ஜகா என்ற திரைப்படத்துக்கான போஸ்டர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. அதில், ஹிந்துக் கடவுள் சிவபெருமானை கிண்டல் செய்வது போல், கொரோனா செட்டப்களுடன் போஸ்டர் இருந்தது. இது ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து இயங்கங்களுக்கிடையே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே சினிமா துறையினர் ஹிந்துவிரோத காட்சிகளை அமைக்கின்றார்கள் என்ற கருத்தோட்டம் உள்ள நிலையில், இந்த போஸ்டருக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து தமிழர் கட்சி என பல தரப்பினரும் எதிர்த்து கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர். இதை அடுத்து, தங்களது செயலுக்கு வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ள இந்தப் படத்தின் இயக்குனர் ரா.விஜயமுருகன் ஓர் அறிக்கையினையும் வெளியிட்டார்.
அதில், ஓம் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் ஜகா. நேற்று எங்களது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அது பலரின் விவாதத்துக்கு உள்ளானது. அதுகுறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை.
எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கீஸ்! பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டு விட்டுத்தான் படப்பிடிப்பை தொடங்கினோம். அப்படியிருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா? covid-19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறக் கூடாது என கடவுளே சொல்வது போன்றது தான் அந்த போஸ்டர்.
சக மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுளை அவமதிக்கவில்லை. அதுபோன்ற எண்ணம் ஒருக்காலும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் தேடும் விருப்பம் எங்கள் குழுவினருக்கு துளியும் இல்லை.
இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனதை புண்படுத்துவது அறிந்து வருந்துகிறோம் அதற்காக மன்னிப்பு கோருவதோடு, கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி.. என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பிற்கு பணிந்து “ஜகா ” திரைப்படக்குழு மன்னிப்பு கோரியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன் அறிக்கையில் தெரிவித்தார்.
அதில், ஜகா திரைப்படத்தில் சிவபெருமானை கொரோனா நோயாளி போன்று சித்தரித்துள்ள காட்சிகளை நீக்கிவிட்டு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம் என இந்து மக்கள் கட்சியின் சார்பில் படக்குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். இந்நிலையில் திரைப்படத்தின் இயக்குனர் விஜயமுருகன் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளார். இந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பின் அடிப்படையில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட “ஜகா” திரைப்பட இயக்குனர் விஜயமுருகனுக்கு பாராட்டுக்கள்… என்று தெரிவித்தார்.
முன்னதாக, ‘கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் சிவபெருமானுக்கு முக கவசம் அணிவித்து, ஹிந்து மத நம்பிக்கையை அவமதிக்கும், ஜகா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்’ என ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜகா’ என்ற திரைப்படத்தை விஜயமுருகன் தயாரித்து, இயக்கி உள்ளார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் கரு நாகராஜனின் மகன் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின், ‘பர்ஸ்ட்லுக்’ போஸ்டரை நடிகை நமீதா வெளியிட்டுள்ளார். படத்தில், கொரோனா தொற்று சமயத்தில் கோவில்கள் எல்லாம் மூடப்பட்டு, கடவுள் சிலைகளுக்கு முக கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய காட்சிகளையும் கதையாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
கடவுள் சிவபெருமான் முக கவசம் அணிந்து, ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து சுவாசிப்பது போன்ற, ‘பர்ஸ்ட் லுக்’ படத்தை வெளியிட்டு, உள்நோக்கத்தோடு ஹிந்து மதநம்பிக்கையை அவமதிப்பது கண்டத்துக்குரியது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில், ஹிந்து மத கடவுள்களை மட்டுமின்றி, எந்த மத கடவுள்களை அவமதிக்கும் விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு, சினிமா வரையறை திருத்தச் சட்டத்தை கொண்டு வர இருப்பதை, இதுபோன்ற சினிமாக்காரர்கள் எதிர்ப்பதற்கான காரணம் இது தான். இந்த திரைப்பட குழுவினர் மீது, போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். போஸ்டரை தடை செய்ய வேண்டும்… என்று அவர் கூறியுள்ளார்.
அது போல், தமிழ்நாட்டில் இந்தப் படம் ஓட வேண்டுமா ஓட வேண்டும்மென்றால் இந்த படத்திற்கு போஸ் கொடுத்த இந்த நடிகர் கைது செய்யப்படவேண்டும் இந்த இயக்குனர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்… ஈசனை இழிவாக சித்தரித்து இந்தப் படம் ஓடும் என்று கனவிலும் நினைக்காதே
படக் குழுவினருக்கு எச்சரிக்கை என்று டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் கே.சி.திருமாறன்.