அண்ணாத்த… ரெண்டு நாளா சமூக ஊடகங்களில் பெரும்பாலும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டு வரும் திரைப்படம்
ரஜினி மீது என்ன தான் கோபம் எரிச்சல் இருந்தாலும் Dolphin அரங்கத்தில் தேனிசை தென்றல் தேவா அமைத்த ரஜினி பெயருக்கான Intromusic கேட்கும் போதே எல்லாம் மறைந்து உற்சாகம் மேலெழுகிறது என்ன வசியமோ அது இறைவன் சித்தம்
ஆறிலிருந்து அறுபது, முள்ளும்மலரும், போன்ற ரஜினியின் முந்தைய திரைப்படங்களில் இருந்து ரசிப்பவர்களுக்கு அண்ணாத்த ஒரு வரப்பிரசாதம்
ரஜினின்னா வெறும்மாஸ் மட்டுமேன்னு பழகி போன விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம்.
ஆனால் ரஜினி என்ற ஆளுமையின் மற்றொரு பரிமாணம். ஆனாலும் ஸ்டைலுக்கோ துள்ளலுக்கோ வசனத்திற்கோ அடிதடிக்கோ எந்த குறையும் இல்லை. என்ன சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கல். அதை ரஜினியிடம் சிலரால் பொருத்தி பார்க்க இயலவில்லை.
70வயது கடந்த மனிதனின் எனர்ஜிடிக் மூவி . இத்தனை வயதில் இப்படி ஓடியாடி ஸ்டைல் மாஸ் காட்ட யாரால் முடியும் ரஜினி ஆம் அற்புதம் தான்.
அறிமுக பாடலுக்கு நெற்றியில் திருநீறு பூசிய முகம் படமெங்கும் வேட்டி சட்டையோடு நெற்றியில் திருநீறு பூசி, தங்கையை பிரிந்து அவள் கர்பமானதும் விநாயகரை தேடி வழிபடுவது, தங்கை நெற்றியில் நயன்தாராவை திருநீறு பூச சொல்வது , அசுரனை வதம் செய்யும் கொல்கத்தா தூர்காபூஜா, கோவில் திருவிழா சடங்கு முறை சொல்லி வில்லனை வீழ்த்துவது , சாமியே துணையா இருக்கும்னு வசனம் பேசுவது இதெல்லாம் சிலருக்கு பிடிக்காமல் கூட எதிர்மறை விமர்சனங்களை கிளப்பலாம். காரணம் இன்றைய தமிழ் சினிமா கழுத்தில் சிலுவை போட்டவனை நல்லவனாகவும் விபூதி பூசியவனை வில்லனாகவும் காட்ட தவறுவதில்லை. அதை இதில் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் இருக்கலாம்.
குஷ்பு, மீனா சிறு குழந்தைகள் ஆட்டத்தில் உப்புக்கு சப்பாணி என்று சொல்வது போல் பத்து நிமிட ஆட்டம் பாட்டம். அவர்களுக்கு போட்டியாக பல பிரபலங்களின் குவியல்கள். ஆனாலும் ரஜினி, நயன் , கீர்த்தி மூன்று பேர் மட்டுமே படம் முழுக்க பயணிக்கிறார்கள்.
“சார சார காத்து” பாடல் ரஜினியின் இளமை துள்ளல் வயதை ஞாபகபடுத்த நம் கண்களை மறைக்கிறது.
ரஜினி அறிமுகம் ஆகும் காட்சியில் துவங்கும் இமானின் அதிரடி இறுதி வரை சரவெடி தான். பாடல்களுக்கு குறைவில்லை எண்ணிக்கையிலும் இனிமையிலும்.
நாம வாழும் போது எத்தனை பேரை சிரிக்க வைக்கிறோம் சாகும் போது எத்தனை பேரை அழவைக்கிறோம்னு படத்தில் ஆங்காங்கே ரஜினி பஞ்ச் டயலக்கை விரல் விட்டு எண்ணி நினைவிட முடியாது தேவையான இடத்தில் கருத்தாழம் கொண்ட வசனங்கள் பிரமாதம்
குணசித்திரங்கள் போல வில்லன்களும் வந்தார்கள் வாங்கினார்கள் சென்றார்கள்
அலட்டாத அம்சமான கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நயன்தாரா. கோர்ட்டில் பொளந்து கட்டும் “விதி” படத்துல சுஜாதா மாதிரி கற்பனை செஞ்சிடாத அளவுக்கு பரவாயில்லை ஒரு சீனில் கருப்பு கோட் போட்டு வராங்க.
கீர்த்தி படம் முழுவதும் அவரது கீர்த்தியே பேசுகிறது. அவருக்கு இவ்வோளோ நடிக்க தெரியுமான்னு நினைக்க தோனுது.
பொதுவா ஹீரோயிசம் படத்துல லாஜிக் பார்க்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதுவும் ரஜினி படம் கேட்கனுமா என்ன.?
ரஜினின்னா எப்போதுமே சிகெரட்டை மட்டுமே தூக்கி போட்டு பிடிக்கனுமா என்ன ? ஆண்டான் அடிமை மேல்வர்க்கம் கீழ்வர்க்கமன்னு சம்பந்தமே இல்லாம பேசனுமா என்ன? குடும்ப பாங்கா செண்டிமென்ட் எல்லாம் நடிக்கவே கூடாதா என்ன. ? நடிகனின் திறமை அதில் தான் பரிமளிக்கும்.
ரஜினியின் வயது, அனுபவம், சக நடிகர்களோடு பயணிக்கும் போது இனி இது போன்ற கதை களத்தை தேர்ந்தெடுப்பதே இனி சரியானது. ஆனாலும் முழுமையாக அவரை மாற்றினால் தோற்று விடுவோம் என்பதை உணர்ந்து அளவோடு கையாண்டிருக்கிறார் இயக்குநர் சிவா அற்புதம்.
இது அந்த படம் மாதிரி இருக்கு இது இந்த படம் மாதிரி இருக்குன்னா எது தான் எந்த படம் மாதிரி இல்லை. எல்லா படமுமே ஏதோ ஒரு படத்தை எங்காவது ஒரு இடத்தில் நமக்கு நினைவுட்டத்தான் செய்யும். பெரும்பாலும் எல்லா படத்துலயும் ஆடுறாங்க ஓடுறாங்க அழுறாங்க . இல்லாட்டி அது டாக்குமென்டரி பிலிமா தான் இருக்கும். அதுவும் குடும்ப கதையில் தங்கச்சிய தங்கச்சியா தானே காட்டமுடியும் தார்பாயாவா காட்ட முடியும்.
மொத்தத்துல எதிர்பர்ப்புகளை கடந்து யதார்த்த நடிகனாக அண்ணாத்த நம்ம குடும்பத்து மனுஷனா வலம் வருகிறார்.
- கா.குற்றாலநாதன், நெல்லை