எனது நினைவலைகளில் இருந்து…
– By KH கிருஷ்ணன், செங்கோட்டை –
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா இந்த வருடம் ஜூன் 16ல் கொண்டாடப்பட்டதாக அறிந்தேன்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையைச் சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். இவர் ஜூன் 16ஆம் தேதி 1924-ல் பிறந்து 1978ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இயல், இசை, நாடகத் துறையில் கலைமாமணி விருது பெற்றவர். பல்வேறு படங்களில் பாடல்களைப் பாடி, தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக என பல்வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தியவர்.
தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என 1940 – 1950களில் மிகப் பிரபலமாக இருந்தார், டி.ஆர்.மகாலிங்கம். உச்ச த்வனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப் பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
39 படங்களில் நடத்த இவர் தனது 5 வயது முதல் நாடக மேடை ஏறி தனது பாடல் மூலம் பல்வேறு புகழடைந்தார். இவரது மேடை நாடகப் பாடலில் மெய்சிலிர்த்த ஏவி மெய்யப்பச் செட்டியார் டி.ஆர்.மகாலிங்கத்திற்கு 13வது வயதில் பட வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு, திரைத்துறையில், பல்வேறு சாதனைகள் புரிந்தார். இதுவே டி.ஆர்.மகாலிங்கத்தின் பின்னணி!
2017 ஜூன் மாதத்தில் சிருங்கேரி மஹா சன்னிதானம் மற்றும் சன்னிதானம் செங்கோட்டைக்கு விஜயம் செய்து, அம்மன் சந்நிதி தெருவில் அப்போது புதிதாக அமைக்கப்பட்ட சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னின்று சிறப்புற நடத்தி வைத்தார்கள்.
அதற்கு முன் சோழவந்தான் தென்கரை கிராமத்தில் இரண்டு ஆச்சார்யர்களும் முகாமிட்டு இருந்தார்கள். தென்கரையில் இருந்து ஆச்சார்யர்களை செங்கோட்டைக்கு அழைத்து வர ஒரு குழு தென்கரை சென்றது. அவர்கள் திரும்பி வந்தபோது சோழவந்தானில் மறைந்த பழம்பெரும் நடிகர் டி.ஆர். மஹாலிங்கம் வீட்டைப் பார்த்ததாகவும், அவர் தொடர்புடைய குடும்பத்தினரைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறினார்கள்.
சொல்லப் போனால், டி.ஆர். மஹாலிங்கம் செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெரு மாப்பிள்ளை. அவரது மச்சினர் திருவாளர் ஆண்டியின் வீடு பாரத் பெட்ரோலியம் ஹெச்.மஹாதேவன் வீட்டிற்கு எதிர் வீடுதான். நான் செங்கோட்டையில் ஆறாம் வகுப்பு படித்த காலத்தில் குற்றால சீசன் நேரத்தில் டி.ஆர்.மஹாலிங்கம் தனது குடும்பத்தோடு பெரிய காரில் அம்மன் சந்நிதித் தெருவில் இருந்த அவரது மாமனார் வீட்டுக்கு வருவார். அவரது பிள்ளை சுகுமார் ரொம்ப ஸ்டைல் பண்ணிக் கொள்வார். நாங்களும் அவரிடம் போய் ஏதாவது பேசிக் கொண்டிருப்போம்.
ஒரு முறை செங்கோட்டை மெயின் ரோட்டில் தற்போதும் இருக்கும் – ஸ்ரீ மூலம் ரீடிங் கிளப் – வாசகசாலையில் எனது தந்தை டி.ஆர்.மகாலிங்கத்திற்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்.
டி.ஆர்.மஹாலிங்கம் புதிய வெள்ளை ஜிப்பா, நல்ல வெளுத்த வேட்டி அணிந்து ஜம் என்று விழாவிற்கு வந்தார். விழா முடிந்ததும் அங்கு வந்திருந்த செங்கோட்டை மஹா ஜனங்கள், அவரை அவர் பாடிய பழைய பாடல் ஒன்றை பாடச் சொன்னார்கள்.
அவரும் தமது கந்தர்வக் குரலில் – பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா – என்ற பாடலைப் பாடினார். எனக்கு தலை கால் புரியவில்லை.
அந்தப் பாடலை எப்போது யுடியூப்பில் கேட்டாலும், அவரது அந்நாளைய அந்த ஸ்டைல்தான் நினைவுக்கு வரும். இந்தப் பாடலில் சாரங்கபாணியின் அபிநயம் ஜோராக இருக்கும். அதை இன்றளவும் பார்த்து ரசிக்கிறேன்.