[prisna-google-website-translator]

மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி!

rajinikanth

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடான சூழலை அடுத்து, மேல் சிகிச்சை பெற நடிகர் ரஜினி காந்த் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப் படுகிறது.

ரசிகர்கள், தமிழகத்தின் ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட பலரின் பெருத்த எதிர்பார்ப்பால், ரஜினி தாம் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வுள்ளதாகக் கூறியிருந்தார். இடையில் அவரது உடல் நிலை குறித்து ஒரு மருத்துவ அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலை எங்கும் வெளியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட உகந்த நிலையில் இல்லை என்றும், வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதை அடுத்து, ரஜினி அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்று ஊகங்கள் உலாவின. ஆனால், எப்படியும் சூழல்களை உத்தேசித்து டிச.31ம் தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பேன் என்று உறுதி அளித்தார் ரஜினி.

இந்த இடைப்பட்ட நேரத்தில், தாம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுப்பதற்காக இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும், அதற்காக படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனிடம் பேசியிருப்பதாகவும் கூறினார்.

இடையில், தனது பிறந்த நாளை ஒட்டி வீட்டின் முன் ரசிகர்கள் யாரும் வரவேண்டாம், கொரோனா கால கட்டுப்பாடுகளைக் கடைபிடியுங்கள் என்று கூறிவிட்டு, ஹைதராபாதில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினி உள்ளிட்டோருக்கு பரிசோதனை நடந்ததில், ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது. எனினும், அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.

பின்னர் சென்னை திரும்பிய ரஜினி, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, கட்சி அரசியலுக்கு தாம் வரப் போவதில்லை என்று கூறினார் ரஜினி. அதற்காக தன்னை அனைவரும் மன்னித்து விடும்படி கேட்டுக் கொண்டார்.

அவர் அரசியலுக்கு வராவிட்டாலும், அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், பிப்ரவரி மாதம் இறுதிக் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க சன்பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

ரஜினி ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். எனவே தற்போதைய உடல் நிலையைக் கருதி, மேல் சிகிச்சை பெறுவது அவசியம் என்பதால், அடுத்த சில நாட்களில் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். தற்போது மாறுபாடடைந்த கொரோனாவின் தாக்கம் உலகம் முழுதும் பரவி வரும் நிலையில், அவர் அமெரிக்காவுக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றும், அனேகமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply