[prisna-google-website-translator]

கண்ணை நம்பாதே-படம் எப்படி?..


images 34 2 - Dhinasari Tamil

அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே.

தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் மகளைக் காதலித்து வருகிறார் அருண்(உதயநிதி). ஒருநாள் இந்தக் காதல் விவகாரம் தெரிய வர காதலியின் தந்தை அருண் உடனடியாக வீட்டைக் காலி செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறார்.

அருணும் அவரின் நண்பரும் வீடு தேடி அலைந்து இறுதியாக வாடகைக்கு ஒரு வீட்டைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், ஏற்கனவே அந்த வீட்டில் சோமு(பிரசன்னா) வசித்து வருவதும் அவர் ஓரிரு நாள்களில் காலி செய்துவிடுவார் என தெரிந்ததும் அருண் அந்த வீட்டில் குடியேற ஒப்புக்கொள்கிறார். அன்றிரவு சோமுவும் அருணின் நண்பரும் மது அருந்திக்கொண்டிருக்க அருண் சாலையில் ஒரு விபத்தைப் பார்க்கிறார். உடனடியாக அருகே சென்றதும் காரில் ஒரு பெண் வாகனத்தை ஓட்ட முடியாத நிலையில் இருப்பதைக் கண்டு அப்பெண்ணின் வீட்டில் அவரை இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் செல்கிறார். 

அந்தப் பெண் வீட்டில் இறங்கிக்கொள்வதுடன் தன் காரை அருணிடம் கொடுத்து காலையில் கொண்டு வரச் சொல்லி தனக்கு உதவியதற்காக அருணுக்கு உதவி செய்கிறாள். நண்பர்களிடம் இந்த நிகழ்வைச் சொல்லும் அருணுக்கு அடுத்த நாள் காலையில் அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்தப் பெண்ணை அவர் வீட்டில் இறக்கிவிட்டாரோ அதே பெண் காரின் பின்புறத்தில் சடலமாகக் கிடக்கிறார். உடனடியாக, இதுகுறித்து சோமுவிடம் சொல்கிறார். யார் அந்தப் பெண்? எப்படி அவர் இறந்தார்? சடலத்தைக் காருக்குள் போட்டது யார்? என்கிற கேள்விகளுடன் திரைக்கதை சூடு பிடிக்கிறது.

படத்தின் தலைப்பிற்கு ஏற்றதுபோல ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் யாரை நம்புவது யாரைச் சந்தேகிப்பது என்கிற வினாக்களுடன் அடுத்ததடுத்த நகர்வுகள் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது.

குறிப்பாக படத்தின் முதல்பாதி வரையிலான காட்சிகள் சுவாரஸ்யமான திருப்பங்களுடனும் இரண்டாம்பாதி திருப்பங்களுக்கான முடிச்சுக்களை அவிழ்ப்பதும் என நல்ல திரில்லர் கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.

images 35 2 - Dhinasari Tamil

அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவானாலும் அதைக் காட்சிப்படுத்திய விதத்தில் இறுதிவரை கவனத்துடன் பார்க்க வைத்திருக்கிறார்கள்.

பிரசன்னாவின் நடிப்பு படத்திற்குக் கூடுதல் பலமாக இருந்தாலும் காவல் அதிகாரியாக வரும் மாரிமுத்து கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருந்தாலும் துப்பாக்கியை எடுக்கும் காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார்.
  துவக்கத்திலிருந்தே பதற்றமில்லாமல் பிரச்னையை அணுகுவதும் முக்கியமான திருப்பத்தில் தான் யார் என வெளிப்படுத்தும் இடங்களில் தன் எதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஆனால், கிளைமேக்ஸ் காட்சியின் சினிமாத்தனம் ரசிக்கும் படியாக இல்லை.  நாயகனாக இருந்தாலும் உதயநிதிக்கு பெரிய ஹீரோயிச சண்டைக்காட்சிகள் இல்லாமல் சாதாரண நபராக காட்டியதில் இயக்குநர் வென்றிருக்கிறார்.
சதிஷ், வசுந்தரா, ஆத்மிகா ஆகியோரும் தங்களுக்கான காட்சிகளில் தனியாக தெரிகின்றனர்.ஸ்ரீகாந்த் மற்றும் பூமிகா இணைந்து வரும் காட்சிகள் கச்சிதமாக எடுக்கப்பட்டுள்ளன.

இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதியுடன் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு கை கொடுத்திருக்கிறது. வசனங்கள், ஒளிப்பதிவு ஆகியவை சில இடங்களில் நெருடலைத் தருகின்றன. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது கண்ணை நம்பாதே.

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply