ஐஸ்வர்யா வீட்டில் 200 பவுன் நகைகள் கொள்ளை போனதாக புதிய வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வேலைக்கார பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலைக்கார பெண்ணும் டிரைவரும் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் புதிது புதிதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்பட 3 வீடுகளில் தான் வசித்து வந்ததாகவும் அப்போது லாக்கரில் வைத்திருந்த 60 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன என்றும் ஐஸ்வர்யா முதலில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேலைக்கார பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் ஐஸ்வர்யாவின் வீட்டில் நகைகளை திருடியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். ஈஸ்வரியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி நகை கொள்ளை போனது தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டினர். இதில் 100 பவுன் நகைகள் முதலில் சிக்கின. ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்து இருந்ததைவிட கூடுதலாக நகைகள் கிடைத்ததால் போலீசாருக்கு முதலில் லேசாக தலை சுற்றியது.
புகாரில் கூறியிருப்பதைவிட கூடுதல் நகைகள் சிக்கியதால் அதுதொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகளை திருடி இருக்கலாமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு? என்பது பற்றிய விவரங்களை முழுமையாக கணக்கு பார்த்து தெரிவிக்குமாறு கேட்டனர். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்த நகைகள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து அதன் பின்னர் 2-வதாக புதிய புகார் ஒன்றையும் அளித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஐஸ்வர்யா அளித்த 2-வது புகாரில் தனது வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக புதிய வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஐஸ்வர்யா 2-வது அளித்த புகாருக்கு பிறகே போலீசார் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதில் 45 முதல் 50 பவுன் நகை வரையில் ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. டிரைவர் வெங்கடேசனிடமிருந்து ரூ.45 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஐஸ்வர்யா வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அவரது வீட்டில் திருடிய வேலைக்கார பெண்ணிடம் கூடுதல் நகைகள் இருந்ததால் அது ரஜினிகாந்த் அல்லது தனுஷ் வீட்டில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று விசாரித்தோம். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. ஐஸ்வர்யாவின் வீட்டில் மட்டுமே 200 பவுன் நகைகளை வேலைக்கார பெண் ஈஸ்வரி, வெங்கடேசனுடன் கூட்டு சேர்ந்து திருடியுள்ளார்.
இதில் முதலில் 100 பவுன், பின்னர் 50 பவுன் என மொத்தம் 150 பவுன் தங்க நகைகளை கைப்பற்றியுள்ளோம். இன்னும் 50 பவுன் நகைகளை கைப்பற்ற வேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார். போலீஸ் காவலில் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 2 நாள் காவலுக்கு பிறகு இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈஸ்வரி, போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் வசதியாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு இதுபோன்று செய்துவிட்டதாக கூறி இருக்கிறார்.
ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கர் இருக்கும் இடமும் அதற்கான சாவி இருக்கும் இடமும் தெரிந்த பின்னரே அதில் இருக்கும் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருட திட்டமிட்டோம் என்றும் அப்படி திருடினால் கண்டுபிடிக்க முடியாது என்றும் நினைத்தோம் எனவும் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.