கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டிருந்தது உலகம்.
தடுப்பூசி தயாரிக்க வேண்டும் எனப் பிரயத்தனப்பட்ட நேரத்தில் ஐந்து நாடுகள் மட்டுமே வைரஸைப் பிரித்தெடுத்தெடுப்பதில் வெற்றி கண்டு தடுப்பூசிகள் தயாரித்தன. நம் பாரதமும் அதில் ஒன்று.
ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ள வெளி நாட்டு மருந்துகளை நம் நாட்டில் சந்தைப்படுத்த, குறிப்பாக pfizer-Moderna ஊடகங்களைக் கைகொண்டு நம் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி பலவீனமானது, தடுப்புச்சக்தி குறைந்தது என்றும் தவறான செய்திகளைப் பரப்பி பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியது.
சில அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் இதற்கு இரையானதுதான் சோகம். ஆனால் மனவுறுதியுடன் போராடி, உலக சுகாதார நிறுவனத்தை நம் தடுப்பூசியை ஏற்க வைத்ததுதான் ICMR மற்றும் நம் அரசின் வலிமையும் வெற்றியும்.
இறுதியில் நம் தயாரிப்பு வலிமையானதும், பின்விளைவுகள் மிகச் சொற்பமானது என்றும் அதற்கும் மேலாக, பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும்தான் உச்சம்.
இதை இப்படத்தில் அழகாக படிப்படியாக படமாக்கி நமக்குப் படைத்த படக்குழுவைப் பாராட்டியே ஆக வேண்டும்.
தகுந்த உற்சாகமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டால் நம் நாட்டு விஞ்ஞானிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; மிஞ்சியவர்கள் என நிரூபித்தது தடுப்பூசியும், பின்னர் இஸ்ரோவின் சந்திராயன் வெற்றியும்.
கொரோனா பெருந்தொற்றின் விளைவுகளை எப்படி மருத்துவ உலகம் எதிர்கொண்டு தியாகங்கள் பல புரிந்து நாட்டு மக்களைக் காப்பாற்றியதோ, அதே அளவு தடுப்பூசி தயாரிக்க நம் நாட்டு விஞ்ஞானிகள் மிகக்குறைந்த கால அவகாசத்தில் அசாத்திய அர்ப்பணிப்பும் தியாகமும் செய்து வெற்றி பெற்ற வரலாற்றை விளக்கும் இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.
சற்றே பிசகினாலும் அரசியல் சாயம் பூசப்படும் அபாயம் இருந்தும்,அதில் மாட்டிக் கொள்ளாமல் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய படக்குழுவினருக்கும், நடிகர்களுக்கும் பாராட்டுகள்.
நம் தேசத்தின் மீது மேலும் ஒருபடி பற்றை இறுக்கும் இப்படத்தை நம் தேசத்தை நேசிப்போர் அனைவரும், குறிப்பாக இளைய சமுதாயம் அவசியம் காண வேண்டும். ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்