ருத்ர தாண்டவம் – படம் குறித்து சமூகத் தளங்களில் பலரும் பாராட்டி எழுதி வருகின்றனர்… அவற்றில் சில கருத்துகள்…
ருத்ரதாண்டவம் ரிலீஸாகி நன்றாகப் போகிறது.ஞாயிற்று கிழமை இரவுக்காட்சி பெரிதாக கூட்டமிருக்காது என நினைத்து சென்றேன்..ஹவுஸ்புல்லாகிவிட்டது திரையரங்கம்..
கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த பிறகு,தியேட்டர் என்ற ஒன்று இருப்பதே பலருக்கு மறந்திருக்கும் என நினைத்தேன்.ஆனால் மக்கள் ஆரவாரமாக வந்து சினிமா பார்க்கிறார்கள்.
“நாம கும்பிடுற சாமியை பேய்னு சொல்லிட்டு திரியுறானுங்க’ –
‘கிரிப்டோ கிறிஸ்டியன்’ –
‘நாம எப்டி பொறந்தோமோ அப்டியே இந்த மண்ணை விட்டு போகனும்’ –
‘அம்பேத்கர் காந்தி போல எல்லோருக்கும் பொதுவான தலைவர்’
போன்ற வசனங்களின் போதெல்லாம் விசிலும்,கைத்தட்டலும்,ஆரவாரமும் ஒரு மாஸ் ஹீரோ படத்திற்கு நடப்பது போல உள்ளது..உண்மையில் எதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என மோகன் ஜி இந்தப்படத்தை எடுத்தாரோ? அது தெளிவாக மக்களுக்கு புரிகிறது..
அனைவரின் நடிப்பும் அருமை..தீபா ஷங்கர்,கௌதம் வாசுதேவ் மேனன்,தம்பி ராமைய்யாவின் நடிப்பு மிகச்சிறப்பு..
மோகன் ஜி & குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
– சுந்தர்ராஜ சோழன்
ருத்ர தாண்டவம் படத்தை நேற்று மாலை முக்கால்வாசி நிறைந்திருந்த பெங்களூர் Cinepolis Orion East திரையரங்கில் சென்று குடும்பத்துடன் பார்த்தேன்.
டிரெய்லரில் வந்த காட்சிகளை வைத்து கிறிஸ்தவ மதமாற்ற அபாயம் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிறு ஏமாற்றம். ஆயினும், போதைப் பொருள் பரவல், பட்டியல் சமுதாயத்தினரின் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் (PCR) துஷ்பிரயோகம், “க்ரிப்டோ கிறிஸ்டியன்ஸ்” ஏன்று பெயர்சுட்டப்பட்டும் முகமூடி கிறிஸ்தவர்கள், தேசவிரோத “போராட்ட” என்ஜியோ அரசியல் என நான்கு சமாசாரங்களைப் போட்டுக் காய்ச்சி ஒரு காட்டமான காக்டெயிலாக இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கும் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இறுதிக்காட்சியில் வில்லன் வாதாபி சாகும்போது அவன் மார்பு மங்கலாக்கப் படுகிறது (blur). அங்கு ஒரு பெரிய சிலுவை தொங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுவதை சென்சார் அனுமதிக்கவில்லை போல. மேலும், “மதத்தை விட இங்க சாதிதான் முக்கியம்… ” என்று டிரெய்லரில் தாடிக்காரன் பேசிய வசனம் திரையில் மௌனமாக்கப்பட்டு உதட்டசைவாக மட்டுமே வந்தது. அப்பட்டமான இந்துமத வெறுப்பு, எதிர்ப்புக் காட்சிகளை சகஜமாக ஏராளமான படங்களில் அனுமதித்த சென்சார், இத்தகைய சாதாரணமான சித்தரிப்புகளைக்கூட முடக்குவது கொடுமை.
ஒரு அரசியல் படமாக, தான் முன்வைக்கும் அரசியல் தரப்பை இந்தப் படம் மங்கலாக கோடிகாட்டிச் செல்கிறதே அன்றி, உறுதியாக முன்வைக்கவில்லை என்பதே உண்மை. கிறிஸ்தவ மதமாற்றம் அதனளவில் கண்டிக்கப் படவில்லை. கிறிஸ்தவம் பட்டியல் சமுதாய மக்களின் குடும்பங்களுக்குள் ஊடுருவி, இளைஞர்களை உளவியல் ரீதியாக ஆக்கிரமித்து மதமாற்றுகிறது என்பது உணர்வுபூர்வமாக சொல்லப் படவில்லை. பாதிரியார் மூலம் ஞானஸ்நானம் பெறும் புகைப்படம் போலீஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கில் ஒரு நல்ல “துப்பு” என்ற அளவிலேயே படம் போகிறது. அதில் தவறில்லை. ஆனால், இது காண்பவர்கள் மனதில் இயல்பாக உருவாக்கக் கூடிய தாக்கத்தை இன்ஸ்பெக்டர் ஜோசஃப் என்ற “நல்ல கிறிஸ்தவர்” பாத்திரம் சுத்தமாக மழுங்கடித்து விடுகிறது.
