துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், துபாயில் நடைபெறும் ‘துபாய் எக்ஸ்போ 2020’ நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். துபாயில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் கொண்டாடினர்.
துபாய் எக்ஸ்போ ஷோவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்துடன் இசை கச்சேரி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த இசைக்கச்சேரிக்கு பிறகு, துபாயில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா சென்றார்.
அங்கு அவரை ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்று ஸ்டூடியோவை சுற்றிக் காண்பித்தார். பின்னர், இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்துக்கு கீழே, மேஸ்ட்ரோவை எங்களின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் ஏதேனும் இசை அமைப்பார் என நம்புகிறேன், என அவர் கூறியுள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ஹிட் அடித்து வருகிறது.
Such a pleasure welcoming the Maestro @ilaiyaraaja to our Firdaus Studio… Hope he composes something amazing for our @FirdausOrch to play in the future! pic.twitter.com/oam4TJPL63
— A.R.Rahman (@arrahman) March 6, 2022