகள் இதன் பின்னணியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதை அடுத்து இப்படம் டிச.29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஓடிடி.,யில் வெளியான பின்னர், இப்படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் வந்தது. மும்பையைச் சேர்ந்த சிவசேனா கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் ‘அன்னபூரணி’ திரைப்படம் இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை பிரசாரம் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை காவல் நிலையத்தில் இப்படத்திற்கு எதிராக புகாராளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து பலர் ‘அன்னபூரணி’ படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்து மதத்தை புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.