சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா – பார்த்திபன் – பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால்
பப்ளிசிட்டிக்காக வழக்குகள் போடும் பெட்டிஷன் பெத்துராஜ் ( பாக்யராஜ் ) 15 வருடங்களுக்கு முன் ஜோதி எனும் வட நாட்டு பெண்ணை குழந்தைகளை கடத்தி கொலை செய்ததற்காகவும், இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொன்றதற்காகவும் போலீசார் என்கவுண்டர் செய்த வழக்கை தூசி தட்டி எடுத்து தன் மகள் வெண்பா பெத்துராஜிடம்
( ஜோதிகா ) வாதாட கொடுக்கிறார் . குழந்தைகளை கொலை செய்த அந்த சைக்கோ கொலைகாரி ஜோதி யார் ? அந்த கொலைகளை அவர் தான் செய்தாரா என்பதை நீதிமன்றத்தில் வாத பிரதி வாதங்களுடன் விளக்குவதே பொன்மகள் வந்தாள் …
ஐந்து ரூபா கொடுத்தால் ஐநூறுக்கு நடிக்கும் ஜோதிகா இதில் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல் ஆனால் இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தும் படம் முழுக்க இவரே டாமினேட் செய்வது போரிங்க் . அரசு வழக்கறிஞராக வரும் பார்த்திபன் முதலில் பிரமிக்க வைத்து பின் பம்மி விடுகிறார் . மரியாதைக்காக மல்லாடும் பெரிய மனுஷராக தியாகராஜன் கச்சிதம் . கோர்ட்டில் பார்த்திபனையே மடக்கும் சீனில் பாக்யராஜின் சீனியாரிட்டி பளிச்சிடுகிறது . நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் கேரக்டரில் தெளிவு இல்லை …
ஒரு தாயின் சபதம் , விதி , நான் சிவப்பு மனிதன் இவையெல்லாம் கோர்ட் சீன்களுக்காகவே பேசப்பட்டு ஹிட் ஆனவை . சமீப காலத்தில் வந்த மனிதன் , நேர்கொண்ட பார்வை எல்லாம் ரீ மேக்காக இருந்தாலும் மேக்கிங்கால் வெற்றியடைந்த படங்கள் . அந்த வரிசையில் ஒரு கோர்ட் டிராமாவை தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . அதிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை பற்றி பேசும் கதையை கையில் எடுத்ததற்கு கூடுதல் பாராட்டுக்கள் . சரியான நட்சத்திர தேர்வு , ஒரே லொகேஷனில் வைத்தே படத்தை சிக்கனமாக முடித்தது , லக்ஷ்மி சரவணகுமாருடன் சேர்ந்து எழுதிய கூர்மையான வசனங்கள் , படத்தை எங்கும் அனாவசியமாக அலையவிடாமல் இரண்டு மணி நேரத்தில் முடித்தது இவையெல்லாம் இயக்குனருக்கு ப்ளஸ் …
கோர்ட் டிராமா படம் எனும் போது நிறைய மர்ம முடிச்சுகளை போட்டு
அவிழ்ப்பதில் தான் இருக்கிறது சூட்சுமம் ஆனால் அதை விட வெறும் வசனங்களாலேயே படத்தை ட்ராமா போல கொண்டு போனது சறுக்கல் . இயக்குனர் நல்ல சீன்களுக்காக இன்னும் மெனக்கட்டிருந்தால் கலக்கியிருக்கலாம் . ஜட்ஜாக வரும் லேடியை பெத்துராஜ் கோர்ட்டில் மாமி என்று அழைக்கிறார் . ஜட்ஜிடம் இப்படியெல்லாம் தெனாவெட்டாக பேசினால் பொத்துராஜ் என்று வாயிலேயே போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள் . காமெடி என்கிற பெயரில் வைக்கப்பட்ட கேவலமான சீனுக்கு இது ஒரு உதாரணம் …
பெண்களுக்கு ஆதரவாக ஜோதிகா பேசும் போது கோர்ட்டில் நிறைய பேர் அழுகிறார்கள் , நமக்கு தான் காட்சியில் எந்த அழுத்தமும் இல்லாததால் ஒரு எழவும் வரவில்லை . பிங்க் படத்தில் இதே போன்ற சீன்களும் , வசனங்களும் பெரும் வரவேற்பை பெற்றவை . இந்த இடத்தில் தனக்கான பெரிய வாய்ப்பை இயக்குனர் நழுவ விட்டிருக்கிறார் . அதிலும் வெண்பா என்று பெயரை வைத்துக்கொண்டு ஜோதிகா தனது மோசமான உச்சரிப்பால் தமிழை நிறையவே துன்பா செய்கிறார் . சாட்சி , ஆதாரங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல் வில்லனை வெறுப்பேற்றியே உண்மையை வரவைப்பதெல்லாம் பி.எஸ்.வீரப்பா காலத்து ஃபார்முலா . பெண்களை டார்கெட் ஆடியன்ஸாக வைத்து வந்திருக்கும் படம் ஓடிடி யில் ரிலீசாகி இருப்பது கூடுதல் பலம் . ஏனெனில் சீரியலுக்கு இது எவ்வளவோ மேல் மற்றபடி ஒரு முழு நீள படமாக பொன்மகள் வந்தாள் பொருள் பாதி தந்தாள் …
ரேட்டிங்க் : 2.75 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 41