[prisna-google-website-translator]

தினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக!

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

86. சிறந்து விளங்குவாயாக! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“சமானானாம் உத்தம ஸ்லோகோSஸ்து“-வேத ஸ்வஸ்தி. 
“சமமானவர் அனைவரிலும் சிறந்தவனாக புகழ் பெறுவாயாக!” – வேத வாழ்த்து.

எந்தத் துறையாக இருந்தாலும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் வெற்றி பெற வேண்டும் என்றும் அனைவரும் விரும்புவர். ஒரு பாடகர் தன்னுடன் பாடுபவர்களை விட தான் சிறந்த பாடகராக வேண்டும் என்று விரும்புவார்.

ஒரு பொறியியலாளர் அந்தத் துறையில் நம்பர் ஒன்னாக வரவேண்டுமென்று முயற்சிப்பார். இவ்வாறு உயர்ந்த இடத்தை பெறுவாயாக என்று வாழ்த்துகிறது வேதம். ஆயின் வேதத்தின் உள்ளம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். 

நாம் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக தந்திரம் செய்து தேவையானால் அக்கிரம வழியிலாவது முன்னேறி விட வேண்டும் என்ற உற்சாகத்தை நம் கலாச்சாரம் அங்கீகரிப்பதில்லை.

சிறந்த மனிதனாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்து  அவ்வாறு வாழ்வதற்கான சாதனை இல்லாவிட்டால் அது குற்றமே! புகழுக்காக மட்டுமே செயல் புரியக் கூடாது என்று மனு தர்ம சாஸ்திரம் எச்சரிக்கிறது.

உயர்ந்த சிந்தனையும் சிறந்த நடத்தையும் மேற்கொண்டு அதன் மூலம் உத்தமனாக பெயர் வாங்க வேண்டும் என்பதே வேதத்தின் விருப்பம். தார்மிகமாக சிறந்து விளங்குவதற்கு முயற்சிக்க வேண்டும். அனைவரையும்விட தர்மத்தோடும் சிறப்போடும் வாழ்ந்து சாதனை படைப்பேன் என்ற தவிப்பு இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட தவத்திற்கு ஆசி வழங்குகிறது மேற்சொன்ன வேதவாக்கு. 

நம் பண்டைய நூல்களிலெல்லாம் இது போன்ற உயர்ந்த குணம் கொண்டவர்களையே தலைவனாகவும் ஆதர்சமாகவும் நிலை நிறுத்தினார்கள். உலகிற்கு நம்மை நல்லவர்களாகக் காண்பித்து நம் தீய குணங்களை நம்மில் மறைத்துக் கொள்வது சான்றோரின் குணமல்ல. நம்மை நாம் பரிசீலித்து கொண்டு தார்மீக வாழ்வு வாழ்வது முக்கியம்.

உலகியலாக ஒரு வியாபாரத்திலோ வேறு ஒரு திறமையிலோ நம்மை உயர்ந்தவராக காட்டிக்கொள்வது தேவைதான். நாம் வசிக்கும் இடத்தில் அவ்வாறு புகழ் பெற நினைப்பது இயல்புதான். அதை விட முக்கியம் நாம் வசிக்கும் இடத்தில் தார்மீகமானவராக, சான்றாண்மை மிக்கவராக நடந்துகொள்வது. உயர்ந்தவர் என்பதை விட நல்லவர் என்ற பெயர் எடுப்பது சிறந்தது.”சரிவாரலோன சௌகஜேயகு” 
என்று தியாகராஜர் கூட குறிப்பிடுகிறார். 

தற்போது எங்கு பார்த்தாலும் போட்டி மனப்பான்மை  மேலோங்கியுள்ளது. ஆதிக்கம், புகழ், அதிகாரம் போன்றவற்றுக்காக மாணவப் பருவத்திலிருந்து முதிய வயது  வரை பல்வேறு திட்டங்களுடன் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இத்தகைய போட்டி மனப்பான்மை என்ற பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் பல எழுந்துள்ளன. மீண்டும் அவற்றைக்கிடையேயும் போட்டிகள். 

இந்த நம்பர் ஒன் ஓட்டத்தில் நடக்கும் தகிடுதத்தங்கள் பலப்பல. தேவையானால் தேர்வுக்கான கேள்வித்தாளைக் கூட திருடி விற்கிறார்கள். அதற்கு உதவி செய்யும் அதிகாரிகளின் ஊழலுக்கும் குறைவில்லை. கல்வித் துறையில் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் இதே நிலைமை தென்படுகிறது.
வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால் ஆன்மீகத் துறையிலும் இந்த போட்டியும் வியாபார நோக்கும் வந்து சூழ்ந்து விட்டன.

சான்றோனாக வாழ வேண்டும் என்பதற்கு பதில் முதல் இடத்தில் நிற்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களின் பக்தி பாவனையை திசை திருப்பும் ஆன்மீக வியாபாரிகள் எங்கு பார்த்தாலும் கிளம்பிவிட்டார்கள்.

உலகியல் ஆடம்பரங்கள் துளியும் தேவையில்லாத ஆன்மீக க்ஷேத்திரங்களிலும் சர்வ சங்க பரித்யாகமே பரம தர்மம் என்று எண்ணும் துறவறத்திலும் கூட யாரிடம் பக்தர் கூட்டம் அதிகமாக உள்ளது என்ற ரீதியில் போட்டி போடும் பக்தி வியாபாரம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இனி உலகியல் விவகாரங்கள் குறித்துஎன்ன சொல்ல  இருக்கிறது! 

தார்மிகமான புகழை மட்டுமே சாதித்து அடையும் முயற்சியை வேதமாதா ஊக்குவிக்கிறாள். நற்செயல் செய்து அதன் மூலம் கிடைக்கும் தார்மீகமான கீர்த்திக்காக பொறாமை இல்லாத போட்டி இருக்க வேண்டியதே.

போட்டி என்பது நம்மில் மறைந்துள்ள சிறப்புத் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர சதியாலோசனைகளையும் தவறான வியூகங்களையும் தீட்டுவதற்கு உதவக்கூடாது. போட்டி என்பதன் சிறந்த வழிமுறை இதுவே.

நம்மோடு சமமானவர்களை விட நாம் சிறந்த புகழை சாதிப்பதற்கு தர்ம வழியில் போட்டியிடும் முயற்சி செய்யவேண்டும். இத்தகு மனப்பான்மை அனைவரிலும் ஏற்படும் போது அனைவரும் சிறந்த சான்றாண்மையோடு விளங்குவர். ஆரோக்கியமான அமைப்பாக தேசம் உருவாகும்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply