[prisna-google-website-translator]

மனிதனாயிரு… என் நெஞ்சில் நிழலாடுகிறது: இளையராஜா உருக்கம்!

கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான காமகோடியான் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிக்கத்தக்க பாடல்களை எழுதி ரசிகர்களிடம் தனியிடம் பிடித்தவர் பாடலாசிரியரான கவிஞர் காமகோடியான். எம்.எஸ்.வி தொடங்கி இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா, பரத்வாஜ் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியுள்ளார்.

76 வயதான காமகோடியான் புதன்கிழமை நேற்று இரவு 8.15 மணி அளவில்காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காமகோடியான் மனத்துக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்த இசைஞானி இளையராஜா, தாம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்… “கவிஞர் காமகோடியான் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு ‘வரப்பிரசாதம்’ திரைப்படத்தில் வேலை செய்யும்போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப் பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார்.

அவர் நம்முடைய எம்.எஸ்.வி அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். மேடை கச்சேரிகளில் கவிஞர் காமகோடியான் எழுதிய ‘மனிதனாயிரு’ என்ற தனிப்பாடலை எம்.எஸ்.வி அண்ணா பாடியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. என்னுடைய இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply