நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவராகவுமுள்ள நடிகர் விஷால் அரசியல் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார்! கடந்த முறை நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் கடைசிக் கட்டத்தில் அது இயலாமல் போனது. இருப்பினும் தாம் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்
நடிகர் சங்க அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த விஷால் இப்போது தேர்தல் அரசியலுக்கும் தயாராகிவிட்டார் என்று கூறப்படுகிறது! ஏற்கெனவே தமிழக பாஜகவில் நடிகைகள் சிலர் தஞ்சம் அடைந்திருக்க இப்போது நடிகர்களையும் வளைத்துப் பிடிக்கும் வேலையில் பாஜக தலைமை ஈடுபட்டிருப்பதாக சமூகத் தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
நடிகர் விஷாலும் தமிழக பாஜகவின் முயற்சியில் விழுந்துள்ளதாகவும் விரைவில் அவர் பாஜக தலைவர் முருகனை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன
தமிழக பாஜக.,வை பலப்படுத்தும் வகையில் ஏற்கனவே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இணைந்துள்ளார். மேலும் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளை தமிழக பாஜக விரைவில் கட்சிக்குள் கொண்டு வரும் என்று கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில், விஷால் பாஜக., பக்கம் வருவார் என்று கூறப்படுகிறது.
எனினும் நான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்று, வழக்கம்போல், நடிகர் விஷால் கூறியுள்ளார்.