நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கலும், நேரில் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) வயது மூப்பு மற்றும் உடல் நிலை மோசமடைந்த காரணத்தால் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி கணேஷ் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
குணச்சித்திர நடிகராவும், காமெடி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம்வந்த டெல்லி கணேஷ் 1944 ஆகஸ்டு 1ல் நெல்லை மாவட்டத்தில் பிறந்தார். அவருடைய பூர்வீகம், தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு. டெல்லி கணேஷுக்கு சகோதரர்கள் 9 பேர், சகோதரிகள் இருவர்.
இவர் முதலில் விமானப்படையில் வேலை செய்தார். பத்தாண்டுகள் பணியில் இருந்து, பின்னர் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு, அப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, நாடகங்களில் நடித்தார். நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த போதிலும், டெல்லி தட்சிண பாரத நாடக சபாவில் நடிகராக இருந்த இவர், ‘டெல்லி’ கணேஷ் என பெயர் பெற்றார்.
1976ல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ என்னும் படத்தில் அறிமுகமானார். பின்னர் கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்து மிரட்டினார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காம ராஜன், தெனாலி, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது யதார்தமான குணசித்திர நடிப்பால் தனக்கென தனி இடம்பிடித்தார். ரஜினிகாந்த் உடன் இவர் நடித்த ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் ராகவேந்திரரின் சீடராக அப்பணாச்சாரியர் என்ற கதாபாத்திரத்தில் வெகு இயல்பாக நடித்தார். அது ஆன்மிக உலகில் அவருக்கு என தனி மரியாதையைப் பெற்றுத் தந்தது.
குறும்படங்கள், டிவி நெடுந்தொடர்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்து அசத்தினார். அண்மையில் திரைக்கு வந்த ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். 1994ல் கலைமாமணி விருது உள்பட பல்வேறு திரைத்துறை சார்ந்த விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றிய நிலையில், வழக்கம் போல தனது வீட்டில் மகனுடன் பேசிவிட்டு தூங்கச் சென்றவருக்கு தூக்கத்திலே உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த டெல்லி கணேஷ்க்கு தங்கம் என்ற மனைவியும், லட்சுமி, சாரதா என இரு மகள்களும், மகாதேவன் என்ற மகனும் உள்ளனர்.
தலைவர்கள் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
”புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவு வருத்தமளிக்கிறது. அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசிர்வதிக்கப்பட்டவர் டெல்லி கணேஷ்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர் கொண்டுவந்த நடிப்பின் ஆழம் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களைக் கவரும் திறமையாலும் டெல்லி கணேஷ் நினைவுகூரப்படுவார். நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். டெல்லி கணேஷை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்ட இரங்கல் செய்தி…
“திரு. டெல்லி கணேஷ் அவர்கள், தனது ஒப்பற்ற பன்முகத் திறமையால், எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, எல்லைகளைக் கடந்து சினிமா மற்றும் நாடக உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். நிரப்ப முடியாத அளவுக்கு அவரது மறைவு மிகவும் கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி!” – ஆளுநர் ரவி
பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரு. டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வெளியிட்ட இரங்கல்
தமிழ், ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் 400- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்த மூத்த நடிகர் திரு டெல்லி கணேஷ் அவர்கள் நூற்றாண்டின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே ஒரு பேரிழப்பாகும். “கலைமாமணி” திரு டெல்லி கணேஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். – ஆர்வி உதயகுமார் (தலைவர்) | ம பேரரசு (பொதுச்செயலாளர்)| சரண் (பொருளாளர்)
சமூகத் தளங்களில் பதிவான கருத்துகளில் ஒன்று
நடிகர் டெல்லி கணேஷ் இறந்துவிட்டார் என்பதை விட, சுமார் 15 ஆண்டுகள் இந்த தேசதின் வான்படை பைலட்டாக நின்று காவல் இருந்த அந்த டெல்லி கணேஷ் எனும் முன்னாள் விமானபடை வீரன் காலமாகிவிட்டார் என்பதே சரியானது
1962ல் இருந்து 1974 வரை அவர் இந்திய விமானபடையில் இருந்தார், அதன் பின்பே விருப்ப ஓய்வு பெற்று கலை உலகம் பக்கம் வந்தார்
தமிழக நடிகர்களிலே ராணுவ தொடர்பு உடையவரும் விமானம் இயக்க தெரிந்தவரும் அவர் ஒருவர்தான்
ஆனால் மிக எளிமையான மனிதர், எப்போதும் எங்கும் வெகு எளிமையாக தெரிந்தவர், அகம்பாவமோ நிறைய அறிந்த்வார் எனும் அலட்டலோ எங்கும் இராது
நெல்லை மாவட்டம் வல்லநாடு எனும் ஊரில் 1944ல் பிறந்தார், கல்லூரி படிப்பு முடிந்து ராணுவம் சென்றார்
சோ ராமசாமி, காத்தாடி ராமமூர்த்தி என பலரால் நாடகங்களுக்கு சென்றவர் பாலசந்தரால் சினிமாவுக்கு அழைத்துவரபட்டு , “டெல்லி கணேஷ்” என்றானார்
11985ல் இருந்து அவரின் சினிமா பயணம் தொடங்கிற்று, நாயகன், முதலான படங்களில் அவர் தன் அபார நடிப்பினை வெளிபடுத்தினார், புதுகவிதை போன்றவை எப்போதும் நினைவில் நிற்பது
அவரின் சினிமா தாண்டி சிலாகிக்க வேண்டிய விஷயம் இரண்டு உண்டு
முதலாவது அவரின் கோவில் பணி , வல்லநாடு பக்கம் பல ஆலயங்களுக்கு அள்ளி கொடுத்தார், பெரிய அடியாராக அள்ளி கொடுத்தார் ஆனால் பெயர் வராமல் பார்த்து கொண்டார்
ஆம், அவரால் பயனடைந்த கோவில்கள் ஏராளம் உண்டு, மனிதர் வாய்விட்டு ஒரு இடமும் சொன்னதில்லை
இரண்டாவது எங்கு சென்றாலும் அந்த நெல்லை மண்ணின் அடையாளத்தோடு இருந்தார், கோவில்பட்டியினை தாண்டிவிட்டாலே தாங்கள் பிரிட்டிஷ் அரசகுடும்பமென நினைந்து தன் தோற்றம், பேச்சு, அடையாளமெல்லாம் மாற்றுவோர் மத்தியில் அவர் கடைசிவரை நெல்லையின் இயல்பான தமிழில் பேசினார்
அந்த மண்ணையும் மக்களையும் மரபையும் நேசிக்காமல் அது சாத்தியமில்லை
இப்படியானவர்கள் வெகுசிலர்தான், எத்தனையோ வருட டெல்லி வாசம் அதுவும் இந்தி ஆங்கிலம் கலந்த டெல்லி வாசம், எந்த தமிழ் என புரியாத சென்னை வாசம் என அவர் சொந்த ஊரை விட பல்லாண்டுகள் அதிகம் வெளியிடத்தில் இருந்தும் கடைசிவரை தன் மண்ணின் அடையாளத்தை விடவில்லை
அவரிடம் மிக மிக போற்றபட வேண்டிய குணம் அதுதான்
அவர் படங்களை பார்க்கும் போதெல்லாம் நெல்லை பக்கம் காணும் வெகுளியான ஆனால் பாசமான முகங்கள் நினைவுக்கு வரும், இனி அப்படியான பல முகங்களில் டெல்லி கணேசும் நினைவுக்கு வருவார்
பால்லையா போலவே மிக இயல்பான நடிப்பினை, அலட்டிகொள்ளாத ஆனால் ஆழமான அதே நேரம் வெள்ளந்தியான நடிப்பினை நெல்லை மண்ணின் அடையாளமாக தந்தவர் டெல்லி கணேஷ்
நாட்டுக்கும், க்லைதுறைக்கும் செய்த சேவையினை விட அவர் ஆலயங்களுக்கு செய்தது அதிகம், அந்த பரமாத்மா அந்த ஆத்மாவுக்கு நித்திய இளைபாற்றியினை கொடுக்கட்டும்