தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது
தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பு செய்யப்பட்டுள்ள ராமாயணம் தொடர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாக பிரசார் பாரதி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஷாஷி சேகர் கூறியுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், புதிதாகச் சில தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களின் இறுக்கமான மனநிலையில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாா்ச் மாதம் முதல் ராமாயணம் தொலைக்காட்சித் தொடரை தூா்தா்ஷன் நேஷனல் (டிடி) சேனல் ஒளிபரப்பு செய்து வருகிறது.
ராமாயணம் தொடா், மாா்ச் 28-ஆம் தேதி முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் சீதையாக தீபிகா சிகாலியாவும் அனுமனாக தாரா சிங்கும் நடித்து இந்தியா முழுக்கப் புகழ் பெற்றார்கள். ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் ஒளிபரப்பாகும்போது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கும்.
தூா்தா்ஷன் சாா்பில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தத் தொடர், உலக அளவில் மிக அதிகமானோரால் பாா்க்கப்பட்ட தொலைக்காட்சித் தொடா் என்ற உலக சாதனையைப் படைத்திருக்கிறது. ஏப்ரல் 16-ஆம் தேதி இந்த தொடரை உலகம் முழுவதும் 7.7 கோடி போ பாா்த்துள்ளனா். ராமாயணம், மகாபாரதம் தொடர்களை மீண்டும் ஒளிபரப்புவதால் பார்க் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது தூர்தர்ஷன் தொலைக்காட்சி.
இதையடுத்து பிரசார் பாரதி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஷாஷி சேகர், ராமாயணம் தொடரின் வெற்றி குறித்து பேசியதாவது:
ராமாயணம் தொடர் மறுஒளிபரப்பு செய்யப்படுவது குறித்து நான் இணைந்துள்ள வாட்சப் குழுக்கள் கேலி பேசினார்கள். முதலில் இத்தகவலைக் கேட்டவுடன் அவர்கள் சிரித்தார்கள். இன்றைக்கு இதை யார் பார்ப்பார்கள் எனக் கேள்வி எழுப்பினார்கள். இந்திய நாடு என்பது வித்தியாசமானது. ஆங்கிலம் பேசும் மேட்டுக்குடி மக்களை மட்டும் கொண்டது அல்ல இந்தியா. அதை விடவும் பெரியது. பன்முகத்தன்மை கொண்டது என்று அவர்களிடம் கூறவேண்டியதாக இருந்தது. மும்பையில் உள்ள சாகர் குடும்பத்தினரிடமிருந்து தொடரின் டேப்புகளை வாங்கி, டிஜிட்டலுக்கு மாற்ற மிகவும் சிரமப்பட்டோம். அனைவருக்கும் ஏற்ற மாதிரியான தொடராக இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து பார்க்க முடியும் என்பதை ராமாயணம் நிரூபித்துள்ளது என்று கூறியுள்ளார்.