நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துவங்கிய நிலையில் துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக புகார் வந்ததால் நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.
அதன்படி, இன்று காலை 8 மணிக்கு மேல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தைலவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக ஐசரி கணேஷ் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துணைத்தலைவர் பதவிக்கு விஷால் அணியின் பூச்சி முருகன் முன்னிலை பெற்ற நிலையில் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.