இங்கு பெங்களூரில் யாரும் யூகிக்க முடியாத துர்மரணம் என்றால் புனித் ராஜ்குமாருடையது தான்.பெயரில் மாத்திரமே அவர் புனித் இல்லை நிஜத்திலும் தான் என சொல்லாமல் சொன்னது அவரது வாழ்க்கை.
யாருக்கும் தீங்கு இன்றி வாழ்பவன் மனிதன்….. ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்., இப்பாடல் வரிகளின் இலக்கணம் இவர். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை இல்லை.
அவர் தகப்பன் மிகப் பெரிய செல்வாக்கு கொண்ட நடிகர். பரோபகாரி. உதாரணத்திற்கு இன்றைய இணைய உலகம் வளர்ந்திராத அந்நாட்களில் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்ட சமயம்,பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட அந்த வேளையில் வெறும் ராஜ்குமார் படம் ஒட்டப் பட்ட வாகனங்கள் மாத்திரமே பாதுகாப்பாக பயணம் செய்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்…. அப்படி செய்ய சொல்லி யாரும் நிர்பந்திக்கவே இல்லை. அவருக்கே கூட பின்னாளில் தான் இந்த விஷயம் தெரியவந்தது. ஆனாலும் அந்நாளில் அந்த கும்பல் கட்டுப்பட்டது. அப்படி ஒரு செல்வாக்கு ராஜ்குமாருக்கு. இதுவே அவரை கடத்த காரணமாக அமைந்தது வேறு விஷயம்.
அப்படி ஒரு செல்வாக்கான இருப்பிடத்தில் வளரும் பிள்ளைகள் ஒருவித மதர்ப்புடனே வளர்வார்கள். வேறு எங்கும் போக வேண்டாம். ஷாருக் கானுடைய மகன் ஆர்யா கான் போதும் உதாரணத்திற்கு.
இது எதுவுமே புனித் ராஜ்குமாரிடம் பார்க்க முடியாது. இத்தனைக்கும் குழந்தை நட்சத்திரமாக ஆரம்ப காலத்தில் இருந்தே இவரும் திரையில் தோன்றி தேசிய விருது வரை பெற்று இருக்கிறார். கட்டம் கட்டி கலக்குவேன் என்கிற அலப்பறை எதுவும் இவரிடத்தில் இருந்தது இல்லை. வேடிக்கையாக ஒன்றை சொல்வர். திரை துறையில் ரஜினி காலெடுத்து வைத்ததும் இவர் குழந்தை நட்சத்திரமாக வந்ததும் ஒரே ஆண்டில் தான் என்பார்கள்.
அப்பு என்கிற வார்த்தைக்கு இங்கு பெங்களூரில் ஈர்ப்பு அதிகம். இவரை அப்படி தான் கொண்டாடினார்கள். இவர் அப்படி கொண்டாட தகுதியானவராக தன்னை மாற்றிக் கொண்டார். இவர் இறக்கும் வரை அவர் செய்த நற்காரியங்கள் எதுவும் வெளியே தெரியாது.
எத்தனை முதியோர் காப்பகம்…. எத்தனை பள்ளிக்குழந்தைகள்….. எத்தனை எத்தனை மாடுகள் இவர் பராமரிப்பில் இவரது பொறுப்பில் இருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியாது. தெரிந்து இந்த சமயத்தில் தான் பலரும் ஆடிப் போய் இருக்கிறார்கள்.
அதனை சொந்தம் கொண்டாடும் வகையில் அசிங்கமான காரியங்களை செய்ய துணிந்து நம் மானத்தையும் வாங்கியிருக்கார் விஷால். நம் தமிழகத்தில் உள்ள திரை துறையினர் ஒரு சிலருக்கு எதுவுமே ஒரு வியாபார தந்திர விளையாட்டு போலும்…… இதுநாள் வரை புனித் ராஜ்குமார் நிதியுதவி செய்து வந்த குழந்தைகளின் பள்ளி படிப்பு செலவை இனி வரும் காலங்களில் தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இதை காட்டிலும் இறந்து போன அந்த மனிதரை அசிங்க படுத்த முடியாது. விளம்பரம் தேட வேறு எதுவுமா கிடைக்கவில்லை அவருக்கு…..
