நடிகர் சாந்தனு தனது குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளப் பக்கங்களில் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என அனைவரும் ஆக்டிவாக உள்ளனர்.
இதனால், சினிமா துறையினர் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் பெயரைப் பயன்படுத்தி, அவர்கள் படத்தில் நடிப்பதற்காக அழைப்பு விடுத்து பின்னர் அவர்களிடம் மோசடியில் ஈடுபடுவது நடந்து வருகிறது.
சமீத்பத்தில் குஷ்பு மற்றும் பார்த்திபன் பேஸ் புக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதுபற்றி அவ்வப்போது சில நடிகர்கள், இயக்குநர்கள் சமூக வலைதளங்களில் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரான சாத்தனு பாக்யராஜ், தனது குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எங்கள் குடும்பத்துக்கு வேண்டியவர் என்றும் எங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்தியும் திரையுலக நண்பர்களுக்கு அழைப்புகள் வருவதாக அறிந்தேன். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தயவு செய்து அதை ஊக்குவிக்க வேண்டாம். இது தொடர்பாக எந்த விளக்கத்துக்கும் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதோடு போலி அழைப்பு வந்த எண்ணின் ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ், அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். ரொமான்டிக் கமர்சியல் படமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருந்தார். நடிகர் சாந்தனு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராவண கோட்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலிஸாக உள்ளது. இதில் சாந்தனு பாக்யராஜூவுக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ளார்.