
சினிமா ராமாயணம்: ஒரு பார்வை
தெலுங்கில்: டாக்டர். காகுனூரி சூர்யநாராயணமூர்த்தி
(பேராசிரியர், ஆன்மீக பேச்சாளர்)
தமிழில்: ராஜி ரகுநாதன்
(1967 ல் பிறந்த டாக்டர். காகுனூரி சூர்யநாராயண மூர்த்தி தெலுங்கு, ஜோதிடம், வணிகவியல் மூன்றிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘தெலுங்கு பண்டைய காவியங்கள்- உபன்யாச ராமகதை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். கல்லூரியில் தெலுங்கு பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். உபாக்கியான ராமகதை, காகுனூரி ராமாயணம், நம் கலாச்சாரம், யதார்த்த வால்மீகி ராமாயணம், ஹிந்து தெய்வங்களும் பிராசாதங்களும் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். பல்வேறு தொலைகாட்சி ஊடகங்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார். ஆயிரத்திற்கு மேல் ‘தர்ம சந்தேகம்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களின் ஐயகளைத் தீர்த்துள்ளார்).
சினிமா ராமாயணம்
ஆன்மீக விஷயங்களில் சற்று ஒரு அடி முன்வைத்து அறிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கும் எனக்கு, இந்த சினிமாவைப் பார்த்த போது, இது ராம கதை என்பதால் இதையும் ஆதரிக்க வேண்டும் என்று தோன்றியது.
ராமாயணத்தைக் காலத்திற்கேற்ப ஆயிரக்கணக்கானோர் அவரவர் சிந்தனையின்படி நம் முன் எடுத்து வருகிறார்கள். பலப்பல ராமாயணங்கள் வெளிவந்துள்ளன. வால்மீகி ராமாயணத்திற்குள் இன்னொரு ராமாயணம் உண்டு. லவனும், குசனும் கானம் செய்த ராமாயணம். பாகவதம், மகாபாரதம் போன்றவற்றிலும் ராமாயணம் கூறப்பட்டுள்ளது. ராமாயணத்தில் உத்தர ராமாயணம் ஒரு பிரத்யேகமான கதை. அது பவபூதியையும் ஈர்த்து அற்புதமான நாடகத்தை இயற்ற வைத்தது.
ராமாயணத்தை 2026 ல் நாம் பார்க்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. சினிமா ராமாயணம் வேறு. காவிய ராமாயணம் வேறு. சம்ஸ்கிருத ராமாயணங்களில் மூலமான வால்மீகி ராமாயணம் வேறு. இது சினிமா ராமாயணம். வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் உருவானதாகக் கூறப்படுகிறது. ராமாயணம் ஒரு அழகான காவியம். இதில் ராமனை தெய்வமாக நாம் பார்க்கிறோம். ஆனால் ராமரின் புதல்வர்களை நாம் பூஜிப்பதில்லை. ராமரை மட்டுமே வணங்குகிறோம் ராமரின் சகோதரர்களையும் நாம் பூஜிப்பதில்லை அவர்கள் படங்களில் இருந்தாலும் நம் இலக்கு சீதை, ராமர், அனுமன் மூவர் மட்டுமே. ராமரை தெய்வீக பாவனையில் வணங்குவது நம் மனதோடு தொடர்புடைய அம்சம். “ஸ்ரீ ராமஜெயம், ஸ்ரீ ராம ரக்ஷை, சர்வ ஜகத் ரட்சை” என்ற நம்பிக்கையோடு, மனிதன் பிறப்பு முதல் இறுதி யாத்திரையாகத் தோளில் சுமந்து செல்லும் போது “ராம நாம் சத்ய ஹை” என்று கூறும் வரை ராமர் நம்மோடு இருக்கிறார்.
ராமாயணம், பௌலஸ்திய (ராவண) வதம், சீதா சரிதம் போன்றவை இந்த காவியத்திற்கு உள்ள பெயர்கள். இதனை ‘ராவணாயணம்’ என்று சொன்னாலும் தவறில்லை. நம்மில் ராமரை உணர்ந்து, வாழ்க்கையில் நிரூபித்து ராமரின் வழியில் பயணிக்க வேண்டும் என்று அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.
நாடகத்தில் கதாநாயகன், வில்லன் இருவரும் இருக்க வேண்டும். ஹீரோவிடம் ஹீரோயிசம் வெளிப்பட வேண்டுமென்றால், அதே அளவு பலத்தோடு கூடிய எதிர்மறை கதாநாயாகன் தேவை. ஹீரோவின் இலக்கும், வில்லனின் இலக்கும் ஒன்றே. கதாநாயகியே. ஹீரோ காத்திருந்து ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவான். ஹீரோயின் ஹீரோவின் பக்கம் சாய்வாள். வில்லனுக்குக் கோபம் வரும். வில்லன் தன் வீரத்தை மூர்க்கமாகக் காட்ட முயற்சிப்பான். ஹீரோ, வில்லனை முடித்து விடுவான். உலகில் எந்த சினிமாக் கதையை எடுத்துக் கொண்டாலும், எத்தனை லட்சம் சினிமா கதைகளானாலும் இந்த முக்கோணத்தின் மீது நடப்பவையே. ஹீரோவும் வில்லனும் சமமான திறமையோடு இருப்பார்கள். ஹீரோவிடம் உயர்த்த குணங்கள் இருக்கும். அதைவிடக் குறித்த அளவு குணத்தோடும், அவசரத் தன்மையோடும் வில்லன் விளங்குவான்.
நமக்கு ராமாயணம் என்றவுடன் ராமராக என்.டி. ராமாராவ் கண்முன் வருவார். 1963 ல் வந்த லவகுசா சினிமாவில் காட்டப்பட்ட கதையிலும் தவறு உள்ளது. லவனும் குசனும் ராமரின் சபையில் கானம் பாடுவார்கள். சீதை பூமிக்குள் சென்று விடுவாள். இந்த சம்பவங்கள் அரச சபையில் நடக்கும், காட்டில் அல்ல. வால்மீகி ராமாயணத்தில் இல்லாததை லவகுசா சினிமாவில் காட்டியிருப்பார்கள். ஆனால் லவகுசா சினிமா என்றால் நமக்கு உயிர்.
இன்றுவரை 1963 கண்ணாடியைக் கழற்றி விட்டு வேறு ராமாயண முயற்சிகளைப் பார்க்க நம்மால் இயலவில்லை. அதுதான் இங்கு பிரச்சினை. 1963 முதல் 78 ல் வெளிவந்த ஸ்ரீராமபட்டாபிஷேகம் வரை நான்கைந்து சினிமாக்களில் என்.டி. ராமாரவ், ராமர் வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீராம ஜனனம் சினிமாவில் நாகேஸ்வரராவும் ராமராக நடித்துள்ளார். என்.டி. ராமாராவ் நடித்த லவகுசாவுக்கு முன்பே அதே பெயரில் 1934 ல் வெளிவந்த சினிமாவில் பருபல்லி சுப்பாராவ் ராமராக வேடமிட்டு நடித்துள்ளார். யடவல்லி சூரியநாராயணா போன்ற பலர் ராமராக வேடமிட்டு திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
ஆனாம் நம் கண்களில் சீதாதேவியாக அஞ்சலி தேவியும், ஸ்ரீராமராக என்.டி. ராமாராவும் நிலைபெற்று விட்டனர். அது அவர்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம். அழகான நடிகர்களும், அந்நாளைய டைரக்டர்களும், அன்றைய பார்வையாளர்களும், ரசிகர்களும் இதில் முக்கிய பங்கு வகித்தனர்.

ராமாராவ் நடித்த மல்லீஸ்வரி திரைப்படத்தில் இருக்கும் சென்டிமெண்ட் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அதன்பிறகு வெங்கடேஷ் நடித்த மல்லீஸ்வரி இந்தத் தலைமுறைக்குத் தொடர்புடையது. இந்த மல்லீஸ்வரிக்குப் புடவை கட்டத் தெரியாது. அன்றைய மல்லேஸ்வரிக்கு புடவைத் தலைப்பு சிறிது விலகியதால் மீண்டும் ஷூட்டிங் நடத்தப்பட்டது. அது அந்தக் காலக்கட்டத்தோடு தொடர்புடையது. ரசிகர்களின் விருப்பத்தைப் பொறுத்து திரைப்படங்கள் வந்து கொடிருக்கும்.
இந்த சினிமா ராமாயணத்தால் ஏற்படும் பயன் சிறப்பானது. இந்த தலைமுறைக்கு இந்த ஸ்டைலில் டைரக்டர் ராமாயணத்தைக் காட்டுகிறார். சினிமாவையும் பார்க்க வேண்டும். வால்மீகி ராமாயணமும் படிக்க வேண்டும். அப்போது எது சரி என்பது புரியும். ராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்ற ருசியை சினிமாக்கள் உண்டு பண்ணுகின்றன. யார் இந்த ராவணன்? இது என்ன கதை? கைகசி யார்? போன்ற கேள்விகளை எழுப்பி ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். இதன் மூலம் இளையதலைமுறை ராமாயணத்தோடு தம்மை இணைத்துக் கொள்ள முடியும்.
பிரம்மாவின் மானச புத்திரர் புலஸ்தியரின் மகன் விஸ்ரவசு. விஸ்ரவசுவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான தேவவர்ணினி, பரத்வாஜ முனிவரின் புதல்வி. இவர்களின் புதல்வன் வடக்கு திசைக்கு அதிபதியான வைஸ்ரவணன் என்ற குபேரன். பிரம்மாவால் இந்த பதவி அளிக்கப்பட்டது. இரண்டாவது மனைவியின் பெயர் கைகசி. கைகசிக்கு மூன்று புதல்வர்கள், ஒரு புதல்வி. விஸ்ரவசுவுக்கு ஒரு சகோதரன். அவர் பெயர் அகஸ்தியர். ஸ்ரீராமனுக்கு ஆதித்ய ஹிருதயம் போதித்ததும், வில் வழங்கியதும் இந்த அகஸ்தியரே. சீதா தேவிக்கு ஆபரணங்கள் அளித்தது இந்த அகஸ்தியரின் மனைவி லோபாமுத்திரை. இந்த அகஸ்தியர் காரணமாகவே ராமாயணம் நடக்கிறது.
கைகசி, தானும் குபேரனுக்கு இணையாக நல்ல பிள்ளைகளைப் பெற வேண்டும் என்று விரும்பி, விஸ்ரவசுவின் மேல் ஆசை கொண்டு அவனை மணந்தாள். கந்தர்வப் பெண்ணான கேதுமதிக்கும், அரக்கர் குலத் தலைவனான சுமாலிக்கும் பிறந்தவள் கைகசி. கைகசியின் சிறிய தந்தை மாலி, மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்டான். அந்த வருத்தம் அவளுக்கு இருந்தது. தன் தந்தை, தாத்தா, முப்பாட்டனார் என்று அனைவரையும் ஏன் இத்தனை கீழாக நடத்துகின்றனர்? எங்களை ஏன் ராட்சசர் என்று அழைக்கிறார்கள் என்று மனம் வருந்தினாள். இந்த இலங்கை எங்களுடையது. எங்கள் அப்பா சுமாலி, சித்தப்பா மாலி, பெரியப்பா மால்யவான் ஆகியோருக்காக விஸ்வகர்மா உருவாக்கிய நகரம் இலங்கை. இப்போது நாங்கள் ரசாதலத்திற்குச் (பாதாளம்) சென்று விட்டோமே என்ற வருத்தம் கைகசிக்கு இருந்தது. கைகசிக்கு ராகா, புஷ்போத்கடா என்ற இரண்டு மூத்த சகோதரிகளும், கும்பிநாசி என்ற தங்கையும் இருந்தனர். இவ்விதம் தம் குடும்பம் முழுவதும் வருந்துவதற்குத் தம்மை ராட்சசர்களாக ஒதுக்கியதே காரணம் என்று கருதினாள்.