ஒரு வேளை அவர் நினைப்பது போல் இவர் ஒன்றும் இல்லாதப்பட்ட ஆள் இல்லை. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தேவையான அத்தனையும் அவர் தொடங்கிய அந்த காலத்தில் இருந்தே நன்கு திட்டமிட்டு செயல் படுத்தி வைத்திருக்கிறார் புனித் ராஜ்குமார். இது தான் அவரது பாணி. இது எதனையும் தெரிந்து கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக பேசியிருக்கிறார் விஷால்.
அப்படி நற்காரியங்கள் செய்ய விருப்பம் இருக்கும் நபர்…. இவர் நடிகர் சங்க தலைவராக … தயாரிப்பாளர் சஙகத்தலைவராக இருந்த காலத்தில்….. நலிந்த நடிகர்களின் வாரிசுதாரருக்கோ அல்லது நொடிந்த தயாரிப்பாளர் குடும்ப உறுப்பினர்களுக்கோ இதனை செய்ய வேண்டியது தானே…. செய்திருக்கிறாரா….????…..
இங்கு புனித் இறந்த செய்தி கேட்டு குவிந்த மக்கள் வெறும் ரசிகர்கள் மாத்திரம் அல்ல…. இதுவே இவர் போல்வாருக்கு புரியப்போவதில்லை.
மைதானத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு வந்திருந்த பல போலீசாரும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள். பல முகங்கள் தேம்பி தேம்பி அழுதபடி இருந்ததை பார்ப்பதற்கு ஏதோ ரசிகர்கள் கூட்டம் ஆற்றாமையில் அழுது புலம்புகிறார்கள் என்றே நினைக்க தோன்றியிருக்கும். ஆனால் வந்திருந்த பலரும் ஏதோ விதத்தில் அப்புவுடன் இணைந்திருந்தவர்கள்.
ஒரு உதாரணம் பாருங்கள்…..
2016-17 காலக்கட்டம் அது. பெங்களூரில் உள்ள விளம்பர பதாகைகளில் புதியதாக அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு UPVC பைப்பை விளம்பர படுத்த இவர் சம்மதித்து அந்த விளம்பரத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில். அந்த நாற்பது நாள் விளம்பர பதாகைகள் அங்கு இருந்த பின்னர் அதனை எடுத்து ஓலை கொட்டகைகளில் குடி இருந்தவர்கள் பயன் படுத்தும் விதமாக நல்ல தரமான விதத்தில் தயாரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவ்வாறே அவர்கள் பயன்படுத்திய கொள்ளவும் செய்திருக்கிறார் இவர். இது போல் தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகரமாக செயல் பட்டிருக்கிறார். இது எதுவுமே சந்மந்தப்பட்ட நபர்கள் தாண்டி வெளியே தெரியாமல் பார்த்து கொண்டு இருக்கிறார் இவர் என்பது தான் இதில் உள்ள ஹைலைட்.
பானஸ்வாடி பகுதியில் இருந்து வெளியே வரும் வழித்தடத்தில்….. விஜயா நகர் பகுதியில்…. BTM பகுதியில் இருந்து மடிவாலா வரும் பாதையில் குடியிருந்த பலருக்கும் இது பயன் பட்டது.இட நெருக்கடி காரணமாக மாடி தளத்தில் கொட்டகை அமைத்து குடியிருந்தவர்கள் ஏராளம் இங்கு.
இதுபோக வேலைவாய்ப்பு தேடி வந்த இவரது ரசிகர்களில் வேலையில்லாத பலருக்கும் ஏதோ விதத்தில் வேலை பார்த்து கொடுத்து இருக்கிறார்கள் இவரது வழிகாட்டுதலின் படி இயங்கிய நிர்வாகிகள்.
பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் வேலையே இங்கு இல்லை. அப்படி பட்டவர்களை கிட்ட சேர்க்கவும் இல்லை. அதேசமயம் உதவி என்று கேட்டு நின்ற எவரையும் தள்ளி விட்டதேயில்லை. நடு இரவில் பிழைக்க வழியின்றி பெங்களூர் வந்து இவர் வீட்டு வாசலில் நின்ற பலருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து இருக்கிறார் இவர்.
அப்பா இல்லை….. பசி… படிக்க மனம் ஈடுபடவில்லை…. பிச்சை எடுக்க கூச்சம்… என தத்தித்தத்தி பேசி உதவி கேட்டு நின்றவர் இன்று இரண்டு ஆட்டோக்களுக்கு சொந்தக்காரர். இவை கண்கூடாக பார்த்த நிகழ்வு. இவர் போல எண்ணற்றவர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் அள்ளிக் கொடுக்க தயாராக நிற்கிறார்கள். இவர் இப்படி உதவி செய்வது தெரிந்திருந்தால் கொட்டிக் கொடுக்க ஏராளமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். இது எதுவுமே தெரியாமல் உதவுவதாக சொல்லி விளம்பரம் தேடி அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம். அவரை அல்ல…… தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வாழ்பவர்களை…..
தற்போது இவர்களை தான் இளக்காரமாக பார்க்கும்படியான சூழலை விஷால் ஏற்படுத்தி இருக்கிறார்.
வேடிக்கையான நகைமுரண் நம்மவர்களிடத்தில் உண்டு.
கர்நாடக மாநிலத்தில் காவல் துறை பணியில் சேர்ந்த காலத்தில் அவரது பணி திறன் பார்த்து வியந்து கொண்டாடிய ஒருவரை புனித் ராஜ்குமார் தனது திரைபடத்தில் அவரைப்போலவே நடித்த படம் இங்கு சக்கைபோடு போட்டது. அந்த திரைப்படத்தின் பெயர் யுவ ரத்னா. அதில் அவர் அண்ணாமலை IPS ஆகவே தோன்றியிருக்கிறார். நிஜத்திலும் அண்ணாமலை IPS யை கொண்டாடிய கர்நாடக மக்கள், புனித் ராஜ்குமார் நடித்த திரைப்படத்தையும் கொண்டாடி தீர்த்து இருக்கிறார்கள்.
ஆனால் அந்த நிஜ அண்ணாமலையே பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக வந்து இருக்கிறார். நம்மவர்களுக்கு கொண்டாட தெரியவில்லை. என்ன செய்வது… அது மாத்திரம் அல்ல இவரை கொண்டே… இவரது போலீஸ் பாணியை மையப்படுத்தி தமிழ் திரைப்பட கதை களம் அமைத்து அந்த படமும் சக்கை போடு போட்டது. அவை தாம் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் திரைப்படம். பின்னர் அது தமிழகத்தின் பிரத்யேக பாணியிலான சிங்கம் சீரீஸ் திரைப்படங்களாக மாறிவிட்டது.
தமிழகத்தில் உள்ள பல நடிகர்களுக்கு தனது பாணியை… தனது நடிப்பை கொண்டாடுகிறார்கள் என்பதே தெரியாமல் ஏதோ தன்னையே ஆபத்பாந்தவனாகவே நினைக்கிறார்கள்….. கொண்டாடுகிறார்கள் என்று நினைத்து விடுகிறார்கள் போலிருக்கிறது.
அது போலானவருக்கு புனித் ராஜ்குமார் ஒரு வாழ்க்கை பாடம் என்பதே நிதர்சனமான உண்மை. இங்கு கூடி நின்றவர்களே அத்தாட்சி. சமூக பொறுப்புடன் தனது கடமையை மிகச் சரியாக செய்த நடிகர், உத்தமனாகவே கொண்டாடப்படுவார் என்பதற்கு இவர் ஒரு ஆகச் சிறந்த உதாரணம்.
இனியாவது நிழலில் தோன்றும் பிம்பத்தை கொண்டாடும் மக்களுக்கு நிஜத்திலும் ஏதாவதொரு நல்லது செய்ய நடிகர்களாக நினைத்துக்கொண்டு இருக்கும் தமிழ் திரைத்துறையினர் நம் தமிழகத்தில் முன்வருவார்களா…….. குறைந்த பட்சம் பொய்யான மாய தோற்றத்தையும் தவறான கருத்துகளை பரப்புவதையும் குறைத்து கொள்ளவாவது முன் வர வேண்டியது இன்றைய காலத்தில் கட்டாயம் எனபதையாவது உணர்வார்களா……
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜெய் ஹிந்த்.
- ஸ்ரீராம்