800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளார். முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி நன்றி… வணக்கம்… என விஜய்சேதுபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, “800” என்ற படம் திட்டமிடப் பட்டது. இந்த படத்தில் முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதி, தமிழர் அமைப்புகள் சில மூலம் அவருக்குக் கொடுக்கப் பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அவர் வேண்டுமானால் விலகிக் கொள்ளலாம் என முரளிதரன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழரான முத்தையா முரளிதரன் விடுதலைப் புலிகள் உடனான இலங்கை ராணுவத்தினரின் போரில் அரசுக்கு ஆதரவாக இருந்ததாகவும், அவர் தமிழ் இன வெறுப்பாளர் என்றும் கூறி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என தமிழகத்தில் சிலர் கடந்த இரு வாரங்களாக கருத்துகள் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் தாம் தமிழ் இன வெறுப்பாளர் இல்லை என்று கூறி சர்ச்சைகளுக்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில், முத்தையா முரளிதரன் கடந்த வாரம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
எனினும், இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி பதில் ஏதும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவர் 800 படத்தில் நடிப்பது அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயகுமார் உள்ளிட்டோரும் கருத்துகளைத் தெரிவித்தனர். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்தது.
இந்நிலையில், முத்தையா முரளிதரன் தரப்பில் அவரது கையெழுத்திட்ட ஒரு பக்க அறிக்கை இன்று வெளியானது. அதில் தனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், “என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சிலர் கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020
“ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒரு போதும் நான் சோர்ந்து விடவில்லை. அவை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்.
“அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்தப் படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய சூழ்நிலையில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கும் விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்று கூறி வேறு எதுவும் தெரிவிக்காமல் விட்டுவிட்டார். இருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.