[prisna-google-website-translator]

அசுரன் – ASURAN – அழகன் …

asuran 1 - 1

சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல நாவல்களை படமாக எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர்  வெற்றிமாறனை பாராட்டியே ஆக வேண்டும் . அவர் இந்த முறை பூமணி எழுதிய வெக்கை யை அதன் வெப்பம் குறையாமல் அசுரனாக செல்லுலாய்டில் அழகாக பதிவு செய்திருக்கிறார் …

மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் சிவசாமி ( தனுஷ் ) அந்த நிலத்தை பிடுங்க நினைக்கும் வடக்கூரானால்  ( ஆடுகளம் நரேன் )  தன் மூத்த மகன் முருகனை இழக்கிறார் . பதிலுக்கு வடக்கூரானை இளைய மகன் சிதம்பரம் ( கென் கருணாஸ் ) காவு வாங்க வடக்கூரானின் குடும்பத்தினரிடமிருந்து  இளைய மகனை  சிவசாமி எப்படி காப்பாற்றுகிறாரர் என்பதை அசுர வேகத்தில் சொல்லி முடிப்பதே அசுரன் …

இரண்டு பெரிய மகன்கள் , ஒரு சின்னப்பெண்ணின் அப்பாவாக தனுஷுக்கு தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரம் . ஆனால் அது எங்குமே தெரியாமல் தனது உடல் மொழியால் பார்த்துக்கொள்வதே தனுஷின் சாமர்த்தியம் . நடை , பேச்சு என்று எல்லாவற்றிலுமே நம் கண் முன் தெரிவது சிவசாமியே தவிர தனுஷ் அல்ல . மெதுவான நடை , அமைதியான பேச்சு இவற்றால் 40 க்கு மேற்பட்ட வயதாக தெரிந்தாலும் தனுஷ் சண்டை போடும் போது மட்டும் 20 ஆகி விடுகிறார் . நம்மை அதை கண்டுகொள்ள விடாமல் ஆக்சனுக்குள் கட்டிப்போட்ட பீட்டர் ஹெயினுக்கு வாழ்த்துக்கள்  . ஆடுகளத்துக்கு பிறகு அடுத்த ஒரு அவார்ட் தனுஷுக்கு காத்திருக்கிறது …

மஞ்சு வாரியார் அந்த இருட்டு கிராமத்திலும் மின்னலாக ஜொலிக்கும் வைர மூக்குத்தி . சின்ன சின்ன முக பாவங்களில் அவர் காட்டுவது நேர்த்தியான நடிப்பு . ஆனால் அவர் உடல்வாகு , அழகு எல்லாமே ஒரு கல்யாண வயது பையனுக்கு அம்மாவாக நம்ப வைக்க மறுக்கிறது . மூத்த மகன் டீஜே சில காட்சிகளே வந்தாலும் தனுஷுக்கு ஈக்குவலாக ஹீரோயிசம் காட்டியிருப்பது சிறப்பு .

asuran manjuwarrier - 2

அவர் கொல்லப்படும் காட்சியும் , பிணத்தை பார்த்து தனுஷ் – மஞ்சு வாரியார் கதறும் காட்சியும்  நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் நெஞ்சை உறையவைத்த காட்சிகளில் ஒன்று . கென் கருணாஸுக்கு முதல் படமே அருமையான அறிமுகம் . இயக்குனரே சிதம்பரத்தின் குடும்பம் என்று அறிமுகம் செய்யுமளவுக்கு வெயிட்டான ரோலில் சிறப்பாக செய்திருக்கிறார் . மேலும் வளர வாழ்த்துக்கள் . பசுபதி , பிரகாஸ்ராஜ் படத்தில் இருக்கிறார்கள். அந்த கூட்டத்திலும் தேர்ந்த நடிப்பால் தனியாக தெரிகிறார்கள் …

ஜி.வி.பிரகாஸ்  நடிப்பதை கூட விட்டு விட்டு  இது போன்ற படங்களுக்கு இசையமைக்க மீண்டு (ம்) வரலாம் . ஆடுகளம் , பரதேசி க்கு பிறகு தனது பின்னணி இசையால் தாண்டவம் ஆடியிருக்கிறார் . படத்தை எந்த விதத்திலும் ஓவர் டேக் செய்யாமல் அதே நேரம் நம்மை இழுத்தும் பிடிக்கிறது அவரது இசை .  வேல்ராஜின் கேமரா காடுகள் , மேடுகள் எல்லாவற்றிலும் பயணித்து படம் நெடுக சிவசாமியோடு சேர்த்தே நம்மை அழைத்து செல்கிறது . இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாமே  இயக்குனர் வெற்றிமாறனுக்கு வலுவாக கை  கொடுத்திருக்கின்றன … 

