பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படமும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது.
ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த டாம் ஹேங்க்ஸின் ஹாலிவுட் திரைப்படமான தி ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.
இந்த படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் நடித்துள்ளார். நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படும் நிலையில், ஏகப்பட்ட பாலிவுட் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்திரன் இயக்கத்தில் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை அமீர்கான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
1994ம் ஆண்டு இயக்குநர் ராபர்ட் ஜெம்மெக்கிஸ் இயக்கத்தில் டாம் ஹேங்க்ஸ் மற்றும் ராபின் ரைட் நடிப்பில் வெளியான தி ஃபரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் லால் சிங் சத்தா. ஏகப்பட்ட ஆஸ்கர் விருதுகளை குவித்த இந்த படத்தை ரீமேக் செய்து நடித்துள்ள அமீர்கானுக்கும் ஏகப்பட்ட விருதுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவையே இயக்குநர் ராஜமெளலி பாகுபலி படங்களை இயக்கி வியக்க வைத்த நிலையில், பல பாலிவுட் படங்களின் வசூலை அந்த படம் பின்னுக்குத் தள்ளி 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது.
பாலிவுட் நடிகர்கள் யாரும் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் வாங்கிய நிலையில், அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் 2000 கோடி ரூபாயை வசூலித்து இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக திகழ்கிறார்.
மீண்டும் மகாராஷ்ட்ராவில் திரையரங்குகள் திறக்கப்படுவது மகிழ்ச்சியான விஷயம் என அறிவித்துள்ள அமீர்கான் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு லால் சிங் சத்தா படம் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அடுத்த ஆண்டு காதலர் தினத்துக்கு லால் சிங் சத்தா வெளியாகும் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் டிசம்பர் மாதத்திற்குள் பாலிவுட் படங்களை திரையில் காண ரசிகர்கள் வருவார்களா? என்கிற சந்தேகம் அமீர்கானுக்கும் உருவான நிலையில் தான் இப்படி அடுத்த ஆண்டுக்கு படம் தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல பாலிவுட் படங்கள் நவம்பர், டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியை புக் செய்து வைத்துள்ள நிலையில், பிப்ரவரியில் வெளியாகி கல்லா கட்டா பக்காவாக திட்டம் போட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.