கான்வெண்ட் பாணி ஏட்டுக் கல்வியே நமக்கான மீட்சி என்பது நீண்டகாலமாக நம்பப்படும் மாயை.
வனவாசிகளின் மீட்சிக்கு ”நாகரிக மனிதர்களின்” கல்வியே ஒரே வழி என்பது அதைவிடப் பெரிய மாயை. அது அவர்களை அவர்களுடைய வேரில் இருந்து பிடுங்கி அழிக்கவே செய்யும்.
அதிலும் போலீஸ் அராஜகம் – லாக் அப் மரணம் பற்றிய படத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கும் அவருடைய ஜாதியினருக்கும் கல்வியே விடுதலை என்று சொல்வது மிக மிகப் பெரிய மாயை. அபத்தம்.
கமல்ஹாசன் தனது சிவந்த மேனிக்கு எடுப்பாக இருக்குமென்று கறுப்பு சட்டைகள் அணிந்துகொண்டு தத்துவங்கள் பேசுவதுபோல், ஜெய் பீம் என்ற பெயர் வைத்தால் நல்ல மைலேஜ் கிடைக்கும் என்று அழகாகத் திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்கள்.
அவர் வேறு கற்பி, ஒன்று சேர், கலகம் செய் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். எனவே, கடைசி காட்சியில் பாதிக்கப்பட்ட வனவாசிக் குழந்தை பேப்பர் படிப்பதுபோல் காட்டியிருக் கிறார்கள். அதுதான் படத்தையே ஆகாயத்துக்கும் மேலே தூக்கியதாகப் புல்லரிப்புகள் வேறு.
விஷயம் என்னவென்றால், இந்த ”கற்பி ஒன்று சேர், கலகம் செய்” என்பதன் அருமையைப் புரிந்துகொண்டு படித்து, காவலர் தேர்வு எழுதி, அரசுப் பணியில் சேர்ந்தவர்தான் அந்த வனவாசியை லாக் அப்பில் போட்டு அடித்துக் கொன்றிருக்கிறார்.
இது ஏதோ வனவாசிகள் படிக்காமல் இருந்ததால் இந்த நிலைமை என்று சொல்லவே முடியாது. சாதிக் பாட்ஷா நிறையவே படித்திருந்தார். மாஞ்சோலைப் போராட்டத்தில் ஈடுபட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் பலருமே நன்கு படித்தவர்கள்தான்.
போலீஸ் அராஜகம் என்பது படித்தவர், படிக்காதவர் என்றெல்லாம் பார்க்காது. சாத்வி பிரக்ஞ்யா சிங் இதைவிடக் கொடூரமாக நடத்தப்பட்டார்.
வெறும் கல்வி ஒருவனைத் திருத்தாது. வெறும் கல்வி ஒருவருக்கு மீட்சி தராது.
அதிலும் உலக அளவில் மிஷனரிகள் இந்த பழங்குடிகளுக்குக் கல்வி தருகிறேன் என்ற போர்வையில் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கைக்கு அளவே கிடையாது.
இதனால்தான் வெரியர் எல்வின் போன்றவர்கள் வனவாசிகளை அவர்கள் அடையாளங்களோடு கலாசாரங்களோடு பாதுகாக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவத்தின் கோரப்பிடியில் இருந்து மீட்க இந்துத்துவ இயக்கங்கள் மேற்கொள்ளும் தர்மத்தின் வழியிலான கல்வியே உண்மையான மீட்சிக்கான வழி. அதுவே அந்த வனவாசிகளின் கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை மீட்டுத் தருவதோடு அவர்களுக்கு அரசியல், பொருளாதார வலிமையையும் தருகிறது.
சந்தேகம் இருப்பவர்கள் கிறிஸ்தவ கனடாவில் சமீபத்தில் பூர்வகுடிப் பள்ளிக்கூடங்களின் அடியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளையும், இந்து வட கிழக்கு மாநிலங்களில் பாஜக-இந்துத்துவ சக்திகளுக்குக் கிடைக்கும் ஆதரவையும் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.
வர்ணாஸ்ரம ஜாதிக் கொடுமையினால்தான் பட்டியல் ஜாதியினர் மதம் மாறினர் என்று சொல்பவர்கள் இந்தியாவின் முதல் கிறிஸ்தவ மாநிலமான நாகாலாந்தில் எந்த வர்ணாஸ்ரம அமைப்பு இருந்தது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்.
இன்றும் இந்து அமைப்புகள் சமூக சேவைகளில் ஈடுபடும் வனவாசி சமூகங்கள் அடைந்த முன்னேற்றத்தில் பாதி கூட கிறிஸ்தவத்தின் பிடியில் சிக்கிய வனவாசிகள் அடையவில்லை என்பதையும் சேர்த்தே யோசிக்கவேண்டும்.
உலக அரங்கில் கிறிஸ்தவம் வனவாசிகளைக் கொன்று குவித்ததுபோல், கலாசார அழிப்பை முன்னெடுத்ததுபோல் இந்தியாவில் செய்ய முடியாமல் போனதற்கு இந்து சனாதன தர்மத்தின் வேர்கள் இந்திய வனவாசி சமூகங்களில் ஆழமாக வேரூன்றியிருந்ததுதான் காரணம்.
உண்மையில் போலீஸ் அராஜகத்தினால் பாதிக்கப்பட்ட வனவாசிகளின் மீட்சி என்பது இந்த அம்சங்களைக் கணக்கில் கொண்டதாகவே இருக்கவேண்டும்.
ஆரம்பப் பள்ளி ஒன்றில் நீ படித்து பெரிய ஆளாக ஆனதும் என்னவாக விரும்புகிறாய் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் டாக்டர், கிரிக்கெட் வீர்ர் என்றெல்லாம் சொல்ல வனவாசி குழந்தை மட்டும் நான் போலீஸ்காரர் ஆவேன் என்று சொல்கிறது. அதைக் கேட்கும் அந்த கம்யூனிஸ்ட் ஆசிரியர் பதறிப்போகவே, குழந்தை நிதானமாக, யாரையும் அடிக்காத, அன்பான போலீஸ்காரராக ஆவேன் என்று கண்ணீர் லேசாகத் தேங்க, சொல்கிறது என்பதே விடுதலையைக் குறிக்கும்.
எனவே, வெறும் கல்வியைவிட தர்ம சிந்தனையோடு கூடிய கல்வியே மீட்சிக்கான வழி.
இந்த சிந்தனை ஒருவருக்கு ஏன் வராமல் போகிறதென்றால் அவருக்கு தர்ம சிந்தனை மனதில் கிடையாது என்பது மட்டுமல்ல; யாருக்காகப் பரிந்து பேசுவதாகக் காட்டிக் கொள்கிறாரோ அவர்கள் மீதான அன்பும் மனதில் இல்லை என்பதுதான் காரணம். உண்மையான அன்பு இருந்தால்தான் உண்மையான தீர்வை நோக்கி நகரமுடியும்.
எலி வேட்டை என்ற பெயரில்தான் இந்தப் படம் முதலில் எடுக்கத் திட்டமிடிருந்திருக்கிறார்கள். அந்தப் பெயருக்கு அரசியல் செல்வாக்கு கிடையாதென்பதால் ஜெய் பீம் என்ற பெயரைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள்.
பா.ரஞ்சித் அந்தப் பெயரைத் தரும் முன், கதை, அதாவது எந்த உண்மை நிகழ்வின் அடிப்படையிலான படம் என்று கேட்டிருப்பார். அந்த லாக் அப் டெத் உண்மை சம்பவத்தில் தலித் கிறிஸ்தவ காவலர்தான் முக்கிய குற்றவாளி என்பது அவருக்குத் தெரியவந்திருக்கும்.
அந்தக் காவலரை வேறு ஜாதியைச் சேர்ந்தவராக அதாவது எந்த ஜாதியைச் சீண்டினால் விளம்பரமும் இந்து சமூக மோதலும் ஏற்படும் என்று திட்டமிட்டு குரு என்று பெயர் சூட்டியிருக்கிறார். கூடவே அந்தக் காவலர் வன்னியர் என்பதைக் காட்டும் காட்சிகளையும் திட்டமிட்டே வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பான கேள்வி கேட்டவர்களுக்கு ஆடிட்டர் குரு மூர்த்தியின் பெயரைத்தான் வைத்திருக்கிறோம் என்று பதில் சொல்லியிருப்பார்கள்.
இப்போது அந்தத் திரைப்படத்தில் சொற்ப பங்களித்த கண்மணி குணசேகரன் வேதனையுடன் இவற்றைச் சொல்லிக் காட்டியதும் உடனே அவருடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து அந்தக் காட்சியை நீக்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்த பின்னர் அதைச் செய்வதில் எந்த நஷ்டமும் இல்லையே.
இதே படத்தில் நெற்றியில் குங்குமத்தை தீர்க்கமாக வைத்திருக்கும் ஒரு கதாபாத்திரம் ஹிந்தியில் ஒரு வாக்கியம் பேசியதற்காக பளாரென்று கன்னத்தில் அறைகிறான் பாழ் நெற்றியுடனான ஒரு காவல்துறை கயவன்.
இந்தக் காட்சியும் திட்டமிட்டு ஒரு பிரிவினரை அவமானப்படுத்தும் காட்சிதான். அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்தக் காட்சியை நீக்கமாட்டார்கள். வேண்டுமானால் இன்னும் ரெண்டு அடி கூடுதலாக அடிப்பார்கள்.
இந்த உண்மைச் சம்பவத்தில் பிராமணரையோ, இந்துத்துவரையோ வில்லன் போலீஸாகக் காட்ட வழியில்லாத நிலையில் இந்தக் கதையை எப்படி படமாக எடுக்க முன்வந்தார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போதுமே வன்னியராகக் காட்டியிருக்கும் காலண்டரை மாற்றிவிட்டு சாமி படம் போட்ட காலண்டரைக் காட்டப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அது நிச்சயம் தலித் கிறிஸ்தவ காவலரின் மேரி சாமியாக இருக்காது. மாரியம்மா சாமியாகத்தான் இருக்கும்.
இந்த வெறுப்பு அரசியலே மனதில் இருந்ததால்தான் இது மாதிரியான படங்கள் கலையின் வெளிப்பாடாக அமையாமல், கலைஞனின் அற உணர்ச்சியுடன் வெளிப்படாமல், அபாய அரசியலின் வகைமாதிரிகளாகவே குறுகிப்போகின்றன. அவர்களுக்கு அது ஒரு பெரிய குறையாகவே தெரியாது. ஏனென்றால் அவர்களின் இலக்கே அதுதானே.
***
இந்தத் திரைப்படம் தொடர்பாக பொதுவெளியில் பேசப்படும் விஷயங்களுக்கான எதிர்வினை மட்டுமே இது. இதைப் படித்துவிட்டு யாரும் அந்தப் படத்தைப் பார்த்துவிடவேண்டாம்.
நமக்குக் கடமைகள் நிறைய இருக்கின்றன.
கூண்டுக்குள் அடைந்துவிடவேண்டாம்.்
- விமர்சனக் கட்டுரை: பி ஆர்.மகாதேவன்