[prisna-google-website-translator]

ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021: குரல் வளை நெரின்னு நீங்க பயமுறுத்துற மாதிரில்லாம் இல்லியா..?!

vadivel joke - 1

ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 கருத்துரிமையை பாதிக்கிறது என்றும், இது திரைப்படத்துறையின் குரல்வளையை நெரிக்கிறது என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுகின்றன.

ஆனால், உண்மையில் இதற்கு முன்னால் இருந்த ஒளிப்பதிவு சட்டம் 1952ன் பிரிவு 6 உட்பிரிவு (1) ன் படி, தணிக்கைக் குழுவின் முன் நிலுவையில் உள்ள அல்லது தணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கிய திரைப்படங்களையும், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படங்களையும், அத்திரைப்படத்தால் பொது அமைதிக்கு பங்கம் வரும் என்றோ, மத ரீதியான பிரச்சினைகள் வரும் என்றோ, இந்திய இறையாண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அத்திரைப்படம் அமைந்துள்ளது என்றோ மத்திய அரசு கருதுமேயானால்,அந்தப் படத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை தாமாகவே ரத்து செய்ய முடியும் என்ற நிலையே இருந்தது. மேலும் மக்கள் நலன் கருதி செய்த தடைக்கான காரணங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெளிவாக சொல்லப்பட்டிருந்தது.

இதற்கிடையில், 28/11/2000 அன்று உச்சநீதிமன்றம், தணிக்கை குழுவிற்கு போதிய அதிகாரம் சட்டத்தின் படி உள்ள நிலையில், அக்குழுவை மீறி அரசே நேரடியாக மறுசீராய்வு செய்து தணிக்கை குழுவின் முடிவை அரசே திருத்தியமைக்கலாம் என்கிற அதிகாரம் தவறானது என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த அதே வேளையில், மத்திய அரசு தனது ஆட்சேபகரமான கருத்தை தணிக்கைக் குழுவிடம் எடுத்துரைத்து மீண்டும் தணிக்கைக் குழுவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வந்து உரிய முறையில் சட்டத்தை இயற்றுமாறு உத்தரவிட்டது.

மேலும், மத்திய அரசு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(2) குறிப்பிட்டுள்ள உரிமைகளை பாதுகாக்கவும், உரிமை மீறல்களை தடுக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு. அந்த அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்ளாமல் தணிக்கைக் குழுவிடம் அளிப்பதே முறையானது என்பதை உணர்ந்து அதற்கான சட்டத் திருத்தத்தை இயற்றுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன் காரணமாக இயற்றப்பட்ட மசோதா இது.

இதையடுத்து அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகும், அரசியலமைப்பு சட்டம் 19 (2) ல் குறிப்பிட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்குட்பட்டு முடிவுகள் அமைய வேண்டும் என அரசு கருதினால், அத்திரைப்படத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த தணிக்கைக் குழுவின் தலைவருக்கு உத்தரவிடலாம் என்றே ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில், ஏற்கெனவே இருந்த சட்டத்தில் நேரடியாக மத்திய அரசுக்கு இருந்த அதிகாரத்தை அகற்றி தணிக்கைக் குழுவிற்கே முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது இந்த சட்டத் திருத்தம். மேலும், இதுநாள் வரை, திரைப்படங்களுக்கு பத்து வருடங்களுக்கு மட்டுமே தணிக்கை சான்றிதழ் என்ற கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது புதிய திருத்தம்.

புதிய சட்டத் திருத்த வரைவானது வீடியோ திருட்டை தடுக்கும் வகையில் கடும் தண்டனைகளை பரிந்துரைத்துள்ளது. திரையரங்குகளில் திரைப்படங்களை பதிவு செய்து, இணைய திருட்டை அரங்கேற்றுபவர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அல்லது திரைப்படத்தை தயாரிக்கும் செலவில் ஐந்து விழுக்காடு அபராதம் என்று வரைவு மசோதா குறிப்பிடுகிறது.

இந்த சட்ட திருத்தமானது திரைத்துறையினரை பாதுகாக்கும் மசோதா என அமைந்துள்ள நிலையில், திரைத்துறையை சார்ந்த ஒரு சிலர் இந்தத் திருத்தம் கருத்துரிமை குரல்வளையை நெரிக்கிறது என்று சொல்வது அவர்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது அல்லது அவர்களின் உள்நோக்கத்தை உணர்த்துகிறது.

அரசியல் கட்சிகளும், திரைத்துறையை சார்ந்தவர்களும் இந்த மசோதாவை வரவேற்று ஆதரவளிக்க வேண்டியது அவர்களின் கடமை.

  • நாராயணன் திருப்பதி (செய்தித் தொடர்பாளர், பாஜக.,)

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply