[prisna-google-website-translator]

‘தல’ன்னெல்லாம் கூப்டாதீங்க…! என் பேரு அஜித் குமார்..!

ajithkumar - 1

தைப்பொங்கல் நாளில் வலிமை திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், நடிகர் அஜித் குமார், தனது ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவரை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகங்களில் பலரும் ‘தல’ என்று அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்…

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு…

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
அஜித்குமார்….

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனாலும் அவர் தன் பெயரில் ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்துவிட்டார். ரசிகர்கள் அவரவர் வேலையை பாருங்கள் என அன்புடன் அறிவித்திருந்தார். மேலும் தன்னை அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து அழைத்தபோது அப்படி எல்லாம் அழைக்க வேண்டாம் என அறிவிப்பும் வெளியிட்டார்.

ajith kumar thala

தன் படங்களிலும் அஜித் குமார் என்றே தன் பெயர் வரும்வகையில் கவனமாக இருந்துள்ளார் அஜித் குமார். ஆனாலும் ரசிகர்கள் அவரை ‛தல தல’ என்றே அழைத்து வந்தனர். அஜித் ரசிகர் மன்றம் கலைக்கப் பட்டு விட்டாலும், இன்றளவும் இளைஞர் கூட்டம் ஒன்று அஜித்துக்கென்று இருக்கத்தான் செய்கிறது. டிவிட்டர் போன்ற சமூகத் தளங்களில், அஜித் பெயரில் குழுக்கள் பல இயங்கி வருகின்றன. சில நேரங்களில் வார்த்தைச் சண்டைகளும் அதில் இடம்பெறும்..

ஏற்கெனவே தளபதி என விஜய் தன் பெயரைப் போட்டுக் கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் அதைச் சொல்ல அனுமதித்திருக்கும் போது… அஜித் ரசிகர்கள் தல என்று சொல்வதை தாம் ரசிக்கவில்லை என்பதை அஜித் சொல்லி வந்துள்ளார். ரசிகர் மன்றங்கள் பின்னாளில் அரசியல் இயக்கங்களாக மாறும் என்பதை உணர்ந்துள்ள அஜித், தன் பெயரில் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று முடிவெடுத்ததன் பின்னணியில் அரசியல் தனக்கு வேண்டாம் என்பதே இருந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

கருணாநிதி முன்னிலையில், திமுக., ஆதிக்கம் சூழ்ந்திருந்த திரையுலகில், தன்னை நிகழ்ச்சியில் வருமாறு கட்டாயப் படுத்தினார்கள் என புகார் சொன்ன தைரியம் கொண்ட அஜித், தன்னை அரசியல் சாயங்களுக்குள் சிக்கிவிடுவதை அறவே விரும்பவில்லை என்கிறார்கள். ஆனாலும், இந்த முறை 2021 சட்டமன்றத் தேர்தலின் போது கருப்பு சிவப்பு வண்ணம் வெளித் தெரிய உடையை அணிந்து கொண்டு ஓட்டுப் போட வந்தபோது, தான் திமுக.,வுக்கு ஆதரவு என்பதை அஜித் வெளிப்படுத்தினார் என்று ஊடகங்களில் பலரும் சொன்ன நேரம், அஜித் மௌனமாகவே இருந்தார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply