[prisna-google-website-translator]

தந்தையின் குரலை தனித்துவமாய் வெளிப்படுத்திய ‘உலவும் தென்றல்’!

இசைத் தென்றல் என்று போற்றப்படுபவரும், தமிழ் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகருமான மறைந்த திருச்சி லோகநாதன் அவர்களின் அருமைப் புதல்வர் மதிப்பிற்குரிய சக்கரவர்த்தி என்கின்ற தீபன் சக்கரவர்த்திக்கு டிச.4 இன்று பிறந்த நாள். அவருக்கு நம் வாழ்த்துகள்!

1975 களில் தனது தந்தையாருடன் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் மேடை இசைக் கச்சேரிகளில் பாடி வந்தார். கர்நாடக சங்கீதம், கஜல் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு, அதன் அடிப்படை தெரிந்து இனிமையாகப் பாடுவதில் வல்லவர் தீபன் சக்கரவர்த்தி.

இவர் பாடினால் மெய் மறந்து நாம் நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு மதுரமான குரலுக்கு சொந்தக்காரர் தீபன் சக்கரவர்த்தி.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், ஜி.கே.வெங்கடேஷ் ஆகியோரைத் தனது குருவாக மதித்து வருபவர். இவர்களால் தான் இவர் திரைத்துறையில் இன்றும் புகழ்பெற்ற பாடகராக விளங்கி வருகிறார்.

இன்னும் சொல்லப் போனால் இசைஞானி இளையராஜா என்ற ஒருவர் இல்லை என்றால் தீபன் சக்கரவர்த்தி போன்ற திறமையான பாடகர்கள் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள். இதுதான் உண்மை.

திரு.சக்கரவர்த்தி அவர்களை “எனக்காக காத்திரு” திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இரண்டு பாடல்கள் பாடவைத்திருந்தார். “ஓ…நெஞ்சமே இது உன் ராகமே” மற்றும் “பனிமழை விழும் பருவக்குயில் எழும்” ஆகிய இரண்டு பாடல்களை ஜானகி மற்றும் எஸ்.பி சைலஜா இருவருடன் பாடினார். அப்போது தான் இசைஞானி இளையராஜா அவர்கள் சக்கரவர்த்தி என்ற பெயருக்கு முன்னால் தீபன் என்று வைத்துக் கொள் என்று சொல்லி தீபன் சக்கரவர்த்தி என்று மாற்றி திரையுலகில் இவரைப் புகழ்பெறச் செய்தார். இதுதான் இவர் பாடிய முதல் திரைப்படம். ஆனால் இவர் இரண்டாவதாக பாடிய “நிழல்கள்” திரைப்படம் முதலாவதாக வெளிவந்து இவருக்குப் புகழைத் தந்தது.

இசைஞானி இளையராஜா இசையில், கங்கை அமரன் அவர்கள் பாடலை எழுத, உமா ரமணன் அவர்களுடன், “பூங்கதவே தாழ்திறவாய்” என்ற பாடலை தீபன் சக்கரவர்த்தி பாடியது பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

முதல் பாடலே மங்கல இசை முழங்க இவரை வரவேற்றது.

“பூங்கதவே தாழ்திறவாய்” என்ற பாடலை மிகவும் அனுபவித்து, நடுநடுவே ம்ம்ம்….ம்ம்ம் என்ற ஹம்மிங்குடன் பாடி, நம்மை மெய் மறக்கச் செய்து அசத்தியிருப்பார் தீபன் சக்கரவர்த்தி.

அதுமட்டுமல்ல, “காதல் ஓவியம்” என்ற படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் “நதியில் ஆடும் பூவனம்” என்ற பாடலுக்கு முன்னால், ஆதிசங்கரர் அருளிய சௌந்தர்யலஹரி ஸ்லோகத்திலிருந்து ஒன்றை, இப்பாடலுக்கு முன் சேர்த்து இசையமைத்திருப்பார்.

“அவித்யானாம் அந்தஸ்திமிரமிஹிர த்வீப நகரி

ஜடானாம் சைதன்ய ஸ்தபகமகரந்த ஸ்ருதிஜரி

தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்மஜலதௌ

நிமக்னானாம் தம்ஸ்டரா முரரிபு வராஹஸ்ய பவதி!” – —சௌந்தர்யலஹரி.

என்ற பாடலை ஆரம்பத்தில் தீபன் சக்கரவர்த்தி அவர்களைப் பாடச் செய்திருப்பார் இசைஞானி இளையராஜா.

மிகவும் அழகாக தீபன் சக்கரவர்த்தி அவர்கள் அந்தப்பாடலைத் தனது மதுரமான குரலில் ஆரம்பித்து வைக்க, கானக்குயில் எஸ்.ஜானகி அவர்களும், பாடும்நிலா எஸ்.பி.பாலு அவர்களும் தொடர்வார்கள்.

“நதியிலாடும் பூவனம்

அலைகள் வீசும் சாமரம் – என்று எஸ்.ஜானகி பாட,

“காமன்சாலை யாவிலும்

ஒரு தேவரோஜா ஊர்வலம்

நதியிலாடும் பூவனம்

அலைகள் வீசும் சாமரம்” என்று பாடும் நிலா பாலு அவர்கள் பாடும்போது இப்பாடல் இசைஞானி இளையராஜா இசையில் நம்மை சிலிர்க்க வைக்கும்.

ஜி.கே.வெங்கடேஷ் இசையில், “நெஞ்சில் ஒரு முள்” திரைப்படத்தில்,

“ராகம் புதுராகம் இனி நாளும் பாடலாம்” என்ற பாடலையும் இனிமையாகப் பாடியிருப்பார்.

ஷியாம் இசையில், “வா இந்தப்பக்கம்” என்ற திரைப்படத்தில், “ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் கேட்குமே அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே” என்ற பாடலை எஸ்.ஜானகி உடன் தீபன் சக்கரவர்த்தி பாடியது மிகவும் 👌 அருமை.

சி.ரவி என்பவர் இசையில், “ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து” என்ற பாடலை நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்காக “ஸ்பரிசம்” திரைப்படத்தில் எஸ்.பி.சைலஜா உடன் மிகவும் அழகாகப் பாடியிருப்பார்.

இவர் பாடிய பாடல்களின் பட்டியலில் ஒரு சில:

  1. “ஓ…நெஞ்சமே இது உன் ராகமே” – எஸ்.ஜானகி உடன்.

படம்: எனக்காக காத்திரு.

  1. “பனிமழை விழும் பருவக்குயில் எழும் – எஸ்.பி.சைலஜா உடன்.

படம்: எனக்காக காத்திரு.

  1. ராமனுக்கே சீதை – சீதை

கண்ணனுக்கே ராதை – எஸ்.ஜானகி உடன்.

படம்: ராணித்தேனீ.

  1. “சம்போ சம்பா சாமி சரணம்”

படம்: ராணித்தேனீ படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்காகப் பாடினார்.

  1. “பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ” – படம்: காதல் ஓவியம்.
  2. “நதியிலாடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்” – பாடும் நிலா பாலுசார், எஸ்.ஜானகி ஆகியோருடன்.

படம்: காதல் ஓவியம்.

  1. “ஆனந்த தாகம்” – எஸ்.ஜானகி உடன். படம்: வா இந்தப்பக்கம்
  2. “ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து” – எஸ்.பி.சைலஜா உடன். படம்: ஸ்பரிசம்.
  3. “செவ்வந்தி பூக்களில் செய்தவீடு” – உமா ரமணன் உடன். படம்: மெல்லப் பேசுங்கள்.
  4. “கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ” – படம்: மெல்லப் பேசுங்கள்.
  5. “அந்தி மாலையில் மலர் சாலையில் ஒரு காதல் ஊர்வலம்” – எஸ்.ஜானகி உடன். படம்: கண்ணத் தொறக்கணும் சாமி. கங்கை அமரன் இசையில்.
  6. அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப்போச்சுண்ணே” – சாமுவேல் குரூப், ஜி.வித்யாதர் ஆகியோருடன்.

படம்: கோழிகூவுது.

  1. பூங்கதவே தாழ்திறவாய்” – உமா ரமணன் உடன். படம்: நிழல்கள்.
  2. “தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது தம்பி தங்கக்கம்பி” – மலேசியா வாசுதேவன், மனோ, எஸ்.என்.சுரேந்தர் ஆகியோருடன்.

படம்: கோபுரவாசலிலே.

  1. “அரும்பாகி மொட்டாகி பூவாகி” – இசைப்பேரரசி பி.சுசிலா உடன். படம்: எங்க ஊரு காவக்காரன்.
  2. மலையோரம் குயில் கூவக் கேட்டேன் – படம்: இணைந்த கைகள். மனோஜ் கியான் இசையில்.
  3. “கல்யாணத் தரகரே தரகரே” – மலேசியா வாசுதேவன், மனோ, எஸ்.என்.சுரேந்தர் ஆகியோருடன்.

படம்: ஈரமான ரோஜாவே.

  1. “அன்பிருக்கும் உள்ளங்களே என்னருமை செல்வங்களே” – பாடும் நிலா எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா ஆகியோருடன்.

படம்: வாழ்க்கை.

  1. “முகிலுக்குள்ளே ஒரு நிலா” – சங்கர் கணேஷ் இசையில், “நடமாடும் சிலைகள்” திரைப்படத்தில்.
  2. “வேனாண்டா அட விட்டுருங்கடா” – நடிகர் செந்தில் உடன். படம்: நம்ம ஊரு நல்ல ஊரு.
  3. “ராஜகோபாலா ஒரு தோசை சுட்டாளா” – டி.கே.கலா உடன். படம்: ஸ்பரிசம்.
  4. “அண்ணா நாமம் வாழியவே” – மலேசியா வாசுதேவன் உடன். படம்: பொருத்தம்.
  5. “அபிராமவல்லியின் திருவருளே – நம்மை அனுதினம் காத்திடும் பொன்மகளே” – எஸ்.ஜானகி உடன். படம்: ஓம்சக்தி. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்.
  6. “வந்தவர்கள் வந்தகுடி மண்ணுலகம் வாழ்ந்தகுடி மானமுள்ள எங்ககுடியே” – சீர்காழி ஜி.சிவசிதம்பரம் அவர்களுடன். படம்: முறைமாமன்.
  7. “மானாமதுரை மல்லிகை நான் மச்சாமச்சான் கைசேர” – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி ஆகியோருடன். படம்: பிரியமுடன் பிரபு.
  8. “Happy New Year கொண்டாடுவோம்” – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, சுந்தர்ராஜன் ஆகியோருடன். படம்: ஓ…மானே மானே.
  9. “A for Ambika” – மனோ, சுவர்ணலதா ஆகியோருடன். படம்: நான்பேச நினைப்பதெல்லாம். சிற்பி இசையில்.
  10. “காயாத கானகத்தே” – படம்: வேலுண்டு வினையில்லை திரைப்படத்தில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்காக. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்.
  11. “ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா” – இசைஞானி இளையராஜா இசையில் அவருடன் இணைந்து. படம்: அக்னி நட்சத்திரம்.
  12. “ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லே காஞ்சுபோச்சுடா” – இசைஞானி இளையராஜா இசையில் அவருடன் இணைந்து. படம்: இதயம்.
  13. “வெங்காய சாம்பாரும் வேகாத சோறும்” – டி.கே.எஸ்.கலைவாணன், எஸ்.என்.சுரேந்தர் ஆகியோருடன். படம்: பன்னீர் புஷ்பங்கள்.
  14. “இது கனவுகள் விளைந்திடும் காலம்” – எஸ்.ஜானகி உடன். படம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்.
  15. “ராகம் புதுராகம் இனி நாளும் பாடலாம்” – எஸ்.பி.சைலஜா உடன். படம்: நெஞ்சில் ஒரு முள்.

தவிர, திருமதி. வாணி ஜெயராம் அவர்களுடன், “மழைக்காலப் பறவைகள்” என்றொரு ஆல்பம்.

“ஓ உயிர் சிலையே
முகத்திரை மூடிய நிலவே” என்ற பாடல்.

சிவன் – திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, ஐயப்பன், முருகன் என ஏராளமான பக்திப் பாடல்கள் தனித்தும், தனது உடன்பிறந்த சகோதரர் திரு.டி.எல்.மகாராஜன் உடனும் பாடியுள்ளார்.

சங்கீத கலாநிதி, பத்மஸ்ரீ மதிப்பிற்குரிய திரு.டி.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம், இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து முறையாக இசைப் பயிற்சி மேற்கொண்டவர் தீபன் சக்கரவர்த்தி.

ராணித்தேனீ திரைப்படத்தில் தீபன் சக்கரவர்த்தி தான் ஹீரோ. ஹீரோயின் வனிதா கிருஷ்னசந்தர். இப்படத்தில் நடித்த தீபனிடம் இசைஞானி இளையராஜா அவர்கள், நடிப்பதற்கு என்று நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்க, பாடகர்கள் அதுமாதிரி நிறைய பேர் இருக்காங்களா? அதனால உனக்கு எதுல திறமை இருக்கோ அதை இன்னும் நன்கு வளர்த்துக்கோ. உனக்கு குரல் ரொம்ப நன்னாருக்கு. அதனால நீ அதுல கவனம் செலுத்து என்று அறிவுரை கூறியதை தீபன் அவர்கள் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார்.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் 150 வது திரைப்படம் “அரசாங்கம்”. விஜயகாந்த் அவர்கள் தயாரித்து நடிக்க, ஆர்.மாதேஷ் என்பவர் இயக்கினார். இப்படத்தில் தீபன் சக்கரவர்த்தி அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜயகாந்த் நடித்த “நெரைஞ்ச மனசு” திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

திரு.தீபன் சக்கரவர்த்தி அவர்கள் தனது தந்தையார் பாடிய பழைய பாடல்களை அவர் மாதிரியே பல மேடைகளில் பாடி அசத்தியவர். உலவும் தென்றல் என்ற பெயரில் பல அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தனது தந்தைக்குப் பிறகு தமிழ் திரையுலகில் தீபன் சக்கரவர்த்தி அவர்களின் புகழும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply