
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.
சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தொடக்க காலத்தில் சினிமா உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் அவர் திரையுலகில் நடிகராக வலம் வந்தார். மலையாள நடிகையான நந்தனா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனோஜ் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அண்மைக் காலமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட அவருக்கு சில வாரங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. அதன் பின்னர் உடல் நலம் தேறி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், மார்ச் 25 செவ்வாய்க் கிழமை இன்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
சினிமா இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்
கடந்த 1999ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகன் ஆகவும், பல்லவன், ஈர நிலம், மகா நடிகன், மாநாடு. அன்னக்கொடி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2022ம் ஆண்டு விருமன் என்ற படத்தில் நடித்து இருந்தார். மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார்.
மனோஜ் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.