- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்
தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரி (66) இன்று காலமானார்
திரைப்பட பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரி இன்று காலமானார். தெலுங்கு சினிமா பாடல்களுக்கு உலகளாவிய இலக்கிய மதிப்பு பெற்றுத்தந்த பெருமை பாடலாசிரியர் சிரிவென்னெல சீதாராம சாஸ்திரியையே சேரும்.
அண்மையில் நிமோனியாவால் அவதிப்பட்டு வந்ததால் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் போது நவம்பர்30 செவ்வாயன்று மாலை 4 மணி ஏழு நிமி. க்கு காலமானார்.
அவருடைய மறைவால் திரையுலகில் சோகம் சூழ்ந்துள்ளது. கே விஸ்வநாத் இயக்கத்தில் சிரிவென்னெல என்ற திரைப்படத்தில் ‘விதாத தலபுன’ என்ற பாடல் மூலம் திரையுலகில் நுழைந்த சீதாராம சாஸ்திரி அந்த சினிமாவின் பெயரையே தன்னுடைய பெயரின் முன்னால் சேர்த்துக்கொண்டு சிரிவென்னல சீதாராம சாஸ்திரி என்றானார்.
800க்கும் மேலாக திரைப்படங்களில் சுமார் மூவாயிரம் பாடல்கள் எழுதியுள்ளார். அவருடைய இதய கமலத்தில் இருந்து எழுந்த எண்ணங்கள் எழுத்துக்களாக மாறி ரசிகர்களின் செவிகளை அடைந்து அவர்களை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தின.
திரையுலகில் அவர் செய்த சேவைக்கு அடையாளமாக மத்திய அரசு 2019இல் பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.
செம்போலு சீதாராம சாஸ்திரி 1955 மே 20ஆம் தேதி விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனகாபல்லி மண்டலத்தில் டாக்டர் சிவி யோகி, சுப்பலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை அனகாபல்லியில் படித்தார்.
காகிநாடாவில் இன்டர்மீடியட் , ஆந்திர விஸ்வகளா பரிஷத்தில் பிஏ படித்துத் தேறினார். அவர் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்று தந்தையின் ஆலோசனை இருந்தது. ஆனால் இவருக்கு அதில் விருப்பமில்லை. பிஎஸ்என்எல் வேலை கிடைத்ததால் ராஜ மகேந்திரவரத்தில் சில காலம் பணிபுரிந்தார்
சீதாராம சாஸ்திரிக்குள் ஒரு கவிஞன் இருக்கிறார் என்பதை முதல் முதலாக கண்டறிந்தவர் அவருடைய சகோதரர். சிறுவயதிலிருந்தே சீதாராம சாஸ்திரிக்கு பாட்டு பாட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஓரிரு முறை முயற்சித்து பார்த்து அது தனக்கு சரிவரவில்லை என்று ஒதுங்கிவிட்டார்.
ஆனால் புதுப்புது சொற்களோடு எப்போதும் ஏதோ ஒரு கவிதையை இயற்றி பாடிக் கொண்டிருந்த தன் சகோதரனிடம், “அண்ணா! உனக்கு கவிதை நன்றாக வருகிறது. அதற்கு முயற்சி செய்” என்று கூறினாராம் அதன்பிறகு ஏவி கிருஷ்ணாராவு, சரத்பாபு இவர்களோடு சேர்ந்து இலக்கிய கூட்டங்களுக்குச் செல்ல தொடங்கினார். அப்போது சீதாராம சாஸ்திரியை அனைவரும் பரணி என்று அழைத்தார்கள்.
எம்ஏ படித்து வரும்போது இயக்குனர் கே விஸ்வநாத்திடம் இருந்து சினிமாவிற்கு பாட்டு எழுத வேண்டும் என்று அழைப்பு வந்தது. சிரிவென்னெல படம் 1986ல் கர்நாடக சக்ங்கீதத்திற்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டது. அவ்வாறு சிரிவென்னெல சினிமாவில் தொடங்கி தெலுங்கு ரசிகர்களின் மனதில் நிலைத்த முத்திரை பதித்த பாடலாசிரியராக தொடர்ந்து வந்தார். சிரிவென்னல திரைப்படத்தில் ‘விதாத தலபுன’ என்ற பாடலோடு ஆரம்பித்த சீதாராம சாஸ்திரியின் பாடல் தோட்டத்திலிருந்து பல அழகான ரோஜாக்கள் மலர்ந்தன.
பலப்பல பாடல்கள் அவருடைய இதய பெட்டகத்தில் இருந்து வெளிவந்து சிறந்த முத்துக்களாக மக்களைக் கவர்ந்தன. சீதாராம சாஸ்திரியை பல விருதுகள் வந்து குவிந்து கௌரவித்தன. முதல் முதலில் எழுதிய விதாத தலபுன என்ற பாடலுக்கு நந்தி அவார்டு பெற்றார். அவ்வாறு மொத்தம் பதினோரு முறை நந்தி அவார்டு பெற்றுள்ளார் சிறந்த பாடலாசிரியராக நான்கு முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் மேலும் அவர் பெற்ற விருதுகளுக்கும் பெருமைகளுக்கும் அளவே இல்லை.
இயக்குனர் கே விஸ்வநாத்லின் ஆஸ்தான கவிஞராக விளங்கினார்.
ஆறு ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிதாராம சாஸ்திரிக்கு பாதி நுரையீரலை நீக்கியிருந்தனர். இந்த மாதம் 24ம் தேதி நிமோனியா பாதிப்பால் ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்பெக்ஷன் முதிர்ந்த நிலையில் 4நாட்களாக எக்ஸ்மோ கருவியில் இருந்தார்.
சீதாராம சாஸ்திரியின் மறைவு தெலுங்கு இலக்கியத்திற்கும் திரை உலகுக்கும் தீராத இழப்பு என்று இரு தெலுங்கு மாநில முதல்வர்கள் கேசிஆர், ஜகன், வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பல பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.