தானவர்கள், ராட்சசர்கள், தைத்யர்கள் என்பவர்கள் யார்? அந்த வடிவங்கள் எப்படி உருவாகின? கஸ்யப பிரஜாபதியின் பதின்மூன்று மனைவியரில் ஒவ்வொரு மனைவிக்கும் பிறந்த பிள்ளைகள் இவர்கள். அதிதிக்குப் பிறந்தவர்கள் தேவர்களும் சூரியனும். திதிக்குப் பிறந்தவர்கள் தைத்யர்கள். தனுவுக்குப் பிறந்தவர்கள் தானவர்கள். தாம்ரா என்ற மனைவிக்குப் பிறந்தவை பறவைகளும் ஜடாயுவும். இதையெல்லாம் பார்க்கும்போது ராமாயணத்தின் கதை மிக அற்புதமானது என்று புரியும். உத்தர ராமாயணத்தில் இவையெல்லாம் உளளன. இது போன்ற கதையை இதுவரை யாரும் கூறவில்லை.
அசுர குலத்தில் ஹேதி, பிரஹேதி என்று இரு சகோதரர்கள் இருந்தனர். பிரஹேதி தவம் செய்யச் சென்றான். ஹேதி யமனின் சகோதரியான ‘பயா’ என்பவளை மணந்தான். அவர்களுக்குப் பிறந்தவன் வித்யுத்கேசன். அவனுடைய புதல்வன் சுகேசன். சுகேசனுக்கு மூன்று புதல்வர்கள். மால்யவான், சுமாலி, மாலி. இந்த விவரங்கள் எல்லாம் உத்தர ராமாயணத்தில் 7, 8, 9, 10 சர்க்கங்களில் உள்ளன.
ராமாயணத்தில் ராட்சசன் என்ற சொல்லுக்கு ஒரு அற்புதமான விளக்கம் உள்ளது. பிரம்மா நீரைப் படைத்து, தான் படைத்த புதல்வர்களிடம், “நீங்கள் நீரை எப்படிப் பார்க்கிறீர்கள்” என்று கேட்டார். அவர்களுள், “நீரை நாங்கள் பாதுகாப்போம்” என்று கூறியவர்கள் ராட்சசர் ஆனார்கள். “நீரைப் பூஜிப்போம்” என்று கூறியவர்கள் யக்ஷர் ஆனார்கள். செல்வத்துக்கு அதிபதியான குபேரன் யக்ஷ ஜாதியைச் சேர்ந்தவன்.

பட்டாபிஷேகம் ஆனபின் ராமன் அயோத்தியில் வசிக்கையில் மகரிஷிகள் நான்கு திசைகளில் இருந்தும் வந்து சேர்ந்தனர். அப்படி வந்தவர்களில் அகஸ்தியரிடம் ராமன், “முனிவரே, ஏன் இப்படி நடந்தது?” என்று கேட்டான். சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வனைத் தவறுதலாக ராவணன் கொன்றான். வேண்டுமென்று கொல்லவில்லை. காலகேயனோடு நடந்த போரில் அது நேர்ந்தது. அது ஒரு கதை. இது உத்தர ராமாயாணத்தில் உள்ளது. அரண்யகாண்டத்திலும் இந்தக் காட்சி விவரம் உள்ளது. பொதுவாக குடும்பங்களில் மனைவியின் சகோதரன் மேல் கணவனுக்கும், தங்கையின் கணவன் மேல் அண்ணனுக்கும் ஒரு அன்பன உறவு இருக்கும். இந்த இடத்தில் சினிமாவில் காட்டியது போன்ற அசட்டுத்தனமான காட்சிகள் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. அது உன்னதமான காவியம். ராமாயணம் என்ற உடன் நாம் இரு கை கூப்பி வணங்குகிறோம்.
