பிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக கேரளா மாநிலம் திருச்சூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெயச்சந்திரன் காலமானார்.
1944 மார்ச் 3 ல் தம்புரான் – சுபத்ரகுஞ்சம்மா தம்பதிக்கு 3வது மகனாக எர்ணாகுளத்தில் பிறந்தார். பிறகு இரிஞ்சாலக்குடா பகுதிக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவி, மகன், மகள் உள்ளனர்.
சிறு வயதிலேயே இசை மீதான ஆர்வத்தால், இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்டு செண்டா கருவி, மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1958 ல் மாநில பள்ளி இளைஞர் திருவிழாவில் நடந்த விழாவில் மிருதங்கம் வாசிப்பதில் முதல் பரிசையும், லைட் மியூசிக்கில் இரண்டாம் பரிசையும் வென்றார். இரிஞ்சாலக்குடா கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடலை கேட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சோபனா பரமேஸ்வரன் நாயர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் மலையாள திரைப்படத்தில் பாடும்படி அழைத்தனர். முதலில் மலையாள படங்களில் பாடல்களை பாடத் துவங்கி, பிறகு தனக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முழு நேர பாடகராக மாறினார்.
சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, கேரள அரசின் 5 திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜேசி டேனியல் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது என விருதுகள் பல பெற்றவர்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு & ஹிந்தி மொழிகளில் சுமார் 16,000 பாடல்கள் பாடியுள்ளார். மென்மையான குரலில் நினைவில் நிற்கும் பாடல்கள் பல பாடியுள்ள பாடகர் ஜெயச்சந்திரன் குரல் எப்போதும் ஒலித் கொண்டே இருக்கும்.
அவர் பாடிய பாடல்கள் தமிழகம் கொண்டாடிய பாடல்கள்.. மாஞ்சோலைக் கிளிதானோ.. கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு ” காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி கொடியிலே மல்லிகை பூ மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.. முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வெச்சேனே வெச்சதிப்போ காணாம நானே தேடுறேன்… இப்படி தமிழ்த் திரை வானில் தன் குரல் வளத்தால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்த பாடல்களைப் பாடியவர்.