
தேனிசைத் தென்றல் என்று போற்றப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. உடல்நலக்குறைவு காரணமாக இசையமைப்பாளர் தேவா தனது 75 வது வயதில் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மாட்டுக்கார மன்னர் என்ற படம் மூலம் 1986-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவா.
எளிய பின்னணியிலிருந்து வந்த தேவா, தமிழ்த் திரையுலகை இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், கானா பாடல்களை பிரபலமாக்கி, தனக்கென தனியிடத்தைப் பிடித்து இசை சாம்ராஜ்யம் நடத்தினார். அந்த வகையில் தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளர் தேவாவின் பங்களிப்பு மிகப்பெரியது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தேவா. தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்த சிறப்பு தேவாவுக்கு உண்டு. எளிய மக்களின் இசையான கானா இசையை திரையில் அறிமுகம் செய்தவர் தேவா.
மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989ம் ஆண்டு இசையமைப்பாளர் என்ற நிலையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட பல மொழிப் படங்களுக்கு இசையமைத்து, சாதனை படைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தவர் தேவா. குறிப்பாக ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு அறிமுக எழுத்துடன் கூடிய டைட்டில் இசை அமைத்து ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றார்.
தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் தேவா. தன் குரல் மற்றும் இசையினால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர். இவரது கானா பாடல்கள் இடம்பெற்ற படங்கள் பெருமளவில் வெற்றி பெற்றன. திரை ரசிகர்களால் அதிகம் முணுமுணுக்கப்படும் பாடல்களாகவும் வலம் வந்தன.
கடந்த ஆண்டு இதே காலத்தில் அவரது சகோதரர் சபேஷ் மறைந்தது அவரை மனதளவில் கடுமையாக பாதித்திருந்தது. சில நாள்களுக்கு முன்வரை திரைப்படங்கள், தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.
அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேவா, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





Leave a Reply