அவ்வாறு கொன்றபின் இராவணன் தன் தங்கை சூர்ப்பனகையிடம், உனக்கு விருப்பமானவனோடு உனக்கு மணம் செய்து வைக்கிறேன் என்று வாக்களிக்கிறான். ராட்சச குணம் என்பதால் அப்படிக் கூறினான். முறம் போன்ற நகம் இருப்பதால் அவளுக்கு (சூர்ப்ப நகா) சூர்ப்பனகை என்று பெயர். சூர்ப்பம் என்றால் முறம். அவள் பெயர் சுப்பநாதி. ராட்சச குணம் கொண்டவர்கள் பெரிய நகம் வளர்த்துப் பிறருக்கு அச்சமூட்டுவார்கள். நம் வீடுகளில் கூட கோள் மூட்டி வம்பு வளர்ப்பவர்களை ‘சுப்பநாதி’ என்று திட்டுவதுண்டு.
ராவணன் சீதையை அபகரிப்பதற்காக இரண்டாவது முறை செய்த முயற்சியில் வெற்றி பெற்றான். முதல் முறை முயற்சித்த போது மாரீசன், சுகன், சாரணன் போன்றோர் தடுத்தனர். ராமனின் அசைவுகள் அப்போதைக்கப்போது சாரணர்கள் மூலம் ராவணனுக்குத் தெரிந்து கொண்டே இருந்தன.

இந்த சினிமாவில் ஒரு புது கோணம் உள்ளது. ராவணன் வேண்டுமென்றே எல்லா இனங்களையும் எடுத்துக் கூறி, மனித இனத்தை மட்டும் விட்டு விட்டு, மேற்சொன்ன யார் மூலமும் தனக்கு மரணம் நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இந்த வசனம் சினிமாவின் தொடக்கத்திலேயே உள்ளது. மனிதர்கள் அற்பர்கள். விஷ்ணு மனிதனாக அவதாரமெடுத்து வந்தால் நான் அவரை வதைப்பேன். நிரந்தரமாக எங்கள் இனத்திற்கு அவருடைய தொல்லை இருக்காது என்று எண்ணுகிறான். இது இந்த சினிமாவின் இயக்குனர் செய்த புதிய கற்பனை.
மக்களை ஈர்த்து, மூலக் கதையைப் படித்தறியத் தூண்டும் இது போன்ற சினிமாக்கள் வரவேண்டும். இந்த சினிமா வந்ததால்தான் எல்லோரும் ராமாயணத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள். 1987, 88 இரண்டு ஆண்டுகளில் 75 க்கும் மேற்பட்ட எபிசோடுகளில் ராமானந்த சாகரின் ராமாயணம் வந்தது. அதில் ராமராக நடிந்த அருண்கோவில் இதில் தசரதராக நடித்துள்ளார். தசரதனுக்கு மூன்று மனைவியர். அது தவிர முன்னூற்றைம்பது பேர் அர்த்தாங்கிகளாக இருந்தனர். ஆனால் தசரதர் யாரோடும் குடும்ப வாழ்க்கை நடத்தவில்லை. பிள்ளை பிறந்தால் ஸ்ரவண குமாரனின் முதிய பெற்றோர் கொடுத்த சாபத்தால் தலை வெடித்து இறக்க நேரும் என்பதால்.