Asuran 3 - 3

தேங்கியிருக்கும் தண்ணீரில் அழகாக சிரிக்கும் நிலா மனிதனின்  கால் பட்டு சிதையும் முதல் ஷாட்டிலேயே சிவசாமியின் குடும்பம் படப்போகும் பாட்டை நமக்கு சிம்பாலிக்காக காட்டிவிடுக்கிறார் இயக்குனர்  . எதற்காகவும் நேரத்தை வீணாக்காமல் சிவசாமியின் பயணத்தோடு சேர்த்தே நமக்கு என்ன நடந்தது என்பதை விறுவிறு வென விளக்குகிறது திரைக்கதை . சாதாரணமாக ஆரம்பிக்கும் படம் இண்டெர்வெல் பிளாக்கில் சிவசாமியின் அசுர தாண்டவதோடு முடியும் போது இண்டெர்வெல் அதற்குள் வந்துவிட்டதா என்று நம்ப முடியவில்லை … 

60 களில் செருப்பு கூட போட முடியாமல் அவமதிக்கப்படுவது , 80 களில் தன் நிலத்தில் ஒழுங்காக விவசாயம் செய்ய விடாமல் தடுக்கப்படுவது என காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் சாதீய , பொருளாதார ரீதியாக இன்று வரை விதைக்கப்படும் கொடுமைகளை உபதேசமாக இல்லாமல் காட்சிகளாக  மட்டும் காட்டியிருப்பது  இயக்குனரின் பலம் .

சாதிய  பிரச்சனைகளுக்கு  எல்லாம் ஏதோ பிராமணர்கள்  மட்டும் தான் காரணம்  என்பது போல காட்டி ஒதுங்கிக்கொள்ளாமல்  இடைநிலை மற்றும் கீழ் நிலை சாதிகளுக்கிடையேயேயான சண்டைகளை, வனமங்களை நேர்த்தியாக , நேரடியாக காட்டியிருப்பது இயக்குனரின் நேர்மை  .

வசனங்கள் , குறியீடுகள் மூலமாக சாதி வேறுபாடுகளை அடையாளப் படுத்துவது, ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடும் வக்கீல் சேஷாத்ரியை (பிரகாஸ்ராஜ் ) சாதீய ரீதியாக காட்டாமல் தோழராக காட்டியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் …

asuran e1562485120925 - 4

இண்டெர்வெல்லுக்கு பிறகு வரும் ப்ளாஷ்பேக் ரசிக்க வைத்தாலும் பெரிய ஜெர்க்குக்கு அடுத்து பயங்கர எதிர்பார்ப்போடு வருவதால் லேசான ஏமாற்றத்தை தருகிறது  . தனுஷின் அக்கா பெண்ணாக வரும் அம்மு அபிராமி கொஞ்ச நேரமே வந்தாலும்  மனதில் நிற்கிறார் . சட்டை போட கூட வக்கில்லாதவரை தனுஷ் தன் முதலாளி ( வெங்கடேஷ் ) மில்லில்  வேலைக்கு சேர்த்து விடுவதும் அவர் கட  கடவென முதலாளி தனது சொந்தக்காரன் என்று சொல்லுமளவிற்கு வளர்ந்து விடுவதும் யதார்த்தமான  கதைக்களனில் செயற்கையாக பூசப்பட்ட சினிமா வண்ணங்கள் .

ஹிந்தியில் ஆர்டிகள் 15 போலவெல்லாம் இங்கே சினிமா வருவதில்லையே என்கிற ஏக்கத்தை ( பரியேறும் பெருமாள் அதற்கு முன்னரே வந்த அருமையான படம்) தீர்த்து வைக்கிறது அசுரன் .

நாவலின் சினிமாவாக்கம் என்பதால் ஆர்ட் ஃபிலிமாக எடுத்து குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிடிக்கும் படி செய்யாமல் மாஸாகவும் ,  க்ளாஸாகவும் வந்து நம்மை மிரட்டும் அசுரன் அனைவரையும் கவரும் அழகன் …

ரேட்டிங் : 4 * / 5 * 
ஸ்கோர்  காரட் : 50

  • அனந்து (http://pesalamblogalam.blogspot.com)

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply