சூப்பர் ஸ்டார் – சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு எந்த போட்டியுமில்லாமல் அல்லது போட்டியை ஓரங்கட்டி எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் அண்ணாத்த . ரஜினி – நயன்தாரா ஜோடி சேர்ந்த தைரியத்தில் அதரப்பழசான அண்ணன் தங்கை பாச டெம்ப்ளேட் கதைக்கு அதை விட அதரப்பழசான திரைக்கதையுடன் அண்ணாத்த யை களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா …
71 வயதிலும் இன்றைய நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் படி துடிப்பாக இருக்கிறார் ரஜினி. பச்சக்கிளி என்று அவர் சூரியை அழைப்பதே தனி ஸ்டைல் . ஸ்டேஷனில் பிரகாஸ்ராஜை கலாய்ப்பது , முறைப்பெண்கள் மீனா , குஷ்பு வை சமாளிப்பதென என எல்லாமே ரஜினி ஸ்டைல் கலகலப்பு . வக்கீல் நயன்தாரா ரஜினி யை பார்த்தவுடனே எந்த வாதமும் பண்ணாமல் விழுந்து விடுகிறார் . கீர்த்தி சுரேஷ்க்கு இயக்குனர் இது சன் டிவி யின் சீரியல் என்று சொல்லிவிட்டார் போல படம் முழுவதும் ஒரே மாதிரியான சோக முகபாவம் . வில்லன்கள் பெரிய எதிர்ப்பு இல்லாமல் சரணடைவது சறுக்கல் …
இமானின் இசையில் சாரக்காற்று பாடல் வருடுகிறது மற்றபடி பிண்ணனி இசை வெறும் இரைச்சல் . ரஜினி யின் எனர்ஜி , சன் மார்க்கெட்டிங் , மெகா ரிலீஸ் எல்லாமே ப்ளஸ் மற்றவை எல்லாம் மைனஸ் தான் . மாஸ் ஹீரோ படத்தில் கதை லாஜிக் எல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டாம் ஆனால் திரைக்கதை என்கிற வஸ்துவையும் சிவா தீபாவளி தள்ளுபடியில் விட்டது தான் வேதனை …
அண்ணாத்த கிராமத்தில் இருக்கும் வரை அப்படியிப்படி நம்மை சமாளித்து விடுகிறார் ஆனால் கொல்கத்தா போனவுடன் வில்லன்களோடு சேர்ந்த நம்மையும் வதம் செய்கிறார் . தீபாவளி விடுமுறையாலும் , பெரிய போட்டி இல்லாததாலும் முதல் வாரம் அண்ணாத்த வசூல் செய்வார் . மற்றபடி சீரியலை மிஞ்சும் ஓவர் செண்டிமென்ட் , ஒட்டாத ஆக்சன் , திருப்பாச்சி கதை , வேதாளம் காட்சிகள் என கம்பீரமாக நிற்காமல் அந்தரத்தில் தொங்குகிறார் இந்த அண்ணாத்த …
ரேட்டிங்க். : 2*
- விமர்சனம்: அனந்து
வீடியோ விமர்சனத்தை கீழே காணவும் …