திட்டம் இரண்டு திரை விமர்சனம் |
By VANGA BLOGALAM … அனந்து
கனா , க.பெ.ரணசிங்கம் வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷை யின் மெயின்லீடாக வைத்து சீரியல் மற்றும் குறும்பட பிரபலம் விக்னேஷ் கார்த்திக் இயக்கி சோனிலிவ் ஓடிடி யில் நேரடியாக ரிலீஸ் ஆகியிருக்கும் தமிழ்ப்படம் திட்டம் இரண்டு . இவர்கள் இருவரும் இணைந்து தீட்டிய திட்டம் பலித்ததா ? பார்க்கலாம் …
இன்ஸ்பெக்டர் அ(ஆ)திரா ( ஐஸ்வர்யா ராஜேஷ் ) வுக்கு பேருந்து பயணத்தின் சக பிரயாணி அர்ஜுனை ( சுபாஷ் செல்வம் ) பிடித்துப் போக காதலிக்க ஆயத்தமாகிறார் இதற்கிடையில் தனது பால்ய தோழி சூர்யா காணாமல் போனதாக தகவல் வர கொஞ்சம் காதலை மறந்து விட்டு குறுக்கு விசாரணையில் இறங்குகிறார் . சூர்யா விபத்தில் இறந்ததாக அனைவரும் நம்ப அதிராவோ நம்பாமல் சூர்யாவின் கணவர் கிஷோர் , க்ளாஸ் மேட் என அனைவரிடமும் விசாரணையை தீவிரமாக்குகிறார் . இதில் அவர் ஜெயித்தாரா ? சூர்யாவுக்கு என்ன தான் ஆனது என்பதை சாவகாசமாக அதே நேரம் க்ளைமேக்ஸில் சவுக்கடியாக சொல்வதே திட்டம் இரண்டு …
ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு இன்ஸ்பெக்டராக பொருத்தமான வேடம் தான் ஆனால் படம் முழுவதும் ஒரே குழப்பமாகவே இருக்கிறார் . மப்டியிலேயே பெரும்பாலும் வருவதும் எந்த ஆக்சன் சீனும் இல்லாததும் இவரை மனம் இன்ஸ்பெக்டர் என்பதை நம்ப மறுக்கிறது . ஆனால் சென்டிமென்ட் காட்சிகளில் ஜொலிக்கிறார் . அமைதியாகவே வந்தாலும் குரூரமாக சிரிக்கும் இடங்களில் சபாஷ் வாங்குகிறார் சுபாஷ் செல்வம் .
சூர்யாவாக நடித்திருக்கும் அனன்யாவுக்கு கத்துவதை தவிர பெரிதாக வேலையில்லை இவர் கணவர் கிஷோர் கதாபாத்திரம் மெளனராகம் மோகனையே மிஞ்சும் படி இருக்கிறது …
ஒளிப்பதிவு , பிண்ணனி இசை படத்திற்கு பலம் . எடிட்டிங் ஐஸ்வர்யா போலவே சம்பந்தம் இல்லாமல் ஜம்ப் ஆகிறது . சமூக சிந்தனையுள்ள வித்தியாசமான கதை , சின்ன பட்ஜெட்டில் சிம்பிளாக எடுத்த விதம் , ஆச்சர்யப்படுத்தும் க்ளைமேக்ஸ் எல்லாமே திட்டம் இரண்டில் பலிக்கின்றன .
யார் கொலையாளி என்பதை சுத்தலில் விட்டாலும் மிகவும் சுவாரசியம் இல்லாத திரைக்கதை , பெரிதும் எடுபடாத மாற்றுத்திறனாளி ட்விஸ்ட், லாஜிக் சொதப்பல்கள் இவையெல்லாம் திட்டத்தில் பல்லிளிக்கின்றன . மொத்தத்தில் கதையாக நல்ல திட்டம் தீட்டிய இயக்குனர் திரைக்கதை வடிவத்தில் திட்டம் இரண்டை நன்றாக தீட்டாமல் விட்டு விட்டார் …
ரேட்டிங் : 2.75 *
இந்த விமர்சனத்தை யுடியூப்பில் காண…
- வாங்க ப்ளாகலாம் அனந்து