[prisna-google-website-translator]

அரசியல் சுனாமி வரும்: ரஜினி

நான் கொஞ்ச நாட்களுக்கு முன், அரசியலில் புது புள்ளி போட்டேன். அந்த புள்ளி, தற்போது அமைதியாக, யாருக்கும் தெரியாமல், சுழலாக உருவாகி உள்ளது.

இந்த சுழலை தடுக்க முடியாது. அந்த அலை கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் சுனாமியாக மாறும்,” என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.

‘சாணக்யா’ இணையதள சேனல் முதலாம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னையில், நடந்தது. அதில், ரஜினி பேசியதாவது: அரசியலில் அலை முக்கியம். அதனால் தான், அலை உண்டாக வேண்டும்; இயக்கம் உருவாக வேண்டும் என்றேன். உடனே, ‘இவர் வர மாட்டாரா’ என, கேட்கின்றனர்.

சினிமாவில் இருந்து வந்த, எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவர், 25 ஆண்டுகள், தி.மு.க.,வில் இருந்தார்; ரொம்ப நல்லவர்; நிறைய உதவிகள் செய்துள்ளார். கருணாநிதி முதல்வராக, அவரும் காரணம். பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கினர்.

அவர் மக்கள் மத்தியில் சென்று, ‘என்ன தவறு செய்தேன்; கணக்கு கேட்டது தப்பா’ என, கேட்டார். அனுதாப அலை வீசியது. முதல் முறையாக, தேர்தலில் வெற்றி பெற்றார்.
அடுத்து, 1991ல், காங்கிரஸ் கட்சியோடு, ஜெ., கூட்டணி வைத்தார். ராஜிவ் படுகொலையால், தி.மு.க.,விற்கு எதிரான அலை வீசியது. முதன் முறையாக, ஜெ., வெற்றி பெற்றார்.

ஆந்திராவில், ஒரே ஆண்டில், மூன்று முதல்வரை, இந்திரா மாற்றினார். ‘ஆந்திராவை தெலுங்கர் ஆள வேண்டும்’ என, என்.டி.ராமராவ் கட்சி துவக்கினார். அலை உருவானது; அவர் முதல்வரானார்.எனவே, அலை முக்கியம்.
நான் கொஞ்ச நாள் முன், அரசியலில் புது புள்ளி போட்டேன். அந்த புள்ளி, தற்போது அமைதியாக, யாருக்கும் தெரியாமல், சுழலாக உருவாகி உள்ளது; இந்த சுழலை தடுக்க முடியாது. இது, மக்கள் மத்தியில் உருவான சுழல். அதை, வலுவான அலையாக மாற்ற, ரஜினி வந்தாக வேண்டும்; ரஜினி ரசிகர்களும் வர வேண்டும்.

அந்த அலை, கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் சுனாமியாக மாறும். அது, ஆண்டவன் கையில் உள்ளது. அந்த ஆண்டவன், மக்களாகிய நீங்கள் தான்; நீங்கள் தான், அதை உருவாக்க வேண்டும்; அது உருவாகும். அதிசயம் நிகழும். 

Leave a Reply