காதலை ஏற்காததால், தனது தோழியை வகுப்பறையில் வைத்து சரமாரியாகத் தாக்கிய விட்டு கல்லூரி மாணவர் தலைமறைவு.
கேரள மாநிலம் இடுக்கி அருகில் முரிக்கசேரியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாமாண்டு படித்து வந்த ஜித்து ஜான், உடன் படிக்கும் மாணவியுடன் நட்பாகப் பழகினார்.
நட்பு, நாளடைவில் ஜானுக்கு காதலாக மாறியது. தனது காதலை மாணவியிடம் தெரிவித்தார். ஆனால் மாணவி, அதனை நிராகரித்துள்ளார். எனக்கு உன் மீது காதல் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வெறுத்துப் போன ஜான், காதலை ஏற்கும்படி அவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மறுத்துவிட்டார் மாணவி. இதனால் கோபமடைந்த ஜான், தனது காதலை ஏற்காத மாணவியை தாக்க முடிவு செய்தார்.
கடந்த 18ஆம் தேதி, வகுப்பறைக்குள் ஜான் நுழைந்ததும் மற்ற மாணவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். மாணவிகள் மட்டும் இருந்துள்ளனர். வகுப்பறைக் கதவை, ஜானின் நண்பர் ஒருவர் பூட்டினார்.
பின் அந்த மாணவியை நோக்கிச் சென்ற ஜான், அவரை இழுத்து சரமாரியாகத் தாக்கினார். சரிந்து கீழே விழுந்த அவரை, பூட்ஸ் காலால் மிதித்தார்.இதை எதிர்பார்க்காத சக மாணவிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு கல்லூரி ஊழியர்களும் மற்ற மாணவர்களும் ஓடிவந்ததை அடுத்து தப்பியோடினார் ஜான்.
படுகாயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலை மற்றும் காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி முரிக்கசேரி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஜித்து ஜானை தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தை அடுத்து ஜானை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.காதலை ஏற்காத மாணவியை சக மாணவரே தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.