‘கிரிப்டோ கிறிஸ்தவர்’ என்ற மாபெரும் மோசடி அதுபற்றிய எந்த வெட்கமும் இல்லாமல் நடப்பதற்குக் காரணம் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. எஸ்.சி/எஸ்.டி. பட்டியல் சமுதாயம் மட்டுமல்ல, இந்தப் படத்தில் “பூடகமாக” 🙂 பேசப்படும் “தர்மபுரி” சமுதாயம் உட்பட தமிழ்நாட்டின் பல BC, MBC சமுதாயங்களிலும் இந்த மோசடி பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் பா.ம.க. கட்சியால் பாராட்டுப் பெறவேண்டிய அனைத்து நியாயங்களையும் கொண்டிருந்தும், அது கிடைக்காமல் செய்யவைக்க்க கூடிய அளவுக்கு “கிறிஸ்தவ வன்னியர்” ஆதிக்கம் அந்தக் கட்சிக்குள்ளேயே பரவி விட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம். தமிழ்நாட்டு அரஸ்யலில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஒரு பெரிய வெடிகுண்டு என்பது இயக்குனருக்கு நன்கு தெரியும். அதனால், சாதுர்யமாக அதைப் பற்றிய எந்தக் குறிப்பும் வந்துவிடாதபடி கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், உண்மையில் “கிரிப்டோ கிறிஸ்தவ” மோசடியின் ஆணிவேரே அதுதான். இப்படம் அதுகுறித்த ஒரு விவாதத்தை தமிழ்ச் சூழலில் ஏற்படுத்தினால் அது ஒரு நேர்மறையான விளைவாக இருக்கும். ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை.
மற்றபடி, படத்தின் பயங்கரமான பின்னணி இசை, சிலபல அமெச்சூர்த்தனமான காட்சிகள், அங்கங்கு தென்படும் தர்க்கப் பிழைகள், படத்துடன் ஒட்டாமல் செல்லும் பாத்திரப் படைப்புகள் இத்யாதி குறித்தெல்லாம் எதுவும் கூறப்போவதில்லை. முற்றிலும் இந்திய-விரோத, இந்து-விரோத கருத்தியல்களால் சூழப்பட்டுள்ள தமிழ் சினிமா என்ற நச்சுப்பொய்கையில், இப்படி ஒரு படம் வந்திருப்பது என்பதே அதை ஆதரிப்பதற்கும் பாராட்டுவதற்குமான நியாயமான, தார்மீக காரணமாக அமைகிறது. இது போன்ற மேலும் பல படங்களை, இன்னும் சிறப்பான கலை அம்சங்களுடன், இன்னும் கூர்மையான அரசியல் பார்வையுடன் மோகன் ஜி எடுக்க வாழ்த்துக்கள்.
திமுக அடிமை ஊடகங்களின் எதிர்மறை பிரசாரங்களையும் மீறி, இந்தப் படத்திற்கு தமிழ் மக்களிடம் பரவலான, நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது உவகையும் நம்பிக்கையும் அளிக்கிறது. இப்படத்தில் வெற்றி மேலும் சில தர்ம, நியாய உணர்வும் இந்துமதப் பற்றும் கொண்ட திரைக்கலைஞர்களை இத்தகைய முயற்சிகளில் மேன்மேலும் ஈடுபடுத்துவதற்கு அன்னை பராசக்தி அருள்க. ஓம் சக்தி.
- ஜடாயு, பெங்களூர்
இன்று மாலை 6.30 மணி காட்சி ருத்ரதாண்டவம் என் மகனுடன் பார்த்தேன். படம் அருமை…அரசியல் ஆதாயத்திற்காக விளிம்பு நிலை மக்களை தவறாக வழி நடத்தி மதமாற்றத்திற்கு துணை போகும் கிரிப்டோ கிறித்தவ அரசியல் வாதிகளை தோலுரித்திருக்கிறீர்கள்…போதைக்கு அடிமையாகி சீரழிந்து வரும் இளைய தலைமுறையை மீட்டெடுக்க விழிப்புணர்வூட்டுவதோடு கிரிப்டோ கிறித்தவர்கள் ஹிந்து பட்டியல் சலுகைகளை பெற்று அம்மக்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிப்பதையும் ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தி கிறித்தவர்களிடம் தசம பாகத்தை விட கூடுதலாக பணம் கறந்து வயிறு வளர்க்கும் போலி மத போதகர்களின் மோசடியையும் மிகச் சிறப்பாக தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள்… இயக்குநர் மோகன்ஜி க்ஷத்ரியன் அவர்களே தாங்கள் இது போன்ற சமூக அவலங்களை துணிச்சலுடன் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்கள் பலவற்றை படைத்து சமூக கடமையாற்ற எமது நல் ஆதரவும் வாழ்த்துக்களும் என்றென்றும் தங்களுக்கு உண்டு…
- கருங்குளம் மா முருகன்
தம்பி ராமையா, தீபா – இருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்குள் புகுந்து இயல்பாக நடித்துள்ளனர்.
அதுவும் தீபா சிறந்த குணசித்திர நடிகை என்பதை நிரூபித்துள்ளார். அட்டகாசம் தீபா அக்கா.
படத்தின் மெஸேஜ்- — துணிவோடு சொல்லப்பட்டுள்ளது.
இவைகளே படத்தின் ப்ளஸ் – ருத்ரதாண்டவம்
- வி. ரங்கநாதன்