வெற்றி மாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி எதார்த்த நாயகனாக கூடவே விஜய் சேதுபதி பவானி ஸ்ரீ நடிப்பில் இளையராஜா இசையில் வெளிவந்துள்ள படம் “விடுதலை”
ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையின் ஆன்மாவை மட்டும் எடுத்துக்கொண்டு, இரண்டு பாக சினிமாவுக்கான திரைக்கதையை எழுதி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன்.
அருமபுரி என்கிற மலையூரில் கனிமவளச் சுரங்கம் தோண்ட, பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறது அரசு. அங்குள்ள எளிய மக்களின் பின்னால் நின்று அதை ஆயுதம் தாங்கி எதிர்க்கிறது ‘மக்கள் படை’. அதன் தலைவர் பெருமாளை (விஜய் சேதுபதி) கைது செய்து, அக்குழுவை அழிக்க, 2 ஆயுதப் படை பிரிவு போலீஸார் முகாமிடுகின்றனர். அந்த முகாமுக்கு ஜீப் ஓட்டுநராக வரும் காவலர் குமரேசன் (சூரி), அப்பகுதியினர் மனதிலும் இடம்பிடிக்கிறார். காவல் படைக்கும் – மக்கள் படைக்கும் இடையிலான மோதல் முற்றி, அதுஅப்பாவி மக்கள் மீது திணிக்கப்படும் சித்திரவதை முகாமாக மாறுகிறது. பெருமாளை கைது செய்வதன் மூலமே அவர்களை மீட்க முடியும் என்றுநினைக்கும் குமரேசன், அதற்கான ஓட்டத்தில் பெருமாளைச் சந்தித்தாரா, இல்லையா என்பது முதல் பாகத்தின் கதை.
கனிமவளச் சுரண்டலின் வழி ஆதாயமடைய நினைக்கும்அதிகாரவர்க்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபவேட்டைக்கு எதிராக நிற்கும் மக்களையும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போராளிக் குழுக்களையும் கையாளும் அரச வன்முறை என்பது, பெரும் கதைக் களம் என்பதை, சமரசமற்றதிரைக்கதை வழியாகக் காட்டி, 2ம் பாகத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டும் முன்னோட்டக் காட்சிகளுடன் முடித்திருக்கிறார்.
அரசு, மக்கள், போராளிகள், போலீஸ் என ஒவ்வொரு தரப்பின் பக்கத்தையும் அப்படியே விரித்து வைக்கும் படம், யாரின் பக்கமும் சாயாமல் பயணிக்கிறது. ‘படத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் கதாபாத்திரங்களும் கற்பனையே’ என்று பொறுப்புத் துறப்பு அறிவிப்பு செய்தாலும், எந்த நிலைபாட்டையும் எடுக்காத திரைக்கதையின் இந்த அணுகுமுறை, பார்வையாளரை தமிழ்நாட்டின் சமூக வரலாற்றைத் தேட உந்தித் தள்ளுகிறது.
குமரேசன் – பெருமாள் ஆகிய 2 முதன்மைக் கதாபாத்திரங்களும் எத்தகைய சூழலில், கதையின் எந்தக் கட்டத்தில் சந்திக்கின்றன என்பதுதான்முதல் பாகத்தின் முக்கிய ‘சினிமேடிக்’ முத்தாய்ப்பு. குமரேசன் – தமிழரசி காதலை இவ்வளவு இயல்பாகச் சித்தரிக்க முடியுமா என்று சிலுசிலுக்க வைத்திருப்பது இன்னொரு ‘சினிமேடிக்’ தருணம்.
காவல் துறையின் மனித உரிமை மீறல்கள்,அதன் அதிகார அடுக்கில் நிகழும் ஒடுக்கு முறைஆகியவற்றைச் சித்தரித்த விதத்தில் தனது ‘விசாரணை’யை முந்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
நடிகர் சூரி, குமரேசனாக வந்து கவர்கிறார். துரத்தல் காட்சி ஒன்றிலும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பைக் கொடுத்திருக்கிறார். தமிழரசியாக பவானி ஸ்ரீ, மனதில் பதிகிறார். சேத்தனும் கவுதம் வாசுதேவ் மேனனும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்வதில் போட்டி போட்டிருக்கிறார்கள்
ரயில் விபத்துக் காட்சி ஒன்று, இதற்கு முன் இவ்வளவு அழுத்தமாகப் படம்பிடிக்கப்பட்டதில்லை. அதில் தொடங்கி, கதையின் களத்துக்குள் நம்மை பிரவேசிக்க வைத்து விடுகிறது வேல்ராஜின் கேமரா.
இந்தக் கதைக்கு இளையராஜாவின் இசையும் பாடல்களும் பொருத்தமாகவே இருக்கின்றன.போலீஸ் – போராளிக் குழு இடையிலான மோதல்,கதையில் முதன்மை பெற்றுள்ளதால் அதீத வன்முறை காட்சிகள் தவிர்க்க முடியாதவையாக இடம் பிடித்துள்ளன.
அதனால், பலகீனமானவர்கள், சிறார்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நலம்.மக்கள் பிரச்சினையை, அவர்களுக்கான அரசியலைப் பேசும் தரப்பை உள்ளடக்கிய ஒரு கதைக் களம், கொஞ்சம் தவறினாலும் பிரச்சாரமாக மாறிவிடும் ஆபத்தைச் சந்தித்துவிடும்.
அப்படி ஆகாமலிருக்க ‘சினிமேடிக்’ தருணங்களை உருவாக்கி, அதன் வழியே சினிமா அனுபவத்தைச் சாத்தியமாக்குவதுதான் சிறந்த இயக்குநரின் திரை ஆளுமையாக இருக்க முடியும். அதில் வெற்றிமாறன் தனது பெயரின் பொருளை இம்முறையும் நிலை நாட்டியிருக்கிறார்.