துணிவு படத்தில் ”ரவி”ந்தர் இது தமிழ்நாடு.. உன் வேலையை இங்க காட்டாத” என அஜித் பேசும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கங்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. திரையரங்க வாயில்களில் கட்டவுட்டுகளும் பேனர்களும் நிரம்பி வருகின்றன. துணிவு படம் குறித்து அப்படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் டைரக்டர் ஹெச் வினோத் ஆகியோர் படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வந்தனர். மக்களின் மீது வங்கிகள் நடத்தும் சர்வாதிகார போக்கை சொல்லும் விதத்தில் துணிவு படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். துணிவு திரைப்படம் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட்தான் என கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துணிவு படத்தில் பன் பண்ணியுள்ளார் அஜித் என ரசிகர்கள் கூறி உள்ளனர்.
அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பது இயக்குனர் வினோத்திற்கு இந்தப் படத்தில்தான் நன்றாகப் புரிந்திருக்கிறது. காட்சிக்குக் காட்சி அஜித்தை ஆட விட்டும், அதிரடி செய்யவிட்டும், சிரிக்க விட்டும், நடக்கவிட்டும், நடிக்கவிட்டும் இந்த பொங்கல் போட்டியில் ‘ஆட்ட நாயகன்’ விருதை வாங்கிக் கொடுத்துவிட்டார்.
சென்னையில் உள்ள யுவர்ஸ் பேங்க் என்ற பேங்கில் இருந்து 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்க உதவி கமிஷனரும் சிலரும் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் கொள்ளையடிக்கச் சென்ற அதே பேங்க்கில் சர்வதேச கேங்ஸ்டர் ஆன அஜித் சென்று அந்தக் கொள்ளையர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அவரைப் பிடிக்க கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அந்த பேங்க்கில் கொள்ளையடிப்பது யார் என்ற உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் அஜித். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு அதிரடி ஆக்ஷன் கதையில் தங்களது வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் எப்படியெப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. மியுச்சுவல் பண்ட், மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு என பல விஷயங்களால் மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என படம் பார்ப்பவர்களுக்கும் சேர்த்து கொஞ்சம் பாடம் நடத்துகிறார்கள்.
மங்காத்தா படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் சர்வதேச கேங்ஸ்டர் ஆக அஜித். படம் ஆரம்பமான சிறிது நேரத்திலேயே அவரது ‘என்ட்ரி’ அதிரடியாக ஆரம்பமாகிறது. அந்த அதிரடி அப்படியே கடைசி வரை இருப்பதுதான் படத்திற்குப் பெரிய பிளஸ். இப்படி ஒரு ஸ்டைலிஷ் பெர்பாமன்ஸை அஜித்திடம் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். படம் முழுவதும் அவரது ஒன் மேன் ஷோ தான். தன் ரசிகர்கள் கொண்டாடுவதற்காகவே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அஜித்தின் பார்ட்னர் ஆக மஞ்சு வாரியர். தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு ஆக்ஷன் படத்தில் ஹீரோயினுக்கும் இப்படி ஒரு முக்கியத்துவமா என ஆச்சரியப்பட வைக்கிறது அவரது கதாபாத்திரமும், நடிப்பும்.
நேர்மையான கமிஷனராக சமுத்திரக்கனி. கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர், பேங்க் மேனேஜர் ஆக ஜிஎம் சுந்தர், மெயின் வில்லனாக பேங்க் சேர்மனாக ஜான் கொகேன், டிவி நிருபராக மோகனசுந்தரம், இன்ஸ்பெக்டராக பகவதி பெருமாள். கிடைக்கும் கேப்பில் இவர்களும் அவ்வப்போது ஸ்கோர் செய்கிறார்கள்.டெக்னீஷியன்களில் அதிரடியான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள சுப்ரீம் சுந்தர் தான் முதலில் பாராட்டப்பட வேண்டியவர். ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு இன்னும் பரபரப்பைக் கூட்டுகிறது.
படத்தில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் வெடித்தது, எத்தனை பாம்கள் வெடித்தது என கணக்கெடுக்க முடியாது. வழக்கம் போல யார் என்ன சுட்டாலும் ஹீரோவுக்கு லேசாக மட்டுமே காயம் ஏற்படும் என்பது உள்ளிட்ட லாஜிக் மீறல்கள் படத்தில் நிறையவே உண்டு.தேவையற்ற காட்சிகள் என்று எதுவுமில்லை, பிளாஷ்பேக் காட்சிகளைக் கூட சுருக்கமாகவே சொல்லி முடித்திருக்கிறார்கள். வங்கிகளில் தரும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட வேண்டாம், பணத்திற்காகப் போராசைப்பட வேண்டாம் என கடைசியாக தேவையான ஒரு மெசேஜையும் சொல்லி முடித்திருக்கிறார்கள். ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ புராஜக்ட்ஸ் தயாரித்துள்ள துணிவு படத்துக்கு இயக்கம் – வினோத்,இசை – ஜிப்ரான்
அஜித்குமார், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி நடித்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை என தனது ரசிகர்களை கடந்த இரண்டு படங்களில் நடித்த அஜித். இந்தப் படத்தில் அவரது ரசிகர்களை முழுவதுமாகத் திருப்திப்படுத்திவிட்டார் என்றே சொல்லலாம்.