பரதன், சத்ருக்னன் இருவருக்கும் அன்னையர் வேறு வேறு. இவர்கள் இருவரும் பரதனின் தாய்மாமன் வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் வசித்தனர். தந்தை இறக்கும் வரை அவர்கள் அயோத்திக்குத் திரும்பி வரவில்லை. ராஜ்ஜியம் ராமனுக்குச் சொந்தமானது. இவ்விஷயங்கள் எல்லாம் இன்றைய தலைமுறைக்குத் தெரியவேண்டும் என்றால் இது போன்ற சினிமாக்கள் வரவேண்டும். அனைவரும் பார்க்க வேண்டும்.
ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் சீதா தேவி கையில் வாள் பிடித்துப் போர் புரிவதாக இருப்பது. இதுபோல் வால்மீகியில் எங்கும் இல்லை. அதே போல் ராமன் பின்னாலிருந்து அம்பு விட்டுக் கொன்றதையும் ஏற்க முடியாது.

பிரபாஸின் ஆதிபுருஷ் சினிமாவில், ராவணன் ஒரு வௌவாலின் மேல் சீதையைத் தூக்கிச் செல்வான். இந்த சினிமாவில் புஷ்பக விமானத்தில் தூக்கிச் செல்கிறான். வால்மீகி ராமாயணத்தில் சீதையை ராவணன் புஷ்பக விமானத்தில் தூக்கிச் செல்லவில்லை. சீதையிடம் ராவணன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, அச்சத்தால் மயக்கமடைத்த சீதையைத் தூக்கி, கழுதை பூட்டிய ரதத்தில் ஏற்றிக் கொண்டு, காற்றில் பறந்து, ஜடாயுவோடு போரிடும் காட்சியைப் பார்க்கிறோம்.
தசரதர் தன் மருமகள் சீதைக்கு ஆபரணங்கள் கொடுப்பார். லட்சுமணன் சூர்ப்பனைகையின் காது, மூக்கை அறுத்தான் என்று நாம் சொல்லி வருகிறோம். சூர்ப்பனகைக்கு மட்டுமல்ல. அயோமுகி என்ற இன்னொரு ராட்சசப் பெண்ணின் காது, மூக்கையும் லட்சுமணன் அறுத்தான். அவனுக்கு இது பழக்கம் என்பது போல. ராமாயணத்தை விருப்பத்தோடு படிக்க வேண்டும் என்ற ஆசையை இந்த சினிமா ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறது.
எங்கள் வீட்டில் ஒரு சுந்தரகாண்டம் புத்தகம் உள்ளது. 1905 ல் பிரசுரமானது. அதில் இருக்கும் படங்களில், ராவணன், கும்பகர்ணன், அனுமன் போன்றோரின் ஆடை, அலங்காரங்கள் பிரிட்டிஷ்காரர்களைப் போலிருக்கும். அல்லூரி சீதாராமராஜு என்ற சினிமாவில் ரூதர்போர்டு எப்படிப்பட்ட ஆடை அணிந்திருப்பானோ, அதே போல் இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஓவியங்கள் இருக்கும். விபீஷணனுக்கு கோட், தொப்பி இருப்பது வியப்பை அளிக்கும். காலத்திற்கேற்ப ஓவியர்கள் படம் வரைவர். தயாரிப்பாளர் திரைப்படம் எடுப்பர். நாம் இதுபோன்ற சினிமாக்களைப் பார்த்தபின் மூலக்கதையின் மேல் விருப்பத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
சினிமா என்பதால் சிறிது சுதந்திரம் இருக்கும். VFX எஃபெக்ட்டோடு, 4000 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் சினிமா. 250 ரூபாய் டிக்கெட் வாங்கிக் பார்த்து விட்டுச் சிலர் கையில் சோஷியல் மீடியா, செல் இருக்கிறதே என்று இஷ்டத்திற்கு விமர்சிக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்தாற்போல் சினிமாவில் ராமாயணத்தை எடுக்க மாட்டார்கள். வால்மீகி ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு சினிமா எடுத்துள்ளோம் என்று தொடக்கத்தில் கூறியுள்ளார்கள்.
அதேபோல் சீதை, ராமனிடம் அப்படியெல்லாம் பேசுவாளா என்று சினிமாவைப் பார்த்து விமர்சிக்கின்றனர். சீதை அப்படிப் பேச மாட்டாள். இங்கு பேசுவது மாயா சீதா. அதனால் அப்படிப் பேசினாள். உண்மையான சீதா லட்சுமணனின் பின்னால் வந்தாள்.
வால்மீகி ராமாயணத்தில் லட்சுமண ரேகை கிடையாது. இந்த சினிமாவில் எனக்கு மகிழ்ச்சியளித்த அம்சம் என்னவென்றால், சினிமா பார்த்து விட்டு வந்தவர்கள் ராமாயணம் குறித்து விவாதிக்கிறார்கள். ராமாயணம் என்றால் என்ன என்று தேடுகிறார்கள். இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இந்த சினிமாவில் வால்மீகி கூறாத விஷயங்கள் உள்ளன. ‘மொல்ல’ ராமாயணத்திலேயே வால்மீகி கூறாதவை உள்ளன. ஆயிரக்கணக்காண செய்திகளை வால்மீகி கூறியிருக்கையில் பல ராமாயணங்கள் பிறந்துள்ளன.

தம் பிள்ளைகளுக்குச் சரியான ராமாயணத்தைப் பெரியோர் எடுத்துக் கூறவேண்டும். பிள்ளைகளோடு இந்த சினிமாவுக்குச் சென்று பார்த்து விட்டு வந்து, உண்மையான ராமாயணம் என்ன என்று கூறவேண்டும்.
சினிமா ஹீரோ அழகாக இருக்கிறார். அவர் சிகரெட் பிடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ராமாயணம் சினிமாவில் பிடிக்கவில்லை அல்லவா? வெளியில் தானே பிடிக்கிறார்? ராமர் வேடம் அணிந்த மனிதர் அப்படி இருக்கலாமா என்று சிலர் கேட்கின்றனர். என்.டி. ராமாராவும் அந்நாட்களில் சிகரெட் பிடித்தார். கிருஷ்ணராகவும், ராமராகவும் நடித்த அவருக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. கடவுளாக நடித்த பிறகு அந்தப் பழக்கம் தவறு என்று பிறர் எடுத்துச் சொல்லவே அந்தப் பழக்கத்தை விட்டு விட்டார். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. கதையைக் கதையாகவும், நடிகரை நடிகராகவும் பார்க்க வேண்டும்.
ஜென் ஜி, ஆல்ஃபா, பீட்டா ஜெனரேஷனில் இருக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ராமாயணம் சினிமாவில் இருக்கும் தவறுகளைக் கூறி, உண்மை எது என்பதையும் கூறவேண்டும்.
சினிமாவில் சீதை கத்தி பிடித்து யுத்தம் செய்வது தவறு என்று கூறும்போது, எது சரி என்று அறியும் ஆவல் இளைஞர்களுக்கு ஏறபடும். அதன் மூலம் அவர்கள் வால்மீகி ராமாயணத்தைப் படிப்பார்கள். விரைவில் ஒவ்வொரு ஹிந்துவும் நெற்றியில் பொட்டும், கையில் ராமாயணமும் வைத்திருப்பான்.
அடுத்த பத்தாண்டுகளில் கலாசாரம் மாறும். கணவன் மனைவி என்றால் ராமர் சீதை போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ‘எப்போதும் உனக்குத் துணையிருப்பேன் என்று கூறிவிட்டு, வனவாசத்திற்குத் தனியாகச் செல்வாயா? நானும் உடன் வருவேன்’ என்று சீதை கூறும் சொற்களை இளைய தலைமுறை கேட்டுப் புரிந்து கொள்ளும். இது போன்றவற்றுக்கு இந்த சினிமாவைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.





Leave a Reply